கமிஷன் பேரத்துக்காக ஒப்பந்த பணிகள் நிறுத்தி வைப்பு?
கமிஷன் பேரத்துக்காக ஒப்பந்த பணிகள் நிறுத்தி வைப்பு?
PUBLISHED ON : ஜூன் 05, 2026 12:08 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குது பா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எங்கங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சென்னை, சைதாப்பேட்டையில், 'ஆசிரியர் இல்லம்' செயல்படுது... வெளியூர்கள்ல இருந்து வர்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்குறதுக்காக, அவங்களது ஒரு மாத ஊதிய பங்களிப்புடன் இதை கட்டியிருக்காங்க பா...
“இங்க மொத்தம், 64 அறைகள் இருக்குது... இதுல, இரண்டு அறைகளை மட்டும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கிட்டு, மீத 62 அறைகளை பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை, துணை இயக்குநர்கள், அலுவலக பணியாளர்கள், அரசியல்வாதிகள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எல்லாம் ஒதுக்குறாங்க பா...
“அதுலயும், விடுமுறை நாட்கள்ல இந்த இல்லம் முழுக்க மதுபானம் ஆறா ஓடுது... சிகரெட் புகை மண்டலமா காட்சி அளிக்கிறதால, பெண் ஆசிரியைகள் இங்க தங்கவே பயப்படுறாங்க பா...
“இங்க வசூலாகும் வாடகை பணத்தை, அரசுக்கு கட்டாம நிறைய முறைகேடு நடக்குது... இதனால, 'இல்லத்துல 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தணும்... ஆசிரியர் அல்லாதவங்களை வெளியேத்தணும்... நிதி முறைகேடுகளை தடுக்கணும்'னு த.வெ.க., அரசுக்கு முதுகலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வச்சிருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“கனிமவள கொள்ளை இன்னும் நடக்கு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட பகுதிகள்ல கடந்த தி.மு.க., ஆட்சியில், அந்த கட்சியினர் ஆதரவோட மண், கற்கள் உள்ளிட்ட கனிம வளங்களை லாரி லாரியா கடத்தினாவ... கனிமவளத் துறை அதிகாரிகள் துவங்கி, அலுவலக உதவியாளர் வரை பலரும் பணமழையில குளிச்சாவ வே...
“ஆட்சி மாறிட்ட சூழல்ல, அதிகாரிகள் துணையுடன் இன்னும் கனிமவள கொள்ளை ஜோரா நடக்கு... 'பர்மிட்' எதுவும் வாங்காமலே ராத்திரி பகல்னு பாராம பலரும் கனிமவளங்களை கொள்ளை அடிச்சிட்டு போறாவ வே...” என்றார் அண்ணாச்சி.
“கமிஷனுக்கு அடி போடறாளான்னு தெரியல ஓய்...” என்றார் குப்பண்ணா.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“தி.மு.க., ஆட்சியின் கடைசி மூணு மாதங்கள்ல விட்ட, 'டெண்டர்'களை எல்லாம் ரத்து பண்ணி, த.வெ.க., அரசு உத்தரவு போட்டிருக்கோல்லியோ... இப்ப, நெடுஞ்சாலை துறையில், 1,000க்கும் மேற்பட்ட பணிகளை நிறுத்தி வச்சிருக்கா ஓய்...
“அதுவும் இல்லாம, முடிஞ்ச பணிகளுக்கு பில் தொகை வழங்கறதையும் நிறுத்தி வச்சிருக்கா... புதிய அரசு பொறுப்பேற்றா, இப்படி பணிகளை நிறுத்தி வைக்கறது வழக்கம் தான் ஓய்...
“அப்புறமா, ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, பணிகளின் மதிப்புக்கு ஏற்ப கமிஷன் வாங்கிண்டு, பணிகளை தொடர அனுமதிப்பா... 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இப்படி பேரம் பேசி, 3 சதவீதம் கமிஷன் வாங்கிண்டு, பழைய பணிகளுக்கு ஒப்புதல் குடுத்தா... அதே மாதிரி, 'இந்த ஆட்சியிலும் கமிஷன் பேரத்துக்காக பணிகளையும், பில்களையும் நிறுத்தி வச்சிருக்காளோ'ன்னு ஒப்பந்ததாரர்கள் எல்லாம் சந்தேகப்படறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.
