/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மனுதாரரை மிரட்டிய தகவல் கமிஷனர்!
/
மனுதாரரை மிரட்டிய தகவல் கமிஷனர்!
PUBLISHED ON : நவ 16, 2025 12:22 AM

மெதுவடையை கடித்தபடியே, ''ஆளுங்கட்சி சங்கத்துல, கோஷ்டிப்பூசல் உச்சத்துல இருக்கு வே...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தேர்தல் சமீபத்துல நடந்துச்சு... 'இதுல ஜெயிச்ச பலர், அ.தி.மு.க.,வுல இருந்து வந்தவங்க'ன்னு சங்கத்துல பலர் முணுமுணுக்காவ வே...
''ஜெயிச்சு வந்தவங்க, முதல் வேலையா, சங்க உறுப்பினர்களின் போனஸ்ல, நன்கொடைன்னு சொல்லி, 800 ரூபாயை பிடிச்சிட்டாவ... அடுத்த வேலையா, தேர்தல்ல தங்களை எதிர்த்து போட்டியிட்டவங்களை பழிவாங்குதாவ வே...
''அவங்களது வார விடுப்பை மாத்துறது, 'ரூட்'டை மாத்துறதுன்னு மன உளைச்சலை குடுக்காவ... இதனால, தொ.மு.ச.,வுல பல வருஷங்களா இருக்கிறவங்க புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை எடுத்திருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தேசிய ஜனநாயக கூட்டணியில், இப்போதைக்கு அ.தி.மு.க., - பா.ஜ., இருக்கு... பா.ம.க., வர்றதும், உறுதியாகிடுத்து ஓய்...
''பா.ஜ., மேலிடம், தமிழக கள நிலவரம் பத்தி, மத்திய உளவுத்துறை வாயிலா, 'சர்வே' எடுத்திருக்கு... அதுல, 'தி.மு.க., அணிக்கு இணையான பலம், தே.ஜ., கூட்டணிக்கு இல்லை தான்... ஆனாலும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால, தி.மு.க., மீது மக்களுக்கு நிறைய அதிருப்தி இருக்கு'ன்னு அறிக்கை குடுத்திருக்கு ஓய்...
''அதோட, பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு அதிக ஓட்டுகள் விழக்கூடிய தொகுதிகளின் விபரங்களையும், உளவுத்துறை பட்டியல் போட்டு அனுப்பியிருக்கு... 'அந்த தொகுதிகள்ல கூடுதல் கவனம் செலுத்தி, கடுமையா உழைச்சா, வெற்றி உறுதி'ன்னும் சொல்லியிருக்கு... இதை எல்லாம், சம்பந்தப்பட்ட கட்சி தலைமைகளிடம், பா.ஜ., மேலிடம் தெரிவிச்சு, தேர்தல் பணிகளை முடுக்கி விடும்படி உத்தரவு போட்டிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மிரட்டுற மாதிரி விசாரணை நடத்தியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியர்களின் வருகை பதிவேடு, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய ஆவணங்களை கேட்டு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர், மாவட்ட தகவல் அலுவலருக்கு மனு அனுப்பியிருந்தாருங்க...
''அவர், கல்லுாரி ஆவணங்களை பார்வையிட அனுமதி மறுத்துட்டார்... மனுதாரர், மாநில தகவல் ஆணையத்துக்கு மேல்முறையீடு செஞ்சாருங்க...
''சமீபத்துல இந்த வழக்கு, தகவல் கமிஷனர் முன்னிலையில் விசாரணைக்கு வந்திருக்கு... நம்பிக்கையோட போன மனுதாரருக்கு அதிர்ச்சி தான் கிடைச்சதுங்க...
''ஏன்னா, தகவல் கமிஷனர், 'அரசு கல்லுாரி ஆவணங்கள், அலுவலக ஊழியர்களின் பதிவேடுகளை நீ ஏம்பா பார்க்கணும்'னு மனுதாரரிடம் மிரட்டல் பாணியில் கேட்டிருக்கார்... அதுவும் இல்லாம, 'இந்த வழக்கை இதோட முடிச்சி வச்சிடுறேன்'னும் சொல் லிட்டாருங்க...
''வெறுத்து போன மனுதாரர், 'அரசு கல்லுாரியில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தணும்'னு தமிழக கவர்னர், மாநில தலைமை தகவல் கமிஷனருக்கு புகார் அனுப்பியிருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''பிரியகுமார், நாளைக்கு பார்க்கலாம் பா...'' என, நண்பரிடம் அன்வர்பாய் விடைபெற, பெரியவர்கள் கிளம்பினர்.

