கூட்டுறவு சங்க உறுப்பினர்களை அவமதிக்கும் பெண் அதிகாரி!
கூட்டுறவு சங்க உறுப்பினர்களை அவமதிக்கும் பெண் அதிகாரி!
PUBLISHED ON : மே 05, 2026 12:32 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''மொத்தம் இருக்கிற, 14 பேருமே பொறுப்புல இருந்து விலகுறதா கடிதம் குடுத்துட்டாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''இது கட்சி மேட்டர் இல்ல... ஈரோடு மாவட்டத்தில், 14 வட்டாரங்கள்ல, 378 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இருக்கு... இவற்றை நிர்வாகம் பண்ண, மாவட்ட சுகாதார அதிகாரியின் கீழ், 14 வட்டார மருத்துவ அலுவலர்கள் இருக்காங்க பா...
''இவங்க, சுகாதார பணிகளை கவனிக்கிறது, நோய் தடுப்பு, மருந்து தேவைகளை கேட்டு வாங்குறது உள்ளிட்ட பணிகளை செய்றாங்க... மாவட்ட சுகாதார பெண் அதிகாரி, இந்த வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்களை தரக்குறைவா ஒருமையில் பேசுறது, பல மணி நேரம் நிற்க வச்சு அவமானப்படுத்துறதுமா இருந்திருக்காங்க...
''இதனால, நொந்து போன 14 அதிகாரிகளும், 'கடும் மன அழுத்தம், பணி சுமையால எங்க பொறுப்புகள்ல இருந்து விலகிக்கிறோம்'னு பொது சுகாதார துறை இயக்குநருக்கு கடிதமே அனுப்பிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அருணா மேடம்... சாயந்தரமா பேசறேன்...'' என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த குப்பண்ணா, ''சத்து மாவு திட்டத்துல ஏகப்பட்ட தில்லுமுல்லு நடக்கறது ஓய்...'' என்றார்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலமா சத்து மாவு பாக்கெட்டுகள் தரால்லியோ... கோவை மாவட்டத்துல பல ஒன்றியங்கள்ல, இந்த சத்து மாவை சரியா வழங்கறது இல்ல ஓய்...
''மாடுகள் வளர்க்கறவாளுக்கு, சத்து மாவை மூட்டை மூட்டையா விற்பனை பண்ணிடறா... அவாளும் அதை வாங்கி, மாடுகளுக்கு தீவனமா போடறா... 'எங்களுக்கு தர வேண்டிய சத்து மாவை வித்து பணம் சம்பாதிக்கறவா மேல, கடும் நடவடிக்கை எடுக்கணும்'னு கர்ப்பிணியர் எல்லாம் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்டயும் ஒரு கோவை மேட்டர் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டம், துடியலுார்ல, கூட்டுறவு விவசாய பணிகள் சங்கமான, 'டியூகாஸ்' இருக்கு... இதன் உயர் அதிகாரியா, ஒரு பெண் இருக்காங்க வே...
''சங்க உறுப்பினர்களை இவங்க மதிக்கவே மாட்டேங்காவ... தன்னை பார்க்க வர்ற சங்க உறுப்பினர்களை நிக்க வச்சு தான் பேசுதாங்க வே...
''பெண் அதிகாரி, நிர்வாகத்துலயும் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்யுதாவ... நிர்வாக உதவிக்கு தான் அவரை நியமிச்சிருக்காவ... ஆனா, அவங்களோ, சங்க பங்குதாரர்களை அவமதிக்கிற விதமா நடந்துக்கிடுதாவ வே...
''அதோட, 'சங்க பொதுக்குழு கூட்டத்தை நடத்த விட மாட்டேங்காவ... லாப ஈவுத்தொகையை பங்குதாரர்களுக்கு தர்றது இல்ல'ன்னு அவங்க மேல ஏகப்பட்ட புகார்களை விவசாயிகள் அடுக்குதாவ... 'பெண் அதிகாரி, அ.தி.மு.க., ஆதரவாளரா இருந்தும், அவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல'ன்னும் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''கோமதி அக்கா சொல்லுங்கோ...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.
