/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எம்.எல்.ஏ., பெயரில் தி.மு.க., புள்ளி கமிஷன் மிரட்டல்!
/
எம்.எல்.ஏ., பெயரில் தி.மு.க., புள்ளி கமிஷன் மிரட்டல்!
எம்.எல்.ஏ., பெயரில் தி.மு.க., புள்ளி கமிஷன் மிரட்டல்!
எம்.எல்.ஏ., பெயரில் தி.மு.க., புள்ளி கமிஷன் மிரட்டல்!
PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM

மசாலா டீயை ருசித்தபடியே, ''சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப் போறாவளாம்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தென்காசி, காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில்களின் அறங்காவலர் குழுவுக்கு சமீபத்துல அஞ்சு பேரை நியமிச்சிருக்காவ... இதுல, ரெண்டு நாடார், ரெண்டு தலித், ஒரு பிள்ளைமார் சமூகத்தினருக்கு வாய்ப்பு குடுத்திருக்காவ வே...
''தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் செல்லதுரை பரிந்துரையில் தான் இந்த நியமனங்கள் நடந்திருக்கு... ஆனா, தென்காசி மாவட்டத்துல கணிசமா வசிக்கிற முக்குலத்தோர் சமுதாயத்தை கண்டுக்கல வே...
''இதனால, செல்லதுரையை கண்டிச்சு, மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தென்காசி பஸ் ஸ்டாண்ட் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காவ... சட்டசபை தேர்தலப்ப, முக்குலத்தோர் வசிக்கும் கிராமங்களுக்கு ஓட்டு கேட்டு வர்ற தி.மு.க.,வினரை தடுத்து நிறுத்தி, தேர்தலை புறக்கணிக்கவும் அந்த சமுதாயத்தினர் திட்டமிட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கூடுதல் வேலையை திணிக்கிறாரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சுங்கத்துறையின் தலைமை அலுவலகம், வடசென்னையில் இருக்கு... இந்த ஆபீஸ்ல ஏர்போர்ட், துறைமுக ஏற்றுமதி, இறக்குமதி உட்பட பல பிரிவுகள் இருக்கு... இணையதளம் மற்றும் சமூக வலைதளத்துக்கும் தனிப்பிரிவு இயங்குது பா...
''பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், அவற்றை ஏலம் விடுறது சம்பந்தமான தகவல்களை இணையதளம், சமூக வலைதளங்கள்ல வெளியிடுவாங்க... இதை நிர்வகிக்க, தனியா அதிகாரிகள் இருந்தாங்க பா...
''ஆனா, கடந்த ரெண்டு வருஷமா இந்த பிரிவுக்கு ஆட்களே இல்ல... இது பத்தி துறையின் உயர் அதிகாரியிடம் எடுத்து சொன்னப்ப, 'துணை கமிஷனர் அந்தஸ்துல இருக்கிற அதிகாரிகளே அந்த வேலைகளையும் பார்க்கட்டும்'னு கறாரா சொல்லிட்டாரு பா... 'ஏற்கனவே, எங்களுக்கு வேலை டைட்டா இருக்கு... இதுல, இது வேறயா'ன்னு துணை கமிஷனர்கள் நொந்துக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''குமார் வரார்... சுக்கு காபி குடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''எம்.எல்.ஏ., பெயரை சொல்லி, கமிஷன் கேக்கறார் ஓய்...'' என்றார்.
''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை மாநகராட்சி யின் 196வது வார்டு, கண்ணகி நகர், 19வது குறுக்குத் தெருவில் அங்கன்வாடி மையம் கட்ட, இடம் தேர்வு பண்ணியிருக்கா... அந்த இடத்துல, கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டவும் ஒப்புதல் குடுத்துட்டா ஓய்...
''பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கறது... இந்த சூழல்ல, வட்ட நிர்வாகி ஒருத்தர், சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பெயரை சொல்லி, கான்ட்ராக்டரிடம் கமிஷன் கேட்டு தகராறு பண்ணியிருக்கார்... இப்ப, விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிடுத்து ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''சீனிவாசன் இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.