/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இலவச பட்டாவுக்கு நடந்த வசூல் வேட்டை!
/
இலவச பட்டாவுக்கு நடந்த வசூல் வேட்டை!
PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM

'அரசியல்வாதிகளை அனுசரிச்சு போகாதது தான், அதிரடி மாற்றத்துக்கு காரணமுங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரை, எங்கவே மாத்திட்டா...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மதுரை மாநகராட்சி கமிஷனரா, மூணு மாசத்துக்கு முன்னாடி வந்தவர், 28 வயசான மதுபாலன்... பொதுவா, மதுரை மாநகராட்சி கமிஷனரா இருக்கிறவரை வேறு துறைக்கு அல்லது சென்னை மாநகராட்சி இணை கமிஷனரா தான் நியமிப்பாங்க...
''ஆனா, மதுபாலனை சமீபத்துல, சிறிய மாநகராட்சியான துாத்துக்குடிக்கு துாக்கி அடிச்சுட்டாங்க... மதுரைக்கு வர்ற அதிகாரிகள் யாரா இருந்தாலும், அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் தரப்பை அனுசரிச்சு போனா தான் நீடிக்க முடியும்...
''அதுவும் இல்லாம, மேயருடனும் மதுபாலனுக்கு ஒத்து போகலை... ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க, அனுமதி இல்லாத பிளான்களுக்கு எல்லாம் அப்ரூவல் கேட்டு நச்சரிச்சும், மதுபாலன் தரலைங்க...
''புதுசா போட்ட தார் ரோடுகளை கையால சுரண்டி பார்த்து, ஒப்பந்ததாரர்களை காய்ச்சி எடுத்திருக்காருங்க... இது எல்லாம் சேர்ந்து, மூணே மாசத்துல மதுபாலனை மாத்திடுச்சுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்பதை, தலைமை ஆசிரியர் நிரூபிச்சிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சென்னை, கே.கே.நகர்ல, பாரம்பரியமான அரசு மேல்நிலை பள்ளிக்கு தலைமை ஆசிரியரா சமீபத்துல வந்தவர், முதல் வேலையா, பள்ளியின் அனைத்து வங்கி கணக்குகள்லயும் இருந்த தொகையை, தன் மனைவியின் வங்கி கணக்குக்கு மாத்திட்டாரு பா...
''பல மாணவர்களுக்கு தேவையில்லாம, 'டிசி' வழங்கி, பள்ளியின் சேர்க்கை விகிதத்தை குறைச்சுட்டாரு... சக ஆசிரியர்களிடமும் சண்டை கோழியா இருந்திருக்காரு பா...
''பள்ளிக்கு தொண்டு நிறுவனங்கள் தந்த நிதிக்கும் முறையான கணக்கு இல்லை... இது தொடர்பா, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அதே பள்ளியில பணியாற்றும் 62 ஆசிரியர், ஆசிரியைகள் கையெழுத்து போட்டு புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை பா...
''வெறுத்து போன ஆசிரியர்கள், 'தலைமை ஆசிரியர் பள்ளிக்குள்ளயேவரக்கூடாது'ன்னு வெளியே அனுப்பிட்டாங்க... அவரும் அசராம, 'லாங் லீவ்'ல, சொந்த ஊருக்கு கிளம்பிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''இலவச பட்டாவுக்கு நடந்த வசூல் வேட்டையை கேளுங்கோ ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டத்துல, சமீபத்தில் வருவாய் துறை சார்பில், பட்டா மேளா நிகழ்ச்சி நடந்துது... அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 2,000 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் ஓய்...
''பட்டாக்களை வழங்கறதுக்கு முன்னாடி, பயனாளிகளிடம் பல ஆயிரம் ரூபாயை, அந்தந்த வி.ஏ.ஓ.,க்கள் மூலமா வசூல் பண்ணியிருக்கா... அந்தந்த ஊர் தலைவர்களும், தங்களது பங்குக்கு சில ஆயிரங்களை வசூல் பண்ணிட்டா ஓய்...
''இதுல, பல லட்சங்கள் வசூல் ஆகிடுத்து... இதை, தாலுகா அலுவலக உயர் அதிகாரிகள் பலரும் பங்கு போட்டுண்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ஞானவேல், பரஞ்ஜோதி, ஜெயவேல் எல்லாம் வராங்க... டீ போடுங்க நாயரே...'' என்றபடியே அந்தோணி சாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

