/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இரண்டு ஆண்டு சம்பளத்தை பறிகொடுத்த வன ஊழியர்!
/
இரண்டு ஆண்டு சம்பளத்தை பறிகொடுத்த வன ஊழியர்!
PUBLISHED ON : ஜன 27, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை ருசித்தபடியே, ''பெண் அதிகாரிக்கு, 5 சவரன்ல செயின் போட்டு அசத்திட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சவரன் விற்கிற விலையில, யாருங்க அந்த தாராள பிரபுக்கள்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கிற, பிரபல முருகன் கோவில் ஊரின் ஒன்றிய துணை பெண் அதிகாரி, 100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்கிற பணியில இருந்தாங்க... இதுல, ஆறு ஊராட்சி தலைவர்களுக்கு சாதகமா நடந்துக்கிட்டாங்க பா...
''அதாவது, ஒவ்வொரு ஊராட்சி தலைவருக்கும், 30 முதல், 50 போலி பெயர்கள்ல, 100 நாள் வேலைக்கான அடையாள அட்டைகளை வழங்கியிருக்காங்க... இந்த அட்டைகள் வாயிலா, கடந்த, மூணு வருஷமா கணிசமான தொகையை அந்த ஊராட்சி தலைவர்கள் சம்பாதிச்சிருக்காங்க பா...
''இந்த மாசம், 5ம் தேதியுடன், ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்துடுச்சு... தங்களுக்கு உதவியா இருந்த பெண் அதிகாரிக்கு, ஆறு தலைவர்களும் சேர்ந்து, 5 சவரன்ல தங்க செயின் பரிசு குடுத்து அசத்தியிருக்காங்க பா...
''இந்த, ஆறு பேரும், ஒன்றிய உயர் அதிகாரிகளுக்கு எதுவும் செய்யாம, பெண் அதிகாரிக்கு மட்டும் செயின் பரிசு குடுத்ததுல, மத்தவங்க எல்லாம் கடுப்புல இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்கிட்டயும் ஒரு புலம்பல் சங்கதி இருக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மதுரை சிட்டியில, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களா நிறைய பெண்கள் தான் இருக்காவ வே... இதுல சிலர், 2008 பேட்ச்சை சேர்ந்தவங்க... இவங்களுக்கு பிறகு, 2011ல் பணியில் சேர்ந்த சில பெண்கள், சட்டம் - ஒழுங்கு பிரிவுல இன்ஸ்பெக்டர்களா இருக்காவ வே...
''சட்டம் - ஒழுங்குக்கு அதிகாரிகள் தர்ற முக்கியத்துவத்தை, குற்றப்பிரிவுக்கு தர மாட்டேங்காவ... குற்றப்பிரிவுக்கு வாகன வசதி உள்ளிட்ட பல விஷயங்களை போராடி தான் வாங்க வேண்டியிருக்கு வே...
''தங்களை விட, 'ஜூனியர்'களை, முக்கியத்துவம் வாய்ந்த, சட்டம் - ஒழுங்கு பிரிவில் நியமிச்சிட்டு, எங்களை மட்டும் குற்றப்பிரிவுல நோக அடிக்கிறாங்களேன்னு பெண் இன்ஸ்பெக்டர்கள் புலம்புதாங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
''வனத்துறையில நடந்த கூத்தை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வன ஊழியர்களுக்கு, சில வருஷங்களா, தனியார் வங்கி கணக்குல சம்பளம் போடறா... மசினகுடி கோட்டத்தில் பணியாற்றிய வன ஊழியர் ஒருத்தர், கொஞ்சம் வசதியானவர் ஓய்...
''இதனால, மாதாந்திர சம்பளத்தை எடுக்காம, காலத்தை ஓட்டிண்டு இருந்தார்... சமீபத்துல வங்கியில, 'பேலன்ஸ்' பார்த்தப்ப, ரெண்டு வருஷமா அவருக்கு சம்பளமே போடாதது தெரிஞ்சிடுத்து ஓய்...
''ஷாக் ஆனவர், அதிகாரிகளிடம் புகார் சொன்னார்... அவா விசாரிச்சதுல, ஊழியரின் சம்பளம், கவனக்குறைவா மற்றொரு ஊழியரின் கணக்குக்கு ரெண்டு வருஷமா போனது தெரிஞ்சது ஓய்...
''அவரை பிடிச்சுக் கேட்டா, 'அந்த பணத்தை செலவு பண்ணிட்டேன்... திருப்பித் தந்துடறேன்'னு, அசால்டா சொல்லியிருக்கார் ஓய்...
''அவர் மேல நடவடிக்கை எடுத்தா, அதிகாரிகளும் மாட்டிப்பாங்க என்பதால, கமுக்கமா இருக்கா... பாவம், ரெண்டு வருஷ சம்பளம் கிடைக்குமா, கிடைக்காதான்னு பாதிக்கப்பட்ட ஊழியர் பரிதவிச்சுண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, நண்பர்கள் நகர்ந்தனர்.

