தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'போக்சோ' குற்றவாளிக்கு ஆதரவாக அரசு பெண் வக்கீல்!

 'போக்சோ' குற்றவாளிக்கு ஆதரவாக அரசு பெண் வக்கீல்!

 'போக்சோ' குற்றவாளிக்கு ஆதரவாக அரசு பெண் வக்கீல்!

1


PUBLISHED ON : ஜூன் 20, 2026 12:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 20, 2026 12:18 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெஞ்சில் அமர்ந்ததுமே, “அழைப்பிதழ் குடுத்ததுல சர்ச்சையாயிடுத்து ஓய்...” என அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

“என்ன விவகாரம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“காங்., கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை மகள் திருமணம், முந்தா நாள் நடந்துச்சோல்லியா... இதுக்காக, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை நேர்ல பார்த்து செல்வப்பெருந்தகை அழைப்பிதழ் குடுத்தார்... ஆனா, சொந்த கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோருக்கு, அவர் நேர்ல போய் அழைப்பிதழ் குடுக்கல ஓய்...

“காங்., கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராம் மோகன், தலைமை செயலகத்துக்கு போய் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனை பார்த்து அழைப்பிதழ் குடுத்திருக்கார்... இதனால, விஸ்வநாதனுக்கு கோபம் வந்துடுத்து ஓய்...

“ராம் மோகனை பார்த்து, 'அமைச்சரை நேர்ல பார்த்து அழைப்பிதழ் தரணும்னு கூட உங்க தலைவருக்கு தெரியாதா'ன்னு கடுமையா சத்தம் போட்டிருக்கார்... அவரது சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்து அமைச்சர்கள் அறையில் இருந்தவாளே, என்னமோ ஏதோன்னு எழுந்து வந்துட்டா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“பல வருஷங்களா ஆதிக்கம் செலுத்திட்டு இருக்காங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“பேரூராட்சிகள் இயக்குநர் அலுவலகத்துல, 'ஏ' பிரிவுன்னு ஒண்ணு இருக்கு... புதிய பணி நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு போன்ற முக்கிய வேலைகளை இந்த பிரிவு தான் கவனிக்குது பா...

“இங்க, ரெண்டு அதிகாரிகள் பல வருஷங்களா தொடர்ந்து இருக்காங்க... பதவி உயர்வு, இடமாறுதல்ல ஏகத்துக்கும் வசூலை வாரி குவிக்கிறாங்க பா...

“இதுக்கு இடையில, இயக்குநர் அலுவலகத்துல உதவி இயக்குநர் அந்தஸ்தில் மூணு புதிய பணியிடங்களை உருவாக்குனாங்க... ஆனா, அந்த மூணு அதிகாரிகளுக்கும் எந்த பணிகளையும் பிரிச்சு குடுக்காத ரெண்டு அதிகாரிகளும், அவங்களை, 'டம்மி'யாவே வச்சிருக்காங்க பா...

“இதுல ஒரு உதவி இயக்குநர், போன மாச கடைசியில ஓய்வு பெற்றே போயிட்டாரு... 'த.வெ.க., அரசு இந்த 'ஏ' பிரிவை ஒட்டுமொத்தமா கலைச்சுட்டு, புதுசா மாத்தி அமைக்கணும்'னு இங்க பணிபுரியும் ஊழியர்கள் சொல்றாங்க பா...” என்றார், அன்வர்பாய்.

“டில்லிபாபு, சுப்ரமணியன் இங்கன உட்காருங்க...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நியாயம் கிடைக்காம தடுக்காவ வே...” என்றார்.

“யாருங்க அது...” என விசாரித்தார் அந்தோணிசாமி.

“திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பக்கத்துல ஒரு பெண் இருக்காங்க... கணவரை இழந்த மத்திய அரசு ஊழியரான இவங்களது ரெண்டாவது கணவர், முதல் கணவருக்கு பிறந்த மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்திருக்காரு வே...

“அம்மா புகாரின்படி, 'போக்சோ' வழக்குல அவரை கைது செஞ்சாங்க... இப்ப ஜாமின்ல வந்துட்ட அவர், 'உங்க படங்களை ஆபாச வலைதளங்கள்ல வெளியிடுவேன்'னு அம்மாவையும், பெண்ணையும் மிரட்டுதாரு வே...

“இதுக்கு இடையில, 'போக்சோ' வழக்கு நடக்கும் கோர்ட்ல இருக்கிற அரசு பெண் வக்கீலும், அங்க இருக்கிற மகளிர் போலீசாரும், குற்றவாளிகிட்ட லஞ்சம் வாங்கிட்டு, வழக்கை வாபஸ் வாங்கும்படி தாயையும், மகளையும் மிரட்டுதாவ... இதனால, அவங்க ரொம்பவும் நொந்து போயிருக்காவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “சுமதி மேடம், சொல்லுங்கோ...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us