/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விவசாயிகள் மானியத்தில் கிணறு வெட்டிய அரசு ஊழியர்!
/
விவசாயிகள் மானியத்தில் கிணறு வெட்டிய அரசு ஊழியர்!
விவசாயிகள் மானியத்தில் கிணறு வெட்டிய அரசு ஊழியர்!
விவசாயிகள் மானியத்தில் கிணறு வெட்டிய அரசு ஊழியர்!
PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM

“இடம் மாறியும், மாமூல் வசூலை நிறுத்த மாட்டேங்கிறாரு பா...” என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“சேலம் மாவட்டம், சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு தனிப்பிரிவு ஏட்டா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்தவரை தான் சொல்றேன்... அதுக்கு முன்னாடி, இவர், தேவூர் ஸ்டேஷன்ல இருந்தாரு பா...
“பழைய மாமூல் பாசத்துல தேவூருக்கு அடிக்கடி போய், உள்ளூர் அரசியல் பிரமுகர்களை பார்த்து, மாமூல் வசூல் பண்றாராம்... 'நான் சங்ககிரிக்கு போயிட்டாலும், இங்க வழக்கம்போல உங்களுக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கிறேன்'னு சொல்லியே பாக்கெட்டை நிரப்பிட்டு போறாரு... இவரை பத்தி, தேவூர் அரசியல் புள்ளிகள், எஸ்.பி., ஆபீசுக்கே புகார் அனுப்பியும், கிணத்துல போட்ட கல்லா கிடக்குது பா...” என்றார், அன்வர்பாய்.
“வக்கீல் மேல அதிருப்தியா இருக்காவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“கட்டட அனுமதி வழங்குறது, விதிமீறல் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்குற பணிகளை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., செய்யுதுல்லா... இது சம்பந்தமா, நிறைய வழக்குகளும் கோர்ட்ல நடக்கு வே....
“இந்த வழக்குகளை கையாளவே, சி.எம்.டி.ஏ.,வுக்கு, 12 வக்கீல்கள் இருக்காவ... இவங்க பெரும்பாலும், ஆளுங்கட்சிக்கு வேண்டியவங்களா தான் இருப்பாவ வே...
“இப்ப, வெளியூர்ல இருந்து, ஒரு வக்கீலை நியமிச்சிருக்காவ... சி.எம்.டி.ஏ., தொடர்பான முக்கியமான வழக்குகள் இவர் கட்டுப்பாட்டுல தான் வருது வே...
“ஆனா, இவர் சரியா செயல்படாம இருக்கிறதால, பல வழக்குகள்ல, சி.எம்.டி.ஏ.,வுக்கு அபராதம் விதிக்கப்படுதாம்... இது சம்பந்தமா, சமீபத்துல அமைச்சரும், அதிகாரிகளும் ஆய்வுகூட்டம் நடத்தியிருக்காவ வே...
“அந்த கூட்டத்துக்கே, அந்த வக்கீல் வரலன்னா பாரும்... 'இப்படி ஒரு வக்கீல் நமக்கு தேவையா'ன்னு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் புலம்புதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“சிவகுமார் இப்படி உட்காரும்...” என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, “மானியம் எப்படி எல்லாம் வேஸ்டா போறது பாருங்கோ...” என்றபடியே தொடர்ந்தார்...
“தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீதம் அரசு மானியத்துல கிணறு வெட்டி தர்ற திட்டம் ஒண்ணு இருக்கு... இதுக்கு சிறு, குறு விவசாயிகள் நிறைய பேர் விண்ணப்பிச்சுட்டு காத்துண்டு இருக்கா ஓய்...
“திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, வேடபட்டியில் ஒரு அரசு ஊழியர் குடும்பம், இத்திட்டத்தில், 10 லட்சம் ரூபாய்ல கிணறு வெட்டிடுத்து... இதுபத்தி விவசாயிகள் பல புகார்கள் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்ல ஓய்...
“போராட்டம் நடத்து வோம்னு விவசாயிகள் எச்சரிக்கை செய்த பிறகு, முழிச்சுண்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் குடும்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கா... அதுல, அரசு வழங்கிய, 5 லட்சம் ரூபாய் மானியத்தை திருப்பி தருமாறு கேட்டிருந்தா ஓய்...
“அரசு ஊழியர் தரப்போ, 'இப்ப கையில பணமில்ல... மூணு தவணையா தரோம்'னு அசால்டா பதில் தந்திருக்கு ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.