/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முடக்கிய நகரமைப்பு குழு மூலம் மும்முர வசூல்!
/
முடக்கிய நகரமைப்பு குழு மூலம் மும்முர வசூல்!
PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

மெதுவடையை கடித்தபடியே, ''கட்டி முடிச்சு பல மாதங்கள் ஆகியும் திறக்காம இருக்காவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்டடத்தை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாவட்டம், பேரூர் பட்டீசுவர சுவாமி கோவில்ல, கோடிக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி அன்னதானக் கூடம் கட்டியிருக்காவ... அதோட, தர்ப்பண மண்டபத்துக்கான நுழைவு வாயிலும் கட்டியிருக்காவ வே...
''ஆனாலும், இன்னும் திறந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடாம இருக்காவ... 'வீடியோ கான்பரன்ஸ் வழியா முதல்வர் திறந்து வைப்பார்'னு உள்ளூர் மக்கள் எதிர்பார்த்தாவ... ஆனா, உள்ளூர் அரசியல்வாதிகள் மத்தியில் நிலவும் பனிப்போரால, திறப்பு விழா லேட்டாகுது... இதனால, பக்தர்கள் தான் பாதிக்கப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஈமச்சடங்கு தொகை கிடைக்காம தவிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக அரசிடம் பென்ஷன் வாங்கறவாளிடம், 'பேமிலி செக்யூரிட்டி பண்ட்' என்ற அடிப்படையில, ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் பிடிச்சுப்பா... பென்ஷன் வாங்கறவா இறந்துட்டா, அவாளுக்கு ஈமச்சடங்கு செய்றதுக்கு, அவரது ரத்த சொந்தங்கள் மனு குடுத்தா, 50,000 ரூபாய் குடுப்பா ஓய்...
''இதுக்காக, அரசு கருவூலத்தில், தனியா ஒரு தலைப்புல கணக்கு பராமரிச்சுண்டு இருந்தா... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நிதித்துறை செயலர் உத்தரவுப்படி, அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் நிர்வாக வசதிக்காக, இந்த கணக்கை ஒருங்கிணைச்சா ஓய்...
''இதுக்காக, அந்தந்த செலவு கணக்குகள் சார்ந்த தலைப்புல புதுசா, 'சாப்ட்வேர்' உருவாக்கினா... இதுல, ஈமச்சடங்கு தொகை வழங்கும் கணக்கின் பெயரை மாத்திட்டதால, ஈமச்சடங்கு தொகையை குறிப்பிட்ட காலத்தில் யாராலும் வாங்க முடியல...
''கிட்டத்தட்ட, 1,500 குடும்பத்தினர் இந்த தொகையை கேட்டு, சென்னை நந்தனத்துல இருக்கற ஓய்வூதியர் இயக்குநர் அலுவலகத்துக்கு நடையா நடந்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முடக்கப்பட்ட குழு பெயர்ல, 'கட்டிங்' வசூல் நடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவரா, மாநகர தி.மு.க., புள்ளியும், உறுப்பினர்களா ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், 14 பேரும் இருந்தாங்க...
''மாநகராட்சி கமிஷனர், நகரமைப்பு அதிகாரிகள் பார்வைக்கு போகாமலே, அரசு முத்திரையுடன் கட்டட நிறைவு சான்றுகளை வழங்கியதா, இந்த குழு மீது புகார்கள் வந்துச்சு பா...
''இதனால, போன வருஷம் மாநகராட்சி கமிஷனரா இருந்த மதுபாலன், இந்த குழுவை முடக்கிட்டாரு... இது சம்பந்தமா, நகராட்சி நிர்வாக இயக்குநருக்கும் அவர் புகார் அனுப்பி, அதன் மீது விசாரணையும் நடந்துச்சு பா...
''ஆனாலும், உள்ளூர் ஆளுங்கட்சி புள்ளிகள் முட்டுக்கட்டை போடவே, விசாரணையை கிடப்புல போட்டுட்டாங்க...
''ஆனா, இப்ப 'நகரமைப்பு குழு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துடுச்சு'ன்னு சொல்லி, கட்டட உரிமையாளர்களிடம், 'கட்டிங்' வசூலிக்க துவங்கிட்டாங்க... இதனால, நகரமைப்பு அதிகாரிகள் அதிர்ச்சியில இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''மூவேந்திரன் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.