/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆய்வுக்கு போனாலே, ' காணிக்கை ' கேட்கும் கல்வி அதிகாரி!
/
ஆய்வுக்கு போனாலே, ' காணிக்கை ' கேட்கும் கல்வி அதிகாரி!
ஆய்வுக்கு போனாலே, ' காணிக்கை ' கேட்கும் கல்வி அதிகாரி!
ஆய்வுக்கு போனாலே, ' காணிக்கை ' கேட்கும் கல்வி அதிகாரி!
PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

''அதிகாரியை செருப்பால் அடிப்பேன்னு மிரட்டினாரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாருவே அந்த ஆளுங்கட்சி பிரமுகர்...'' என, பட்டென கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, 113வது வார்டுல அடங்கிய, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணிகள் சமீபத்துல நடந்துச்சு... தொகுதி முக்கிய புள்ளிகள், தி.மு.க.,வின் பகுதி, வட்ட நிர்வாகிகள் கூடியிருந்தாங்க பா...
''மாநகராட்சி அதிகாரி கள், ஊழியர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிட்டு இருந்த வட்ட நிர்வாகி ஒருத்தர் திடீர்னு, 'டென்ஷன்' ஆகி, ஒரு அதிகாரியை பார்த்து, 'செருப்பால் அடிப்பேன்'னு திட்டியிருக்காரு... இதை, தொகுதியின் முக்கிய புள்ளியும், மற்ற கட்சி நிர்வாகிகளும் வேடிக்கை பார்த்தாங்களே தவிர, 'அரசு அதிகாரியை அப்படி பேசலாமா'ன்னு கண்டிக்கல...
''வட்ட நிர்வாகியின் அடாவடியால, காலம் காலமா, தி.மு.க.,வுலயே நீடிச்ச கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த, 25 பேர், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டம் பிடிச்சுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தன் பாக்கெட்டை நிரப்பி, அரசுக்கு இழப்பை ஏற்படுத்துதாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சியின் முக்கிய பதவியில், ஆளுங்கட்சி புள்ளி இருக்காரு... இந்த பதவியை, காங்கிரசுக்கு தான் முதல்ல ஒதுக்குனாவ வே...
''ஆனா, இவர் குறுக்கு வழியில புகுந்து, பதவியை தட்டி பறிச்சுட்டாரு... இந்த பகுதியில, நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அரிசி ஆலை, கொப்பரை உற்பத்தின்னு பல தொழில்கள் நடக்கு வே...
''தமிழக அரசு அறிவிச்சிருக்கிற, மறுசீரமைப்பு வரி ஆய்வு முறைப்படி, இந்த தொழில்களை செய்றவங்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் லட்சக்கணக்குல வரி விதிக்கிறாவ... அதே கையோட, 'நகராட்சி முக்கிய புள்ளிக்கு கப்பம் கட்டிட்டா, வரியை குறைச்சிடலாம்'னு அதிகாரிகளே ஐடியா வும் குடுத்துட்டு போயிடுதாவ வே...
''அதே மாதிரி, முக்கிய புள்ளியை பார்த்து, கப்பம் கட்டிட்டா, அரசுக்கு கட்ட வேண்டிய வரியை, அடிமாட்டு ரேட்டுக்கு குறைச்சு குடுத்துடுதாரு... இப்படியே அவர் லட்சக்கணக்குல வாரி குவிச்சிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் வசூல் தகவல் ஒண்ணு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சீக்கிரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்ட கல்வி துறையில், ஒரு பெண் அதிகாரி பல வருஷமா இருக்காங்க... இவங்களது வசூல் வேகத்தை பார்த்து, சக அதிகாரிகளே, 'ஷாக்' ஆகி நிக்கறா ஓய்...
''சமீபத்துல, மூணு மாசம் லீவ் போட்டுட்டு, வெளிநாடுகளுக்கு, 'டூர்' போயிட்டு வந்திருக்காங்க... அந்த செலவை எடுக்கற முயற்சியில, தீவிரமா களம் இறங்கிட்டாங்க ஓய்...
''அரசு, தனியார் பள்ளிகள்னு பாரபட்சம் பார்க்காம, ஆய்வுக்கு போனாலே, 'காணிக்கை' கேக்கறாங்க... தேர்வு மையம் கேட்டு விண்ணப்பிக்கற தனியார் பள்ளிகளிடம் கணக்கு வழக்கில்லாம வசூல் நடத்தறாங்க ஓய்...
''அதுவும் இல்லாம, ஆசிரியர்களுக்கான பலன்கள், பணியிட மாறுதல்னு எந்த பைலா இருந்தாலும் இவங்களுக்கு, 'வெயிட்' வச்சா தான், காரியம் வெற்றிகரமா முடியும் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் காலியானது.