மின்வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை!
மின்வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை!
PUBLISHED ON : செப் 01, 2026 12:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, “இடமாறுதல்ல பாரபட்சம் காட்டுறாங்க பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“கூட்டுறவு துறையின் கீழ், சென்னையில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் எனும் டி.யு.சி.எஸ்., இயங்குது... இந்த சங்கம் சார்பில் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகம், 'காஸ் ஏஜன்சி'கள் எல்லாம் நடத்துறாங்க பா...
“சங்கத்தில் இருக்கிற பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் இடமாறுதல்ல பாரபட்சம் காட்டுறாங்க... தங்களுக்கு வேண்டியவங்களுக்கு மட்டும், விதிகளை மீறி இடமாறுதல் குடுக்கிறாங்க பா...
“சங்கத்தின் விற்பனை பிரிவுகள்ல மாதாந்திர கணக்கை முடிக்காம, 'லேட்' பண்றதால, 'பைல்'கள் தேங்கி, சங்கத்துக்கு நிதியிழப்பு ஏற்படுது... 'இது சம்பந்தமா விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு, கூட்டுறவுத் துறை செயலருக்கு, ஊழியர்கள் பலரும் புகார் அனுப்பியிருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“பணத்தையும் வாங்கிட்டு, மிரட்டவும் செய்தாரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.
“துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கீழமுடிமண் கிராமம் இருக்கு... இங்க இருக்கிற வி.ஏ.ஓ., ஒருத்தர், புறம்போக்கு நிலங்கள்ல வீடு கட்டி வசிக்கிறவங்களுக்கு, பட்டா வாங்கி தர்றதா, பல ஆயிரம் ரூபாய் வசூல் பண்ணிட்டாரு வே...
“ஆனா, பணத்தை வாங்கி ஒரு வருஷமாகியும், பட்டா தரல... இதனால, பணம் குடுத்தவங்க திருப்பி கேட்டு நெருக்கடி தரவே, 'உங்களிடம் வாங்கிய பணத்தை அதிகாரிகளுக்கு குடுத்துட்டேன்'னு கையை விரிச்சிட்டாரு வே...
“அதுவும் இல்லாம, 'சும்மா பணம் கேட்டு தொந்தரவு செஞ்சா, ஆக்கிரமிப்புன்னு சொல்லி உங்க எல்லாரையும் காலி பண்ண வச்சிடுவேன்'னும் மிரட்டியிருக்காரு... அவரது மிரட்டல் சம்பந்தமான ஆடியோ ஆதாரத்துடன், தாலுகா அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் குடுத்திருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“கணபதி, இரும் சேர்ந்து போலாம்...” என்ற குப்பண்ணாவே, “சம்பளத்தை, 'கட்' பண்ணிடுவேன்னு எச்சரிக்கை விடுத்திருக்கார் ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், சமீபத்துல கலெக்டர் ஆபீஸ்ல நடந்துது... இதுக்கு, 'எல்லா துறைகள்ல இருந்தும் மாவட்ட உயர் அதிகாரிகள் கலந்துக்கணும்'னு, கலெக்டர் மணீஷ் நாரணவாரே உத்தரவு போட்டிருந்தார் ஓய்...
“ஆனா, நெடுஞ்சாலை, மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்காம, மூன்றாவது நிலை அதிகாரிகளை அனுப்பிட்டா... 'தத்கல்' விவசாய மின் இணைப்பு தொடர்பா விவசாயிகள் கேள்வி கேட்டப்ப, 'மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் எங்கே'ன்னு கலெக்டர் கேட்டார் ஓய்...
“அதுக்கு, 'மீட்டிங் இருக்கிறதால அவர் வரல'ன்னு பதில் வந்திருக்கு... 'டென்ஷன்' ஆன கலெக்டர், 'மாசம், 2 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் அதிகாரி, விவசாயிகளுக்காக மாசத்துல நாலு மணி நேரம் கூட ஒதுக்க மாட்டாரா...? 'வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்'னு சொல்லிட்டு, குறை தீர் கூட்டத்தை, 'கட்' அடிக்கிறது எனக்கு தெரியும்... இப்படி செஞ்சா, அவங்க சம்பளத்தை, 'கட்' பண்ண வேண்டியிருக்கும்'னு பொரிஞ்சு தள்ளிட்டார் ஓய்...” என முடித்தார் குப்பண்ணா .
“ஆங்... இன்னொரு விஷயம்... நேத்து நாம, 300 கோடி ரூபாய், மின்வாரிய, 'சி.சி.டி.வி.,' டெண்டர் சம்பந்தமா பேசினோமே... அதுபோல எதுவும் நடக்கலையாம் ஓய்...” என, குப்பண்ணாவே கூறிவிட்டு கிளம்ப, நண்பர்கள் பின்தொடர்ந்தனர்.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
