/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தி.மு.க.,வினருக்கு 'தோழர்கள்' எச்சரிக்கை!
/
தி.மு.க.,வினருக்கு 'தோழர்கள்' எச்சரிக்கை!
PUBLISHED ON : பிப் 14, 2024 12:00 AM

''சந்தா சேர்க்க, இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்காங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீக்கு ஆர்டர் கொடுத்தார், அன்வர்பாய்.
''எந்த பத்திரிகைக்கு வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை தொகுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்புல, 'தமிழரசு' என்ற பெயர்ல, ஆங்கிலம் மற்றும் தமிழில் மாத இதழ் வெளியிடுறாங்க பா...
''ஒரு புத்தகம் 30, வருஷ சந்தா 360, ஆயுள் சந்தா 3,600 ரூபாய்னு நிர்ணயம் பண்ணியிருக்காங்க... தமிழகம் முழுக்க பணியாற்றும் பி.ஆர்.ஓ.,க்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களிடமும், தமிழரசு இதழுக்கு ஏற்கனவே சந்தா வாங்கிட்டாங்க பா...
''இந்த சூழல்ல, ஒவ்வொரு மாவட்ட பி.ஆர்.ஓ.,வும் 80 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை, தமிழரசு இதழுக்கு சந்தா பிடிச்சு குடுக்கணும்னு இலக்கு குடுத்திருக்காங்க...
''இது போக, அரசின் சாதனைகளை விளக்கி, முதல்வரால் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டிருக்காங்க... இந்த புத்தகங்களையும் விற்று தரணும்னு உத்தரவு போட்டிருக்காங்க பா...
''பி.ஆர்.ஓ.,க்கள், அரசு துறை அலுவலகங்கள்ல சந்தா பிடிக்க அலையுறாங்க... இவங்களை பார்த்தாலே, அதிகாரிகள் தலைதெறிக்க ஓடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''முன்னாள் அமைச்சர்களுக்கு வலை வீசுறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''பா.ஜ.,வுடன் கூட்டணியை முறிச்சிட்டதால, அதிருப்தியில இருக்கிற நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர்களை பா.ஜ.,வுக்கு இழுக்க, தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில, தனி குழு பேச்சு நடத்திட்டு இருக்குதுங்க...
''அதே நேரம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., மாஜி அமைச்சர், அவரது வாரிசை, பா.ஜ.,வுல சேர்க்கவும் இந்த குழு அணுகியிருக்குதுங்க...
''அவங்களிடம், 'கட்சியில எந்த முக்கியத்துவமும் இல்லாம, நாங்க அதிருப்தியா தான் இருக்கோம்... ஆனாலும், லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் எங்களது நிலைப்பாட்டை சொல்றோம்'னு அப்பாவும், பிள்ளையும் சொல்லிட்டாங்களாம்...'' என்றார், அந்தோணிசாமி.
''கவுன்சிலர்கள் மாமூல் வசூலை கண்டிச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊர் விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூரில் ரோட்டோர கடை வியாபாரிகளிடம், மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் மாமூல் வசூலிக்கறா... ஆளுங்கட்சி கவுன்சிலர் மற்றும் வார்டு நிர்வாகிகள் சிலர், ரோட்டோர கடைகள்ல தினமும், 100 ரூபாய் வசூலிச்சுண்டு இருந்தா ஓய்...
''இப்ப, விலைவாசி ஏறிடுத்தோன்னோ... அதனால, இனிமே, 150 வீதம் வாரம், 1,000 ரூபாய் தரணும்னு கேட்டிருக்கா ஓய்...
''ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூ., தோழர்களிடம் வியாபாரிகள் புகார் தெரிவிச்சிருக்கா... அவாளும், இதை கண்டிச்சு, மாநகராட்சி ஆபீஸ் முன்னாடி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா...
''அதோட, 'இனியும், மாமூல் வசூலை நிறுத்தலைன்னா, வசூல் கவுன்சிலர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு, தொடர் போராட்டம் நடத்துவோம்'னு எச்சரிச்சிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

