/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உதயநிதி பிறந்த நாள் விழாவுக்கு மாணவர்களிடம் வசூல்!
/
உதயநிதி பிறந்த நாள் விழாவுக்கு மாணவர்களிடம் வசூல்!
உதயநிதி பிறந்த நாள் விழாவுக்கு மாணவர்களிடம் வசூல்!
உதயநிதி பிறந்த நாள் விழாவுக்கு மாணவர்களிடம் வசூல்!
PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

“குவிஞ்ச விண்ணப்பங் களால திக்குமுக்காடி போயிருக்காருங்க...” என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
“என்ன வேலைக்கு வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழகம் முழுக்க, கூட்டுறவு துறை நடத்துற ரேஷன் கடைகள்ல விற்பனையாளர், எடையாளர்னு, 2,500 காலியிடங்கள் இருக்குதுங்க... நேர்முக தேர்வு நடத்தி, மதிப்பெண் அடிப்படையில பணி நியமனம் வழங்க போறாங்க...
“இதுக்கு, 3 லட்சம் பேர் விண்ணப்பிச்சிருக்காங்க... இவங்க எல்லாம், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்னு சிபாரிசு பிடிக்கிறாங்க...
“இந்த மாதிரி சிபாரிசு கடிதங்கள், துறையின் அமைச்சர் பெரியகருப்பன் அலுவலகத்துல மலை போல குவிஞ்சிடுச்சுங்க... இதுக்கு இடையில, லோக்கல் அளவுல சிலர் வசூல் பண்ணவும் பார்க்கிறாங்க...
“எல்லாரது சிபாரிசையும் ஏத்துக்க முடியாதுங்கிறதால, இது சம்பந்தமா முதல்வரிடம் ஆலோசனை நடத்தி, அவர் சொல்றபடி பணியிடங்களை நிரப்ப அமைச்சர் முடிவு பண்ணிட்டாருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“புகார் குடுக்க வர்றவங்களை அலைக்கழிக்கிறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“சென்னை சிட்டியில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்கள்ல, பொதுமக்களின் புகார்கள் மீது, சி.எஸ்.ஆர்., அல்லது, எப்.ஐ.ஆர்., போடுறதுக்கு முன்னாடி, உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரணும் அல்லது அவங்களிடம் ஒப்புதல் வாங்கிட்டு தான் போடணும்னு திடீர் உத்தரவு போட்டிருக்காங்க பா...
“இதனால, புகார்கள் குடுக்க போற பொதுமக்கள், அலைக்கழிக்கப்படுறாங்க... ஏன் இந்த முடிவுன்னு தெரியாமலும், பொதுமக்களுக்கு பதில் தர முடியாமலும் ஸ்டேஷன் போலீசார் திண்டாடுறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“மாணவ - மாணவியரிடம் கட்டாய வசூல் நடத்தியிருக்கா ஓய்...” என, கடைசி மேட்டருக்கு வந்தார் குப்பண்ணா.
“அப்ப, ஆளுங்கட்சியினரா தான் இருப்பாவ... மேல சொல்லும்...” என்றார், அண்ணாச்சி.
“தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி பகுதியில் இருக்கற தனியார் பள்ளியில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை கட்டாயப்படுத்தி ஆளுங்கட்சியினர் கொண்டாடியிருக்கா...
“விழாவுல, 20 பள்ளி களை சேர்ந்த, 1,000, மாணவ - மாணவியருக்கு யோகா, ஸ்கேட்டிங் போட்டிகளை, மதிய உச்சி வெயில்ல நடத்தி, பலரை மயக்கம் அடைய வச்சுட்டா ஓய்...
“விழாவை சும்மா நடத்தல... இதுக்காக, மாணவ - மாணவியரிடம் தலா, 500 ரூபாய்னு கட்டாயமா வசூல் பண்ணியிருக்கா... எல்லாம், மாவட்ட தி.மு.க., நிர்வாகி ஏற்பாட்டுல தான் நடந்திருக்கு ஓய்...
“போட்டி முடிஞ்சு, உணவு பொட்டலங்கள் வழங்கற இடத்துல தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மாணவர்கள் எல்லாம் நெரிசல்ல மாட்டிண்டா... இவ்வளவு ரணகளத்துலயும், உதயநிதிக்கு வாழ்த்து கோஷம் போடும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தியிருக்கா ஓய்...
“இதனால, 'கட்சி நிகழ்ச்சிக்கு மாணவர்களிடம் வசூல் நடத்தி, வெயில்ல நிற்க வச்சதும் இல்லாம, சரியா உணவும் தராம விட்டதால, பள்ளி நிர்வாகம் மேல நடவடிக்கை எடுக்கணும்'னு கலெக்டரிடம், பா.ஜ.,வினர் புகார் குடுத்திருக்கா...
“கலெக்டர் தரப்பு நடவடிக்கை எடுக்காததால, அடுத்து கவர்னருக்கு புகார் அனுப்ப முடிவு பண்ணியிருக்கா ஓய்...” என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.