/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பயிர்க்கடன் வாங்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!
/
பயிர்க்கடன் வாங்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!
PUBLISHED ON : ஜன 06, 2024 12:00 AM

''விவசாயிகள் போர்வையில, கட்சிக்காராளை அழைச்சுண்டு போயிட்டா ஓய்...'' என்றபடியே, பில்டர் காபிக்கு ஆர்டர் தந்தார், குப்பண்ணா.
''எந்த ஊர் சமாச்சாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சமீபத்துல, தாய்லாந்து நாட்டுல நாலு நாள் விவசாய கண்காட்சி நடந்துது... இதுக்கு, தர்மபுரி மாவட்ட வேளாண் துறையில இருந்து விவசாயிகளை அழைச்சுண்டு போனா ஓய்... இதுல, முன்னோடி விவசாயிகளை அழைச்சுண்டு போகாம, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், தர்மபுரி பகுதியின் ஆளுங்கட்சி ஒன்றிய செயலர்களையும், கட்சி நிர்வாகிகளையும் அதிகாரிகள் அழைச்சுண்டு போயிட்டு வந்திருக்கா ஓய்...
''இதுல, பாதி பேர் கடந்த வருஷமும் இதே மாதிரி சுற்றுலா போயிட்டு வந்தவாளாம்... இதனால, நிஜமான விவசாயிகள் குமுறிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஒப்பந்ததாரர் அலட்சியத்தால, துணை பி.டி.ஓ.,க்கள் புலம்புறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த மாவட்டத்துல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருவள்ளூர் மாவட்டத்துல, ௧௪ ஒன்றியங்கள் இருக்கு... இதுல, சத்துணவு திட்டத்தை கவனிக்கிற துணை பி.டி.ஓ.,க்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிக்கு சத்துணவுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், எவர்சில்வர் தட்டு, டம்ளர்னு தேவையானதை பட்டியல் போட்டு, கலெக்டர் ஆபீசுக்கு அனுப்பி வைப்பாங்கப்பா...
''மாவட்ட நிர்வாகம், இந்த பொருட்களை ஒப்பந்ததாரர் மூலமா, அந்தந்த ஒன்றியத்துக்கு அனுப்பி வைக்கும்... அங்க இருந்து பள்ளிகளுக்கு சப்ளை பண்ணுவாங்க பா... இது தான் நடைமுறை...
''ஆனா, கடந்த ஆறு மாசமா ஒப்பந்ததாரர் சமையல் பொருட்கள், பாத்திரங்களை மொத்தமா கலெக்டர் ஆபீஸ்ல இறக்கிட்டு போயிடுறாரு பா... துணை பி.டி.ஓ.,க்கள் வாடகைக்கு வாகனம் எடுத்துட்டு போய், இதை எடுத்துட்டு வர்றாங்க...
''இந்த வாகன வாடகையை, அவங்க கைக்காசை போட்டு தான் குடுக்கணுமாம்... இதனால, அவங்க நொந்து போயிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பயிர்க்கடன்கள் வாங்க முடியாம பரிதவிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த ஊர் விவசாயிகளை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துல, சில வருஷங் களுக்கு முன்னாடி, சுத்துப்பட்டு கிராம விவசாயிகள் பயிர்க்கடன் வாங்கியிருந்தாவ வே... அ.தி.மு.க., ஆட்சியின் கடைசியில, பயிர்க்கடன்களை ரத்து செஞ்சாங்கல்லா...
''இதுல, வாலாஜாபாத் சங்கத்துலயும் கடன்களை தள்ளுபடி செஞ்சாவ வே... அதே நேரம், 149 விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் பைல்களை சங்க நிர்வாகிகள் தொலைச்சுட்டாவ....
''இதனால, அவங்க கடன்களை தள்ளுபடி செய்ய முடியல... இதே காரணத்தால, அவங்க புது கடன்கள் வாங்கவும் முடியாம தவிக்காவ... இது சம்பந்தமா, விவசாயிகள் பலமுறை முறையிட்டும், கூட்டுறவு சங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடியவும், பெரியவர்கள் கிளம்பினர்.