/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கையாடல் ஊழியரை கண்டுகொள்ளாத கல்வி அதிகாரிகள்!
/
கையாடல் ஊழியரை கண்டுகொள்ளாத கல்வி அதிகாரிகள்!
PUBLISHED ON : பிப் 10, 2026 03:14 AM

பி ல்டர் காபியை பருகியபடியே, ''சீனியர் பதவிக்கு ஜூனியர் முயற்சி பண்றார் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக அரசின் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் பாசன மேலாண்மை, வெள்ள கட்டுப்பாடு, அணைகள் பாதுகாப்புன்னு பல்வேறு முக்கிய பணிகள் இருக்கு... இதனால, இந்த துறையின் தலைமை பொறியாளர் மற்றும் நிர்வாக பதவிகளுக்கு, சீனியாரிட்டி, திறமை, நேர்மை அடிப் படையில் தான் அதிகாரிகளை தேர்வு செய்வா ஓய்...
''ஆனா, தனக்கு மேல, 15 சீனியர் அதிகாரிகளை தாண்டி, ஜூனியர் அதிகாரி ஒருத்தர், நீர்வளத் துறையின் முதன்மை தலைமை பொறியாளர் பதவிக்கு காய் நகர்த்திண்டு இருக்கார்... 'இவருக்கு அந்த பதவியை குடுத்துட்டா, பல மூத்த மற்றும் அனுபவமிக்க அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவா'ன்னு துறைக்குள்ள பலரும் புலம்பறா...
''அதுவும் இல்லாம, 'பைபாஸ் ரூட்ல பதவியை பிடிக்க துடிக்கற அவரது முயற்சியை தடுத்து நிறுத்தணும்'னு முதல்வருக்கு சிலர் புகாரும் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
'' பெரிய, 'பொதுப் பணி திலகம்'னு பேர் எடுக்க ஆசையோ...'' என அடுத்த தகவலை துவக்கிய அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தேர்தல் நெருங்குறதால, சட்டசபை தொகுதி வாரியா, முக்கிய பிரமுகர்களிடம், தி.மு.க., சார்பில் குறை கேட்டுட்டு இருக்காங்க... திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கான கூட்டம் சமீபத்தில் நடந்துச்சு பா...
''திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் எல்லாம் கலந்துக்கிட்டு, குறைகள் கேட்டாங்க... அப்ப, நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், ஜெகத்ரட்சகனிடம், 'நீங்க கடந்த, 15 வருஷங்களா பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் நெசவாளர்களுக்கு ஜவுளி பூங்கா அமைக்கப்படும்னு லோக்சபா தேர்தல்ல வாக்குறுதி குடுத்து, ஜெயிச்சு டில்லிக்கு போயிடுறீங்க... ஆனா, ஏன் ஜவுளி பூங்கா அமைக்கல'ன்னு கேட்டாங்க பா...
''உடனே, எம்.எல்.ஏ., சந்திரன் குறுக்கிட்டு, 'ஜவுளி பூங்கா அமைக்கணும்னு நான் சட்டசபையிலும், எம்.பி., பார்லிமென்டிலும் பேசியிருக்கோம்... பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டையில் இடம் தேர்வு செஞ்சிருக்காங்க... சீக்கிரமே ஜவுளி பூங்கா வந்துடும்'னு சமாளிச்சிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''கையாடலை கண்டுக்காம இருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில், ஒரு உதவியாளர் இருக்காரு... இவர் ஏற்கனவே, மருங்காபுரி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலகங்கள்ல வேலை பார்த்திருக்காரு வே...
''அங்க எல்லாம், லட்சக்கணக்கில் மோசடி செஞ்சு மாட்டிக்கிட்டாரு... அப்புறமா அந்த பணத்தை கட்டி, வேலையை காப்பாத்திக்கிட்டாரு வே...
''மணப்பாறையிலும் ஆசிரியர்களின் பண பலன்கள், தன் மனைவி, மகள் பெயர்ல இருக்கிற வங்கி கணக்குகள்ல வந்து விழுற மாதிரி மோசடி பண்ணி, 25 லட்சம் ரூபாய் வரை, 'ஆட்டை' போட்டுட்டாரு... இதை கண்டுபிடிச்சு, ஒரு மாசத்துக்கும் மேலாயிட்டு வே...
''ஆனா, அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்ல... இதனால, 'இவரது மோசடிக்கு உயர் அதிகாரிகள் உடந்தையா இருப்பாங்களோ'ன்னு துறையின் ஊழியர்களே சந்தேகப்படுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சிவகுமார் இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

