/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உரிமம் இல்லாத குவாரிகளால் அரசுக்கு பல கோடி இழப்பு!
/
உரிமம் இல்லாத குவாரிகளால் அரசுக்கு பல கோடி இழப்பு!
உரிமம் இல்லாத குவாரிகளால் அரசுக்கு பல கோடி இழப்பு!
உரிமம் இல்லாத குவாரிகளால் அரசுக்கு பல கோடி இழப்பு!
PUBLISHED ON : நவ 19, 2025 12:00 AM

''ப ல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்குது பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில், 33 ஊராட்சிகள் இருக்கு... இங்க, ஊராட்சி பொது நிதி மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதியில் தெருவிளக்கு, குடிநீர் குழாய் பதிக்கிறது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செஞ்சதுல, ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்கு பா...
''இது சம்பந்தமா நிறைய புகார்கள் வரவே, விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி, ஐந்து அதிகாரிகள் அடங்கிய குழுவை கலெக்டர் மிருணாளினி அமைச்சாங்க... இந்த குழுவினர் கணக்கு, வழக்குகளை ஆய்வு செஞ்சதுல, எல்லா ஊராட்சிகள்லயும் சேர்த்து பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறதை கண்டுபிடிச்சாங்க பா...
''இதுக்கு, ஒன்றிய அதிகாரி ஒருத்தர் தான் மூளையா இருந்திருக்கார்... இவரது தம்பி நடத்துற கடையிலயே எல்லா பொருட்களையும் வாங்கி, கூடுதல் விலைக்கு பில் போட்டிருக்காங்க பா...
''இந்த அதிகாரி மீது ஏற்கனவே லஞ்ச வழக்கு ஒண்ணு நிலுவையில இருக்கு... அப்படியிருந்தும், அசராம புகுந்து விளையாடி இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''அறிவழகன், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணா, ''சீட்டுக்கு முட்டி மோதறா ஓய்...'' என்றார்.
''எந்த தொகுதியிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தேனி வடக்கு மாவட்ட, தி.மு.க., மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் பாண்டியராஜ்... இவர், பெரியகுளம் - தனி தொகுதியில், 2021 தேர்தல்ல சீட் கேட்டும், கிடைக்கல ஓய்...
''இந்த முறை எப்படியும் சீட் வாங்கிடணும்னு குறியா இருக்கார்... சமீபத்துல, தன் மருத்துவமனை வளாகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி இலவச பிசியோதெரபி மருத்துவமனை திறப்பு விழாவை தடபுடலா நடத்தினார் ஓய்...
''இதுல, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பெரியசாமி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியை பங்கேற்க வச்சு, தன் செல்வாக்கை காட்டியிருக்கார்... இதனால, வெறுத்து போயிருக்கும் பெரியகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணகுமார் இந்த நிகழ்ச்சியை புறக்கணிச்சிட்டார்... 'வர்ற தேர்தல்ல யாருக்கு சீட்'னு தொகுதியில பட்டிமன்றமே நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''லைசென்ஸ் எடுத்து தொழில் பண்றவங்க புலம்புறாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.
''எந்த தொழிலை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டத்தில், 75 கல் குவாரிகள் இருக்கு... இதுல, 24 குவாரிகளை தவிர்த்து, 51 குவாரிகள் முறைகேடா தான் இயங்குது... இதன் உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு, 'கவனிப்பு' செஞ்சிடுறதால, எந்த தடையும் இல்லாம குவாரிகள் செயல்படுதுங்க...
''அதே நேரம், லைசென்ஸ் வாங்கி குவாரி நடத்துறவங்க, 'நடை சீட்டு, பர்மிட் கட்டணம், ஜி.எஸ்.டி., வரி, நிலவியல் வரிகள், ராயல்டின்னு அரசுக்கு பல கோடி ரூபாயை கட்டுறோம்... ஆனா, எந்த உரிமமும் வாங்காம குவாரி நடத்துறவங்களால, அரசுக்கு கோடிக்கணக்குல வருவாய் இழப்பு ஏற்படுறதை யாருமே கண்டுக்கலையே'ன்னு புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

