/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எல்லை தாண்டி தொல்லை தரும் தி.மு.க., புள்ளி!
/
எல்லை தாண்டி தொல்லை தரும் தி.மு.க., புள்ளி!
PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

நாட்டு சர்க்கரை டீயை ருசித்தபடியே, ''மாமூல் தராட்டி, ஜெயில்ல தள்ளிடுதாங்கல்லா...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊர் போலீசாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''கோவை மாவட்டம், அன்னுார் தாலுகாவில், முழு நேரம் மற்றும் பகுதி நேரம்னு, 70 ரேஷன் கடைகள் இருக்கு... இந்த கடைகள்ல இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும் ரேஷன் அரிசியை சிலர் வாங்கி, அரிசி ஆலைகளுக்கு எடுத்துட்டு போறாவ வே...
''அங்க, அரிசியை பாலீஷ் போட்டு,கேரளாவுக்கு கடத்திட்டுபோய் விற்பனை செய்யுதாவ... இந்த அரிசி ஆலைகளிடம், மாவட்ட குடிமை பொருள் குற்றப் புலனாய்வுதுறை போலீசார் மாதம் ஒரு தொகையை மாமூலா நிர்ணயிச்சு, வசூல் பண்ணுதாவ வே...
''அதே நேரம், மாமூல் தர லேட்டாயிட்டாலோ, தர மறுத்தாலோ, அரிசி ஆலை உரிமையாளர்கள், ஊழியர்கள் மேல வழக்கு பதிவு பண்ணி, 'உள்ள' தள்ளிடுதாவ... இதனால, குறிப்பிட்ட தேதி வந்துட்டாலே, கடன் வாங்கியாவது மாமூல் பணத்தை குடுத்துடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''யானை தந்தங்களை,'ஆட்டை' போட்ட கதையை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''யானை தந்தங்களுக்குசர்வதேச சந்தையில் நல்ல கிராக்கி இருக்குதுங்க... 2 கிலோ எடையுள்ள தந்தம், சர்வ சாதாரணமா சில கோடி ரூபாய் வரைக்கும் விலை போகுதுங்க...
''வனத்துறை சோதனைச்சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும் யானை தந்தங்கள், சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில் இருப்பு வைக்கப் படுதுங்க... இதை பாதுகாக்க வேண்டியது, பூங்கா நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் பொறுப்பு...
''ஆனா, இங்க இருந்து கொஞ்சம் கொஞ்சமா 1,000 கிலோ எடையுள்ள யானை தந்தங்களை சிலர், 'ஆட்டை' போட்டுட்டாங்க... இது சம்பந்தமா,ஒப்பந்த ஊழியர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செஞ்சாங்க...
''இன்னும் சில ஊழியர்கள், 'எஸ்கேப்' ஆகிட்டாங்க... இவங்க சிக்குனா, பூங்கா நிர்வாகத்துல இருந்த முன்னாள், இந்நாள் அதிகாரிகள் பலரும் சிக்குவாங்க... இதனால, இந்த வழக்கை மூடி மறைக்கிற வேலைகள் நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எல்லா விஷயத்துலயும்மூக்கை நுழைக்கறார்னுபுகார் வாசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க.,வில், சோழிங்கநல்லுார் கிழக்கு பகுதி செயலரா இருக்கும் மதியழகன், சென்னை மாநகராட்சியின், 15வது மண்டலக் குழு தலைவராகவும் இருக்கார்... சமீபத்துல, இவரது பகுதியில் கட்சி நிகழ்ச்சி நடந்திருக்கு ஓய்...
''இவரை அழைக்காமலேயே, தொகுதியின் முக்கிய புள்ளி, தன் ஆதரவாளர்களுடன் நிகழ்ச்சியை நடத்தியிருக்கார்... மண்டல தலைவர், வேற சமூகத்தைச் சேர்ந்தவரா இருக்கறதால, நிர்வாக ரீதியாகவும் அவரை, 'டாமினேட்' பண்றாராம்ஓய்...
''இதுபோக, 14வது மண்டலத்துலயும் முக்கிய புள்ளி மூக்கை நுழைக்கறதால, மண்டலக்குழு தலைவர்களை மாநகராட்சி அதிகாரிகள் மதிக்கவே மாட்டேங்கறா... எல்லாத்துக்கும்மேலா, 'கட்டிங்' விஷயத்திலும் முக்கிய புள்ளி கையை நீட்டறதால, கார்ப்பரேஷன், ஆளுங்கட்சியினர் எல்லாம் மேலிடத்துல புகார் சொல்லி, இப்ப விசாரணை நடக்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.