/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!
/
தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!
PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM

இஞ்சி டீயை ருசித்தபடியே, ''பஸ்சுல எடுத்துட்டு வந்து வித்துடுறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''என்னத்த வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தடை செய்யப்பட்ட பான் மசாலாக்கள், கூல் லிப் போன்ற குட்கா பொருட்களை, சேலம் மாவட்டம், மல்லுார் மற்றும் பனமரத்துப்பட்டி பகுதி மளிகை மற்றும் பெட்டி கடைகள்ல விற்குறாங்க... கார், வேன், பைக்ல குட்கா பொருட்களை எடுத்துட்டு வந்தா, போலீசார் சோதனை நடத்தி, பறிமுதல் பண்ணிடுறாங்க...
''இதனால, இதை விற்கும் கும்பல், 'வாட்ஸாப்'ல ஆர்டர் எடுத்துடுது... அப்புறமா சேலம் புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வேலைக்கு போற மாதிரி சில வாலிபர்கள், முதுகுல பேக்கை மாட்டிக்கிட்டு பஸ்கள்ல மல்லுார், பனமரத்துப்பட்டி பகுதிக்கு வர்றாங்க...
''ஆர்டர் கொடுத்த கடைக்கு போய், பொருட்களை டெலிவரி பண்ணிட்டு, பணத்தை வாங்கிட்டு போயிட்டே இருக்காங்க... இப்படி, தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஷூட்டிங் போயிட்டதால, பட்டியல் பாதியில நிற்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்துல, அமைப்பு ரீதியாக, 120 மாவட்டச் செயலர்களை நியமிக்க முடிவு பண்ணி பட்டியல் தயாரிச்சாங்க... முதல் கட்டமா, 95 மாவட்டச் செயலர்கள் பட்டியலை மட்டும் அறிவிச்சாங்க...
''மீதம் இருக்கிற 25 மாவட்டச் செயலர்களை இறுதி பண்ணி பட்டியலை அறிவிக்கிறதுக்குள்ள, ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க விஜய் கிளம்பிட்டதால, பட்டியல் கிடப்புல கிடக்குது பா...
''சென்னையை பொறுத்தவரைக்கும் ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலர்னு தேர்வு பண்ணியிருக்காங்க... வர்ற 10ம் தேதி விஜய்க்கு ஷூட்டிங் இல்லாததால, அன்னைக்கு 25 மாவட்டச் செயலர் பட்டியல் வெளியாகும்னு கட்சியினர் எதிர்பார்த்துட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''விவசாயிகள் கோபம், தேர்தல்ல எதிரொலிக்கும்னு சொல்றா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''அவங்களுக்கு என்ன வே பிரச்னை...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''பதிவு மூப்பு அடிப்படையில் தான், இலவச மின்சாரத்துக்கான விவசாய மின் இணைப்புகளை வழங்கறா... தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'வருஷத்துக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும்'னு சொன்னா ஓய்...
''ஆனா, ஆட்சிக்கு வந்த மறு வருஷமே, இதை, 50,000மா குறைச்சுட்டா... மூணாவது வருஷம், 35,000 ஆனது; இப்ப, 15,000ன்னு கீழ போயிடுத்து... இப்படி இறங்குமுகமாகவே போயிட்டதால, 2010ம் ஆண்டு பதிவு செய்த விவசாயிகள், இன்னும் இணைப்பு கிடைக்காம, 15 வருஷமா காத்துண்டு இருக்கா ஓய்...
''அதுவும் இல்லாம, உடனடி மின் இணைப்பு வழங்கும், 'தட்கல்' திட்டமும், ஹார்ஸ் பவருக்கு ஏற்ப, 2.50 லட்சம் முதல், 4 லட்சம் ரூபாய் கட்டுனா உடனடியா மின் இணைப்பு வழங்கும் திட்டமும், இணையதளத்தில் பதிவு செய்ய முடியாம, ரெண்டு வருஷமா முடங்கி கிடக்கறது... இதனால, தமிழகம் முழுக்கவே அதிருப்தியில இருக்கற விவசாயிகள், தேர்தல்ல தங்களது கோபத்தை வெளிப்படுத்த காத்துண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

