தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஆட்சிக்கு ஆட்சி விசுவாசத்தை மாற்றும் போலீஸ் அதிகாரி!

 ஆட்சிக்கு ஆட்சி விசுவாசத்தை மாற்றும் போலீஸ் அதிகாரி!

 ஆட்சிக்கு ஆட்சி விசுவாசத்தை மாற்றும் போலீஸ் அதிகாரி!

1


PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “குடும்ப ஆதிக்கம் அதிகமா இருக்குதுங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

“எந்த கட்சியில பா...” என பட்டென கேட்டார் அன்வர்பாய்.

“தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், துாத்துக்குடி மாவட்ட செயலரா இருக்கிறவர் சாமுவேல்ராஜ்... இவர், த.மா.கா.,வில் இருந்த தன் அண்ணன் விஜயசீலன், இன்னொரு அண்ணன் மகனை த.வெ.க.,வில் சேர்த்து, கட்சி நிகழ்ச்சிகள்ல அவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தர்றாருங்க...

“கட்சி போஸ்டர், பேனர்கள்ல தன் குடும்ப உறுப்பினர்கள் படங்களை பெருசா போடணும்னு, நிர்வாகிகளை வலியுறுத்துறாரு...

“இதனால, 'தி.மு.க.,வை குடும்ப கட்சின்னு விமர்சிக்கிற நம்ம கட்சியிலயே இப்படி இருந்தா எப்படி'ன்னு த.வெ.க.,வினர் புலம்புறாங்க...” என்றார் அந்தோணிசாமி.

“கடன் வழங்கி முறைகேடு பண்ணியிருக்கா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“திருச்சி மாவட்டம், சோபனபுரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் இருக்கு... இந்த சங்கத்துக்கு செயலர் இல்லாததால, பெண் ஊழியர் தான் செயலர் பணிகளை கவனிக்கறாங்க ஓய்...

“சங்கத்தின் கட்டுப்பாட்டில் வர்ற ரேஷன் கடை ஊழியரும், இந்தம்மாவும் கூட்டணி சேர்ந்து, விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கறதுல நிறைய முறைகேடுகள் பண்ணியிருக்கா ஓய்...

“இந்த பகுதியில், 25 ஏக்கர்ல கூட வாழை சாகுபடி நடக்கல... ஆனா, 301 விவசாயிகள், 510 ஏக்கர்ல வாழைகள் பயிரிட்டதா கணக்கு காட்டி, ஒரு ஏக்கர் வாழைக்கு தலா 70,500 வீதம், 3.58 கோடி ரூபாய்க்கு கடன்களை வாரி வழங்கியிருக்கா ஓய்...

“தலா, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிட்டு, விவசாயமே செய்யாதவங்களுக்கு கூட வட்டியில்லா பயிர்க்கடன்களை வாரி வழங்கியிருக்கா... இந்த ரெண்டு பேர் மீதும் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் குடுக்க, விவசாயிகள் சிலர் தயாராயிண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“வாரும் ஆனந்த்... ஊர்ல ராஜலட்சுமி சவுக்கியமா வே...” என விசாரித்த பெரியசாமி அண்ணாச்சியே, “எந்த ஆட்சி வருதோ, அதுக்கு விசுவாசியா மாறிடுதாரு வே...” என்றார்.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“சென்னை, பூக்கடை காவல் மாவட்டத்துல ஒரு போலீஸ் அதிகாரி இருக்கார்... இவரது கட்டுப்பாட்டுல 11 போலீஸ் ஸ்டேஷன்கள் வருது வே...

“எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிற இவர், அந்த படத்தை தன் சமூக வலைதள கணக்கின் முகப்பில் வச்சு, அந்த கட்சியின் ஆதரவாளரா தன்னை காட்டிக்கிடுவாரு வே...

“சமீபத்துல, பிராட்வே பகுதியில் ஒரு பெண் போலீஸ் காய்கறி வாங்க போயிருக்காங்க... அப்ப, சாலையோர வியாபாரிகளுடன் ஏதோ தகராறு ஆகி, பெண் போலீசை எல்லாரும் சேர்ந்து அடிச்சுட்டாவ வே...

“இது, அதிகாரி காதுக்கு போக, 'இது சம்பந்தமா எந்த வழக்கும் பதிவு பண்ண வேண்டாம்'னு உத்தரவு போட்டுட்டாரு... ஆனா, இந்த செய்தி ஊடகங்கள்ல வெளியாகவே, வேற வழியில்லாம சாலையோர வியாபாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு பண்ணியிருக்காவ... 'போலீசை தாக்கியவங்க மீதே நடவடிக்கை எடுக்காதவர், பொதுமக்கள் பிரச்னை மீது என்ன நடவடிக்கை எடுத்துடுவார்'னு போலீசார் எல்லாம் புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“சுந்தரவடிவேலு, இப்படி உட்காரும் ஓய்...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us