/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போராட்டத்தை துாண்டிய தி.மு.க., புள்ளிக்கு 'டோஸ்!'
/
போராட்டத்தை துாண்டிய தி.மு.க., புள்ளிக்கு 'டோஸ்!'
போராட்டத்தை துாண்டிய தி.மு.க., புள்ளிக்கு 'டோஸ்!'
போராட்டத்தை துாண்டிய தி.மு.க., புள்ளிக்கு 'டோஸ்!'
PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

''அமைச்சர்கள் பனிப்போருக்கு முடிவு கட்டணும்னு சொல்றாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த மாவட்டத்துலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரா, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இருக்காரு... இதே மாவட்டத்தைச் சேர்ந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரா இருக்காரு பா...
''மத்திய பட்ஜெட்டை கண்டிச்சு, சமீபத்துல தெற்கு மாவட்ட தி.மு.க., சார்புல, அறந்தாங்கியில் பொதுக் கூட்டம் நடத்துனாங்க... இதுக்காக அடிச்ச நோட்டீஸ்கள்ல, அறந்தாங்கியில் வசிக்கிற அமைச்சர் மெய்யநாதன் பெயர், படத்தை போடலை பா...
''இதனால, ஆவேசமான மெய்யநாதன் ஆதரவாளர்கள், 'எங்களை, ரகுபதி தரப்பு தொடர்ந்து புறக்கணிக்குது... இது பத்தி, உதயநிதியிடம் புகார் குடுக்கப் போறோம்'னு சமூக வலைதளங்கள்ல குமுறுனாங்க பா...
''உடனே, அவசர அவசரமா வேற நோட்டீஸ் அடிச்சு, அதுல மெய்யநாதன் பெயரை சேர்த்தாங்க... 'ரெண்டு அமைச்சர்களுமே, பரஸ்பரம் அடுத்த அமைச்சரின் படம், பெயர்களை போடுறதை தவிர்க்கிறாங்க... கட்சி தலைமை, ரெண்டு பேரையும் கண்டிச்சு வைக்கணும்'னு தொண்டர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கடுப்பாகி விடுப்புல போயிட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பத்திரப்பதிவு துறையில் வருவாயை உயர்த்த, துறையின் அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளை விரட்டி வேலை வாங்குதாரு... '100 சார் - பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையிலும் செயல்படும்'னு அறிவிச்சிருக்காரு வே...
''அதுவும் இல்லாம, 'ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் வந்தா, அன்னைக்கும் சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும்'னு அறிவிச்சாரு... இதுக்கு, பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிச்சு, பணி புறக்கணிப்பு போராட்டத்துல ஈடுபட்டுச்சு வே...
''இதை பார்த்து, பதிவுத்துறை தலைமை அதிகாரி கோபமாகிட்டாரு... போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்கள், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க, தலைமை அதிகாரி முடிவு செஞ்சாரு வே...
''ஆனா, அமைச்சரின் ஆதரவாளர்கள்னு சொல்ற சில உயர் அதிகாரிகள் தலையிட்டு, அதுக்கு முட்டுக்கட்டை போட்டுட்டாவ... இதனால விரக்தியான தலைமை அதிகாரி, விடுப்புல போயிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''மிரட்டி அனுப்பியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாரை, யாருங்க மிரட்டியது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தா கிராமத்தில், ஏராளமான கல் குவாரிகள் இருக்கு... இங்க, தி.மு.க., பிரமுகர் ஒருத்தர் நடத்துற கல் குவாரிக்கு எதிரா மக்கள் போராட்டம் நடத்தியதால, அதை மூடி வச்சிருக்கா ஓய்...
''இந்த பிரச்னையில், தொகுதி ஆளுங்கட்சி முக்கிய புள்ளி தான், மக்களை துாண்டி விட்டதா தலைமைக்கு புகார்கள் பறந்திருக்கு... கனிமவளத் துறையின் முக்கிய புள்ளி, அவரை சென்னைக்கு அழைச்சு கண்டிச்சிருக்கார் ஓய்...
''அப்ப, 'ஆளுங்கட்சி யில இருந்துண்டே, போராட மக்களை துாண்டி விடறியா... நீயும், உன் அண்ணனும் தொகுதிக்குள்ள பண்ற முறைகேடுகள் பத்தி, நிறைய புகார்கள் வந்திருக்கு...
''அதை தோண்ட ஆரம்பிச்சா என்னாகும் தெரியுமா'ன்னு கேட்க, தொகுதி புள்ளி சப்தநாடியும் அடங்கி திரும்பிட்டார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.