அ.தி.மு.க., வேட்பாளருக்கு குழி பறிக்கும் 'மாஜி' அமைச்சர்!
அ.தி.மு.க., வேட்பாளருக்கு குழி பறிக்கும் 'மாஜி' அமைச்சர்!
PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''கடைநிலை ஊழியர்களை மாட்டி விட்டுட்டாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''துாத்துக்குடியில் தமிழக அரசின் அனல்மின் நிலையம் இருக்கே... இதை கட்டி, 35 வருஷங்கள் ஆகிட்டதால, அடிக்கடி பழுதாகிடுது... போன வருஷம் இங்க நடந்த தீ விபத்தால, இரண்டு யூனிட்கள் இப்ப வரை இயங்காமலே கிடக்குது பா...
''போன மாசம், 'கன்வேயர் பெல்ட்'டில் ஏற்பட்ட தீ விபத்தால, பல கோடி ரூபாய் இழப்பாகிடுச்சு... முறையான பராமரிப்பு இல்லாதது தான், தீ விபத்துக்கு காரணம் பா...
''ஆனா, அன்னைக்கு இரவு பணியில் இருந்த ரெண்டு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' குடுத்துட்டாங்க... அதாவது, பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களுடன், ரெண்டு அதிகாரிகள் கூட்டணி வச்சிருக்காங்க பா...
''இவங்க, பராமரிப்பு தொழிலாளர்கள் எண்ணிக்கையை கூடுதலா காட்டி, நிறைய பணத்தை முறைகேடு பண்றாங்க... இந்த அதிகாரிகள், நாம மாட்டிக்கக் கூடாதுன்னு, ஊழியர்களை பலிகடா ஆக்கிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தமிமுன் அன்சாரி, பொன்ராஜ் தள்ளி உட்காருங்க...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''மொத்தம், 11 நிர்வாகிகளை நியமிச்சிருக்காவ வே...'' என்றார்.
''எந்த கட்சியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பில், 'டிவி' விவாதங்கள்ல பங்கேற்ற செய்தி தொடர்பாளர்கள் சிலர், 'சீட்' கிடைக்காத விரக்தியில், கட்சியில இருந்தே வெளியேறிட்டாவ வே...
''தேர்தல் வெற்றிக்கு, சமூக ஊடக பிரசாரம் முக்கியம் என்பதால, சமூக ஊடக துறையின் மாநில செயலர்களா, சிவகங்கையைச் சேர்ந்த முத்துபாண்டியன், குடந்தை கண்ணன், கார்த்தி உட்பட 11 பேரை, அகில இந்திய காங்கிரஸ் சமூக ஊடக துறை சார்பில் நியமிச்சிருக்காவ... இந்த 11 பேரும், காங்., வேட்பாளர்கள் 28 பேரையும் ஆதரிச்சு, சமூக வலைதளங்கள்ல பிரசாரம் பண்ணிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''உள்குத்து வேலை நடக்கறதுன்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - தனி தொகுதியில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் நேரடியா மோதறா... தி.மு.க.,வில் டாக்டர் இந்திராணியும், அ.தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுசாமியின் மனைவி சத்யபாமாவும் போட்டியிடறா ஓய்...
''சத்யபாமாவுக்கும், இந்த தொகுதியைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருத்தருக்கும் ஏற்கனவே ஆகாது... இதனால, சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்ததுல இருந்து, பிரசாரம் வரைக்கும் அவர் எட்டிக்கூட பார்க்கல ஓய்...
''அப்பப்ப எங்காவது தலையை காட்டிண்டு, காணாம போயிடறார்... அதோட விட்டா பரவாயில்ல... தங்களுக்கு விழக்கூடிய ஓட்டுகளை, எதிர்க்கட்சிக்கு மடைமாற்றி விடும் வேலையிலும், 'மாஜி' அமைச்சரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருக்கறதா, வேட்பாளர் தரப்பு புலம்பிண்டு இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ராமலிங்கம், இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
