PUBLISHED ON : ஜூன் 06, 2026 12:01 AM

டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, “புரமோஷன் வந்துடுத்துன்னு பொய் சொல்லி, வசூல் வேட்டை நடத்தறார் ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டுல தான், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் நிர்வாகம் நடக்கறது... சி.எம்.டி.ஏ.,வில் சாதாரண, 'டைப்பிஸ்ட்' பணியில் இருக்கற ஒருத்தர், பஸ் ஸ்டாண்ட்ல இருக்கற கடைகளுக்கு போய், 'நான் இப்ப துணை டி.ஆர்.ஓ.,வாகிட்டேன்... உங்க கடையில நிறைய விதிமீறல்கள் நடக்கறதா ஏகப்பட்ட புகார்கள் வரது'ன்னு சொல்லி, வசூல் வேட்டை நடத்தறார் ஓய்...
“இதை கேள்விப்பட்ட சக ஊழியர்கள், 'ஏற்கனவே இந்த மாதிரி வசூல் புகார்ல சிக்கி பதவியிறக்கம் செய்யப்பட்டும், திருந்த மாட்டேங்கறாரே'ன்னு தலையில அடிச்சுக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“ரமேஷ், தள்ளி உட்காரும்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “உளவுத்துறையில நிறைய மாற்றங்கள் செய்யணும் வே...” என்றார்.
“போலீஸ் தகவலா பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“ஆமா... தமிழக உளவுத்துறையில், தலைமை அதிகாரிகள் பலரை மாத்தியிருக்காங்கல்லா... 'ஆனா, கீழ்மட்ட அளவிலும் நிறைய மாற்றங்கள் செய்யணும்'னு அந்த துறைக்குள்ளயே பேசிக்கிடுதாவ வே...
“அதாவது, 'உளவுத்துறையில் மாவட்ட அளவுல டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் பலர் தி.மு.க., அனுதாபிகளா இருக்காவ... இவங்க, தி.மு.க., நிர்வாகிகளின் செயல்பாடுகள் பத்தி அரசுக்கு தெளிவான தகவல்களை தர மாட்டாவ... அதனால, ஒட்டுமொத்த உளவுத்துறை நிர்வாகத்தையும் மாத்தி அமைக்கணும்'னு இந்த துறையில இருக்கிற நேர்மையான அதிகாரிகள் சொல்லுதாவ வே...” என்றார் அண்ணாச்சி
“பணம் வாங்கிட்டு, பதவி உயர்வு குடுத்திருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“எந்த துறையில ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“வழக்கமா, துவக்கப் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை சுழற்சி முறையில் நிரப்புவாங்க... அதாவது, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை, 'சீனியாரிட்டி' அடிப்படையில் நியமிப்பாங்க...
“துாத்துக்குடி மாவட்டத்தில் போன முறை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருத்தருக்கு, மாவட்ட அதிகாரி பதவி வழங்க முன்வந்தப்ப, அவர் வேண்டாம்னு எழுதி குடுத்துட்டதால, சீனியாரிட்டியில் அடுத்த நிலையில் இருந்தவருக்கு அந்த பதவியை குடுத்தாங்க...
“இப்ப, கோவில்பட்டியில் காலியான துவக்கப்பள்ளி மாவட்ட அதிகாரி பதவியை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தந்திருக்கணும்... ஆனா, மாவட்ட பெண் கல்வி அதிகாரி, பல லட்சம் ரூபாயை வாங்கிட்டு, கடந்த முறை பதவி உயர்வு வேண்டாம்னு எழுதி குடுத்த, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கேகுடுத்துட்டாங்க...
“சீனியாரிட்டியை முறையா கடைப்பிடிக்காம, பணத்துக்கு பதவியை வித்தது, மற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திடுச்சு... இந்த பதவி உயர்வை எதிர்த்து, நீதிமன்றத்தை அணுக முடிவு பண்ணியிருக்காங்க... இதனால, பெண் அதிகாரி பீதியில இருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “சங்கீதா சின்னராணி மேடம் சொல்லுங்கோ...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.
