PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

ரத்தினங்களிலே மிகவும் விலைமதிப்புள்ளது வைரங்கள் தான். மிக அதிகமான வெப்பம், அழுத்தத்தில் கரி (கார்பன்), வைரமாக மாறுகிறது. அதனால் தான் வைரங்கள் பூமியின் ஆழத்தில் உருவாகின்றன. இவை மிகவும் அரிதானவை என்பதால் தான் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
நீண்டகாலமாக விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் வைரத்தை உருவாக்கி வருகின்றனர். ஆனால் இதற்கும் 1,500 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிக வெப்பமும், 50,000 வளிமண்டல அழுத்தமும் தேவை. இதனால் ஆய்வுக்கூடத்தில் வைரங்களை உருவாக்கும் எளிய வழிமுறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
தற்போது தென்கொரியாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். பல்கலை விஞ்ஞானிகள் சாதாரண அழுத்தத்தில், குறைந்த வெப்பநிலையில், வெறும் 15 நிமிடங்களில் வைரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். உருகிய நிலையில் கேலியம், இரும்பு, நிக்கல், சிலிக்கான் ஆகியவற்றின் கலவையை மீத்தேன், ஹைட்ரஜன் வாயுக்கள் நிறைந்த சூழலில், 1,025 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்குச் சூடுபடுத்தினர்.
15 நிமிடங்களில் கலவையின் அடியில் வைரம் படலம் போல் உருவானது. அதைச் சுலபமாகப் பிரித்துப் பயன்படுத்த முடிந்தது. வேறு உலோகக் கலவைகள் கொண்டு இதே போல் வைரத்தை உருவாக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதில் வெற்றி கிடைத்தால் வருங்காலத்தில் தொழிற்சாலைகளில் இந்த எளிய முறையில் வைரங்கள் தயாரிக்கப்படும்.