/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உதயநிதி பதவி உயர்வை கொண்டாடாத தி.மு.க.,வினர்!
/
உதயநிதி பதவி உயர்வை கொண்டாடாத தி.மு.க.,வினர்!
PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM

''முறைகேடு மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல ஓய்...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் சங்கமித்தார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியில், தார் சாலை அமைக்க ஒருத்தர், 'டெண்டர்' எடுத்திருக்கார்... ஆனா, ஆளுங்கட்சியை சேர்ந்த பெண் புள்ளி, தன் ஆத்துக்காரருக்கு அந்த டெண்டரை முறைகேடா கைமாத்தி விட்டுட்டாங்க ஓய்...
''அதுவும் இல்லாம, தெருக்கள்ல சிமென்ட் கற்கள் பதிக்கற, 8.70 லட்சம் ரூபாய் பணியையும்,தன் மாமனார் பெயர்ல ஒதுக்கீடு பண்ணிட்டாங்க... இந்த பணிகள்ல ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துது ஓய்...
''இது சம்பந்தமா, சாலை பணியை எடுத்த கான்ட்ராக்டர், கோர்ட்ல வழக்கு போட்டுட்டார்...கோர்ட் உத்தரவுப்படி, பேரூராட்சிகள் இயக்குனர்கிரண் குராலா விசாரணைநடத்தி, கடந்த ஜூன் 27ல் கோர்ட்ல அறிக்கையும் தாக்கல் செய்தார் ஓய்...
''அதுவும் இல்லாம, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாம பெண் புள்ளி, அவங்க ஆத்துக்காரர், மாமனார்னுமூணு பேரும் சேர்ந்து முறைகேடு பண்ணியிருக்கறதா, அரசு முதன்மை செயலருக்கும்கடிதம் அனுப்பிஇருந்தார் ஓய்...
''ஆனா, மூணு மாசம் கடந்தும் அவா மேல எந்த நடவடிக்கையும் இல்ல... 'ஆளுங்கட்சி பெண் புள்ளி குடும்பத்தால, கட்சிக்கு தான் கெட்ட பெயர்'னு உள்ளூர் தொண்டர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
டீ கடை ரேடியோவில்ஒலித்த, 'அமைதிக்கு பெயர் தான் சாந்தி...' என்ற பாடலை சிலநிமிடங்கள் ரசித்த பெரியசாமி அண்ணாச்சி,''விருதுநகருக்கு படைஎடுத்து வராவ வே...'' என்றார்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தென் மண்டல ஐ.ஜி.,யா அஸ்ரா கர்க் இருந்தப்ப, விருதுநகர் மாவட்டத்துல இருந்த டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள்னு பல அதிகாரிகளை, வெளிமாவட்டங்களுக்கு, 'டிரான்ஸ்பர்' பண்ணியிருந்தாரு... இந்த சூழல்ல, லோக்சபா தேர்தல் முடிஞ்சு, தமிழகம் முழுக்கவே போலீசாருக்கு இடமாறுதல் போடுதாங்கல்லா...
''இதுல, வெளி மாவட்டங்களுக்கு போன டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள்எல்லாம், மறுபடியும் விருதுநகரையே விரும்பி கேட்டு வாங்கிட்டு வராவ... இதுக்கு, இந்த மாவட்ட அரசியல்வாதிகள்மற்றும் சில முக்கிய பிரமுகர்களின் ஆதரவும், அனுசரணையும் தான் காரணம்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''உதயநிதி பதவி உயர்வை கொண்டாடலைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''துணை முதல்வரா, சமீபத்துல உதயநிதி பொறுப்பேற்றாரே... இதை, தமிழகம் முழுக்க தி.மு.க.,வினர் உற்சாகமா கொண்டாடுனாங்க... பட்டாசு வெடிப்பு, இனிப்பு, அன்னதானம்னுஅமர்க்களப்படுத்துனாங்க...
''ஆனா, பெரம்பலுார் மாவட்ட தி.மு.க.,வினர் பெருசா கொண்டாட லைங்க... மாவட்ட தலை நகரான பெரம்பலுார் டவுன்ல, பைக்குல வந்த ரெண்டு தி.மு.க., நிர்வாகிகள் பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட்ல பட்டாசு வெடிச்சுட்டு, அதை போட்டோவும் எடுத்துட்டு கிளம்பிட்டாங்க...
''சில இடங்கள்ல வாழ்த்து பேனர்கள் மட்டும் வச்சிருந்தாங்க...மற்றபடி எங்கயும் எந்த விழாவும் நடத்தல... 'இந்த மாவட்டத்தை சேர்ந்த, மாஜி மத்திய அமைச்சரின் வாய்மொழி உத்தரவு தான் அதுக்கு காரணம்'னு தி.மு.க.,வினரே முணுமுணுக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி. பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.