/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தனியார் பள்ளிகளுக்கு இலக்கு வைத்து வசூல் வேட்டை!
/
தனியார் பள்ளிகளுக்கு இலக்கு வைத்து வசூல் வேட்டை!
PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, “எந்த வேலையும் நடக்கல பா...” என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எந்த துறையில ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“சென்னை மாநகராட்சியின், 14வது மண்டலமா பெருங்குடி இருக்குது... மொத்தம், 12 வார்டுகள் அடங்கிய இந்த மண்டலத்துல பல லட்சம் மக்கள் வசிக்கிறாங்க... ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்குது பா...
“இங்க மண்டல அலுவலர், உதவி கமிஷனர், செயற்பொறியாளர், கட்டட பணி உதவி செயற்பொறியாளர், பூங்காக்கள் துறை உதவி செயற்பொறியாளர்னு பல முக்கியமான பதவிகள், ஒரு வருஷத்துக்கும் மேலா காலியா கிடக்குது...
“ஒரு செயற்பொறியாளரே, மண்டல அலுவலராகவும், உதவி கமிஷனராகவும் மூணு பணியிடங்களை பார்க்க வேண்டியிருக்குது பா...
“இதனால, இந்த மண்டலத்துல இருக்கிற பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் எதையும் செய்து தர முடியல... 'காலியா இருக்கிற அனைத்து பதவிகளுக்கும் அதிகாரிகளை நியமிக்கணும்'னு மக்கள் புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“கட்சிக்காரர் போலவே நடந்துக்கறார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“சேலம் மாவட்டம், சங்ககிரியில் பிரசித்தி பெற்ற, சோமேஸ்வரர் திருக்கோவில் இருக்கு... இங்க, அறநிலையத் துறை அதிகாரியா இருக்கறவர், எல்லாத்தையும் காதும் காதும் வச்ச மாதிரி ரகசியமாவே செய்யறார் ஓய்...
“கோவில் அதிகாரியா இருந்தாலும், பக்கா தி.மு.க., பிரமுகர் போலவே நடந்துக்கறார்... கோவில் திருவிழாக்கள் சம்பந்தமான ஆலோசனை கூட்டங்களுக்கு, தி.மு.க., நிர்வாகிகளை மட்டுமே கூப்பிடறார் ஓய்...
“அ.தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சிகள், ஊர்ல இருக்கற முக்கிய புள்ளிகளை கூப்பிடறதே இல்ல... அதிகாரி பற்றி, முதல்வர் வரைக்கும் உள்ளூர் புள்ளிகள் புகார் அனுப்பியிருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“சங்கரன், இங்கன உட்காரும்...” என, நண்பருக்கு இடம் தந்த பெரியசாமி அண்ணாச்சியே, “தனியார் பள்ளிகளிடம் கட்டாய வசூல் நடக்கு வே...” என்றார்.
“எதுக்குங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“பள்ளிக்கல்வித் துறை சார்பில், தமிழகத்தை ஏழு மண்டலமா பிரிச்சு, 'பெற்றோரை கொண்டாடுவோம்' என்ற தலைப்புல மாநாடுகள் நடத்தினாவ... கோவை மண்டல மாநாட்டில், திருப்பூர் மாவட்ட அரசு, தனியார் பள்ளிகள் பங்கேற்றுச்சு வே...
“இந்த சூழல்ல, திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக், சுயநிதி பள்ளி நிர்வாகிகளை சமீபத்துல கூப்பிட்டு, அவசர கூட்டம் நடத்தியிருக்காவ...
“அப்ப, 'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாடு குறித்து சிறப்பிதழ் வெளியிட போறோம்... அதுல, உங்கள் பள்ளியின் பங்களிப்பு கட்டாயம் இருக்கணும்'னு சொல்லி, வசூலுக்கு இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்காவ வே...
“ஒவ்வொரு பள்ளிக்கும், குறைந்தபட்சம் 20,000 ரூபாய்னு, 'பிக்ஸ்' பண்ணி குடுத்திருக்காவ... 'இந்த தொகையை தராத பள்ளிகளின் அங்கீகாரம் மீது கை வைப்போம்'னு மிரட்டலும் விடுத்திருக்காவ வே...
“இதனால, கேட்ட தொகையை குடுக்க வேண்டிய சூழல், பள்ளி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டிருக்கு... 'இப்படி குடுத்துட்டு, அவங்க சும்மா இருப்பாங்களா...
“கல்வி கட்டணத்தை ஏத்தி, கடைசியில பெற்றோர் தலையில தான் வந்து விடியும்'னு கல்வித் துறை ஊழியர்களே புலம்புதாவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

