/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஒன்றிய பணியாளர்கள் நியமனத்தில் ஊழல்!
/
ஒன்றிய பணியாளர்கள் நியமனத்தில் ஊழல்!
PUBLISHED ON : ஜன 09, 2024 12:00 AM

''கோவிலுக்கு பக்கத்துல, 'டாஸ்மாக்' கடையை தெறந்துட்டா ஓய்...'' என, விரக்தியுடன் விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை- - திருத்தணி நெடுஞ்சாலையில், ஆவடி அருகே பட்டாபிராம்ல, பழமையான ஸ்ரீதரப்பெருமாள் கோவில் இருக்கோல்லியோ... இந்த கோவிலக்கு பக்கத்துல, போன மாசம் புதுசா டாஸ்மாக் கடையை தெறந்துட்டா ஓய்...
''இதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சேர்ந்து ஆர்ப்பாட்டம் பண்ணா... அங்க வந்த பட்டாபிராம்போலீசார், 'சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, தீர்வு தேடுங்கோ'ன்னு சொல்லிட்டு போயிட்டா ஓய்...
''ஏற்கனவே இந்த பகுதியில, ரெண்டு டாஸ்மாக் கடைகள் இருந்துது... இதுல, கோவிலுக்கு பக்கத்துல இருந்த கடையை, பொதுமக்களின் தொடர் போராட்டங்களால், 2010ல அடைச்சுட்டா ஓய்...
''இப்ப, 14 வருஷம் கழிச்சு அதே பகுதியில மறுபடியும் கடையை திறந்து, 'சரக்கு' ஊத்தி குடுத்துண்டு இருக்கா... மார்கழி மாத பூஜைகளுக்காக கோவிலுக்கு வர்ற பக்தர்கள் வேனைப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தே.மு.தி.க.,வினரை தன் பக்கம் இழுக்க, கில்லி பட நடிகர் காய் நகர்த்துதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஏற்கனவே அவரும் அரசியல் கட்சி துவங்குற ஐடியால இருக்காருல்ல...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆமா... ஐதராபாத்ல ஷூட்டிங்ல இருந்த கில்லி நடிகர், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த, ராவோட ராவா சென்னைக்கு ஓடி வந்தாரே... விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர், கண்ணீர் விட்டு அழுதாரு வே...
''அதே மாதிரி அஞ்சலி செலுத்தி, கில்லியின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்லயும், விஜயகாந்த் படத்தை பெருசாகவும், கில்லி படத்தை சின்னதாகவும் போட்டிருந்தாவ...
''அதுவும் இல்லாம, ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச, செந்துாரபாண்டி படத்தின் காட்சிகளை, சாமர்த்தியமா எடிட் பண்ணி, 'கேப்டனுக்கு அப்புறம் இந்த கில்லி தான்'னு சமூக வலைதளங்கள்ல அவரது ரசிகர்கள் பிரசாரத்தை துவங்கியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஒன்றிய பணியாளர்கள் நியமனத்துல முறைகேடு நடந்திருக்குது பா...'' என்ற அன்வர் பாயே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார், வேப்பூர், பெரம்பலுார், வேப்பந்தட்டை ஆகிய நாலு யூனியன் ஆபீஸ்கள்ல காலியா இருந்த ஆறு அலுவலக உதவியாளர் பணியிடங்களை, சமீபத்துல நிரப்பினாங்க...
இதுக்காக, யூனியன்சேர்மன், துணை சேர்மன், பி.டி.ஓ., அடங்கிய நியமனக்குழு அமைச்சாங்க பா...
''இந்த நியமனத்துல,இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி, வயது வரம்பு, 'டூ-வீலர்' ஓட்ட தெரிந்திருத்தல்னு எதையும் பார்க்காம, தி.மு.க.,வினர் மற்றும் சேர்மனுக்கு வேண்டியவங்களா பார்த்து நிரப்பிட்டாங்க பா...
''மாசம், 25,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிற இந்த வேலைக்கு, தலா, 7 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் நடந்திருக்குது... தகுதி இருந்தும் வேலை கிடைக்காத பலர், இந்த நியமனங்களை ரத்து பண்ண கோரி, கோர்ட்டுக்கு போக போறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.