PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:17 AM

மெதுவடையை கடித்தபடியே, “பழைய வசூல் வேட்டை நீடிக்கறது ஓய்...” என, அரட்டைக்கு பிள்ளையார் சுழி போட்டார் குப்பண்ணா. “எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“நகராட்சி நிர்வாகத்துறை, முதல்வர் வசம் தான் இருக்கு... 'உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகள்ல, எந்த குறைபாடும் இருக்கப்டாது'ன்னு, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு போட்டிருக்கார் ஓய்...
“ஆனாலும், அந்த துறையில ஊழல், வசூல் வேட்டை எல்லாம் இன்னும் நடக்கறது... குறிப்பா, இந்த துறையில் இருக்கற ரெண்டு அதிகாரிகள் மீது, தி.மு.க., ஆட்சியிலயே ஏகப்பட்ட புகார்கள் வந்துது ஓய்...
“ஆனாலும், அவாளை அசைக்க முடியல... இப்ப, ஆட்சி மாறியும் பழைய, 'பவர்'ல தான் இருக்கா...
''இடமாறுதல் வழங்க ரெண்டு பேரும் செமத்தியா வசூல் வேட்டை நடத்தறா... 'இவாளுக்கு பணம் குடுத்து பதவிக்கு வர்ற அதிகாரிகள், எப்படி நேர்மையா செயல்படுவா'ன்னு, துறை ஊழியர்களே முணுமுணுக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“வாங்க, மதுசூதன ரெட்டி... உங்க நண்பர் விஜயகுமார் இப்பதான் கிளம்பினாரு...” என்ற அந்தோணிசாமியே, “அசைக்க முடியாம இருக்காங்க...” என்றார்.
“யாருவே அது...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததும், அதிகாரிகளை எல்லாம் மாத்திட்டு இருக்காங்களே... குறிப்பா, மூணு வருஷம் ஒரே இடத்துல இருக்கிற அதிகாரிகளை மாத்துறாங்க... அதேநேரம், பெரிய பதவிகள்ல இருக்கிறவங்களை மட்டும் மாத்திட்டு, அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகளை கண்டுக்கலைங்க...
“ஹிந்து அறநிலையத் துறையில் நிறைய அதிகாரிகள், மூணு வருஷங்களை தாண்டியும் ஒரே இடத்துல நீடிக்கிறாங்க... உதாரணமா, மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அதிகாரியும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரியும், மூணு வருஷங்களை தாண்டியும் அதே இடத்துல நீடிக்கிறாங்க... 'எங்களை அசைக்கவே முடியாது'ன்னு ரெண்டு பேரும் மார்தட்டிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, “செந்தில்குமார், சாயந்தரம் சிவரஞ்சனிகிட்ட பேசிட்டு, நானே உங்களை கூப்பிடுதேன்...” என வைத்தவர், “என்கிட்டயும் ஒரு கோவில் சங்கதி இருக்குல்லா...” என்றபடியே தொடர்ந்தார்...
“திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கிற பிரபல முருகன் கோவில்ல, ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இந்த கோவில் மற்றும் இதன் உப கோவில்கள்ல, 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்காவ வே...
“இதுல, பல வருஷங்களா இரவு காவலர் பணியில் இருக்கிற பலர், தங்களுக்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் குடுத்தும், அதிகாரி கண்டுக்கவே இல்ல...
''சமீபத்துல, உள்ளூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருத்தர், பெண் அதிகாரிக்கு போன் போட்டு, தனக்கு வேண்டிய ஒருத்தர், பல வருஷங்களா உபகோவில்ல இரவு காவலரா இருக்காரு... அவருக்கு முருகன் கோவிலுக்கு இடமாறுதல் தரும்படி கேட்டிருக்காரு வே...
“அதுக்கு பெண் அதிகாரி, 'நானே இடமாறுதல்ல போக போறேன் சார்... என்னால முடியாது'ன்னு கறாரா மறுத்துட்டாங்களாம்...
''ஆனா, ரெண்டு நாள் கழிச்சு, தனக்கு வேண்டிய மற்றும் தன் சமுதாயத்தை சேர்ந்த 14 ஊழியர்களுக்கு, அவங்க கேட்ட இடங்களுக்கு இடமாறுதல் குடுத்திருக்காங்க வே...” என முடித்தார் அண்ணாச்சி.
“அரி, இப்படி உட்காரும்... திருத்தணியில ரமணி அக்கா நல்லாயிருக்காங்களா...?” என நண்பரிடம் அந்தோணிசாமி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
