தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/‘ரேபிடோ’ வாகனங்களில் பறக்கும் தீபாவளி பரிசுகள்!

‘ரேபிடோ’ வாகனங்களில் பறக்கும் தீபாவளி பரிசுகள்!

‘ரேபிடோ’ வாகனங்களில் பறக்கும் தீபாவளி பரிசுகள்!

4


PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“நிழல் அமைச்சர் மாதிரி வலம் வரார் ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம், உதவியாளர்களா இருந்த ரெண்டு பேர் மீது நிறைய புகார்கள் வரவே, அவாளை நீக்கிட்டா... புதுசா வந்திருக்கற நேர்முக உதவியாளர், பழையவாளே தேவலாம்கற மாதிரி நடந்துக்கறார் ஓய்...

“இவர், ஏற்கனவே கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சரா இருந்த துரைகண்ணுவிடம், உதவியாளரா இருந்து ஏகப்பட்ட தில்லுமுல்லுகள்ல ஈடுபட்டார்... அந்த, ‘அனுபவத்தை’ மீன்வளத் துறையிலும் காட்ட ஆரம்பிச்சிட்டார் ஓய்...

“அமைச்சர் ஸ்ரீநாத், நெருங்கிய நட்பு வட்டத்தை விட்டு வெளியே வராம இருக்கறதால, துறைக்குள்ள என்ன நடக்கறதுன்னே அவருக்கு தெரியல... இதனால, உதவியாளர் பெயர்ல துறைக்குள்ள யார் யாரோ நாட்டாமை பண்ணிண்டு இருக்கா... ‘அமைச்சர் இன்னும் பொறுப்பா செயல் படணும்’னு, அவரது ஆதரவாளர்கள் எல்லாம் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“தாமரை கண்ணன், தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாயே, “உதயநிதி உத்தரவு போட்டும் யாரும் கண்டுக் கல பா...” என்றார்.

“உதயநிதி என்ன உத்தரவு போட்டாரு வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

“தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சமீபத்துல கைது செஞ்சப்ப, வேலுார் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரான, ‘டீட்டா’ சரவணன் என்பவர், முதல்வர் விஜய் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை சொன்னாரே... இதுக்காக, அவரை கைது பண்ணி, ஜாமின்லயும் வந்துட்டாரு பா...

“அதுக்கு முன்னாடி, வேலுார் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளிடம் பேசிய இளைஞர் அணி செயலர் உதயநிதி, ‘சரவணனுக்கு தேவையான உதவிகளை செய்யுங்க... அவரை கைவிடக் கூடாது’ன்னு சொல்லியிருக்காரு... ஆனா, சரவணன் உதவி கேட்டு கட்சி நிர்வாகிகளுக்கு போன் போட்டப்ப யாருமே எடுக்கல பா...

“ஏன்னா, சரவணன் முதல்ல உதயநிதி ரசிகர் மன்ற தலைவரா இருந்து, அன்பில் மகேஷ் சிபாரிசில் கட்சி பதவி, கவுன்சிலர், ‘சீட்’ எல்லாம் வாங்கிட்டதால, மாவட்ட கட்சி நிர்வாகிகளை மதிக்காம இருந்தாரு... அதனால, சமயம் பார்த்து அவங்களும் அவரை கைகழுவிட்டாங்க பா...” என்றார் அன்வர்பாய்.

“தீபாவளி பரிசுகள் புது, ‘ரூட்’ல போகுதுங்க...” என்றார் அந்தோணிசாமி.

“யாருக்கு ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“வழக்கமா தீபாவளிக்கு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் பலரும் பரிசு பொருட்கள் தருவாங்க... அவங்கவங்க அந்தஸ்துக்கு ஏற்ப தங்கம், வெள்ளி, ரொக்கம், விலை உயர்ந்த இனிப்பு, ‘நட்ஸ்’ வகைகளை குடுப்பாங்க...

“த.வெ.க., அரசில் எந்த அன்பளிப்பும் வாங்கக்கூடாதுன்னு, மு தல்வர் விஜய் உத்தரவு போட்டிருக்காரே... இதனால, தலைமை செயலகத்துக்கு தீபாவளி பரிசு எடுத்துட்டு வர்றவங்களை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியாளர்கள், எதிர்ல இருக்கிற ‘பார்க்கிங்’ பகுதிக்கு வர சொல்லிடுறாங்க...

“அங்க பரிசுகளை வாங்கி, வாடகை வாகனங்களை இயக்குற, ‘ரேபிடோ’ போன்ற செயலிகள் மூலமா கார், பைக்குகளை, ‘புக்’ பண்ணி, அவங்கவங்க வீடுகளுக்கு அனுப்பிடுறாங்க... பரிசுகளை வெளியில குடுக்கிறவங்க, தலைமை செயலகத்துக்குள்ள போய் அமைச்சர்களுக்கு வெறும் கையை மட்டும் குடுத்து தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு கிளம்பிடுறாங்க...

“பரிசுகளை வாங்கி, வினியோகம் செய்யவே, தலைமை செயலகத்துக்கு வெளியே வாடகை கார்கள், இருசக்கர வாகனங்கள் வருகை அதிகமா இருக்குதுங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us