PUBLISHED ON : ஜூலை 05, 2026 12:18 AM

“ப தவி உயர்வு இழுபறியா இருக்குதுங்க...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தமிழகத்துல, 16 மாவட்டங்கள்ல உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எனும் ஏ.பி.ஆர்.ஓ., பணியிடங்கள் காலியா கிடக்குது... அதுபோல, 38 மாவட்டங்கள்ல விளம்பர பிரிவு ஏ.பி.ஆர்.ஓ., பணியிடங்களும் காலியா கிடக்குதுங்க...
“இதுல, 2016ல் ஏ.பி.ஆர்.ஓ.,வா நியமிக்கப்பட்ட 40 பேருக்கு, 10 வருஷங்களா பதவி உயர்வே வழங்கல... ஏன்னா, பி.ஆர்.ஓ.,க்களா இருந்து உதவி இயக்குநர் பதவி உயர்வு கிடைச்ச சிலர், பி.ஆர்.ஓ., பணியில் தான், 'கட்டிங்' அடிக்க முடியும்னு, பதவி உயர்வை நிராகரிச்சுட்டாங்க...
“இவங்க, பி.ஆர்.ஓ., பதவியை விட்டு நகராம இருக்கிறதால, ஏ.பி.ஆர்.ஓ.,க்கள் பதவி உயர்வுல சிக்கல் நீடிக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“திராவிட கட்சிகளின் ஆதரவாளர்கள் அதிகமா இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“எந்த துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“விஜய் முதல்வரா பதவியேற்ற கையோட, உளவுத்துறை ஐ.ஜி.,யா இருந்த செந்தில்வேலனை மாத்திட்டு, நேர்மையான அதிகாரியான அஸ்ரா கார்க்கை அந்த பதவியில நியமிச்சாரே... தலைமையை மாத்திட்டாலும், கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இன்னும் அ.தி.மு.க., - தி.மு.க., அனுதாபிகளாவே இருக்காங்க பா...
“குறிப்பா, திருச்சி சிட்டியில் தி.மு.க., ஆதரவாளரும், புறநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க., ஆதரவு பெண் அதிகாரியும் பல வருஷங்களா இதே பதவியில இருக்காங்க... இவங்க, இந்த ரெண்டு கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகள் பத்தி, மேலிடத்துக்கு சரியான தகவல்கள் தர்றது இல்ல... இதனால, 'ஒட்டுமொத்த உளவுத்துறையையும் மாத்தி அமைச்சா தான் மேலிடத்துக்கு நியாயமான அறிக்கைகள் போகும்'னு இந்த துறையில் இருக்கிற போலீசார் சொல்றாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, “பால்சாமி, உமா மகேஸ்வரி வீட்டுல, 'வெயிட்' பண்ணும்... 10 நிமிஷத்துல வந்துடுதேன்...” என கூறி வைத்தபடி, “இந்த போலீஸ் கதையையும் கேளுங்க வே...” என்றபடியே தொடர்ந்தார்...
“சென்னை, தாம்பரம் கமிஷனரக கட்டுப்பாட்டில், கிளாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் வருது... மறைமலை நகர்ல இருந்த போலீஸ்காரர் ஒருத்தர், சில மாசங்களுக்கு முன்னாடி கிளாம்பாக்கம் உளவுத்துறைக்கு மாறுதல்ல வந்தாரு வே...
“ஸ்டேஷன் எல்லைக்குள்ள நடக்கிற சட்டவிரோத செயல்களை கண்டுபிடிச்சு, போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறது தான் இவரது வேலை... ஆனா இவரோ, திருட்டுத்தனமா மது விற்கிறவங்க மற்றும் ஏழு மசாஜ் சென்டர்கள்ல மாசம் 10,000 ரூபாய் மாமூல் வாங்கிட்டு இருக்காரு வே...
“மசாஜ் சென்டர்ல மாமூல் வாங்குறது சம்பந்தமா, போலீஸ் அதிகாரியின் ஜீப் டிரைவருக்கும், உளவு போலீஸ்காரருக்கும் சமீபத்துல பெரிய சண்டையே வந்துட்டு... இந்த உளவு போலீஸ்காரர், ஒரு குற்றவாளியிடம், 'விவோ' மொபைல் போனையும் பரிசா வாங்கியிருக்காரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“தேவேந்திரன், இப்படி உட்காரும்... உமக்கும், பார்த்திபனுக்கும் என்ன ஓய் பிரச்னை... உம்மை பார்த்ததுமே தலைதெறிக்க ஓடறாரே...” என, நண்பரிடம் குப்பண்ணா பேச துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.
