/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தேசிய ஊரக வேலை திட்டத்தில் தொடரும் முறைகேடு!
/
தேசிய ஊரக வேலை திட்டத்தில் தொடரும் முறைகேடு!
PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

“பி ரதமர் மோடியை சந்திச்சு, கூட்டணி பத்தி பேசிட்டு வந்திருக்காரு வே...” என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“த.மா.கா., தலைவர் வாசன், ராஜ்யசபா எம்.பி.,யா இருக்காரே... சமீபத்துல, பார்லிமென்ட் கூட்டத்துக்காக டில்லி போயிருந்தவர், பிரதமர் மோடியை தனியா சந்திச்சு பேசியிருக்காரு வே...
“அப்ப, 'தமிழக சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை சேர்த்து, மெகா கூட்டணியா மாத்தணும்'னு வலியுறுத்தியிருக்காரு... அதை, பிரதமரும் ஆமோதிச்சிருக்காரு வே...
“ அப்புறமா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பார்த்து பேசியிருக்காரு... அப்ப, 'கோவை, பல்லடம், காங்கேயம், வெள்ளக் கோவில் வழியா, 70 கி.மீ.,க்கு விளைநிலங்கள்ல எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்துக்கு பதிலா, தேசிய நெடுஞ்சாலை ஓரமா குழாய்களை பதிக்கணும்...
''கொங்கு மண்டலத்துல ஜவுளி வர்த்தகத்துக்கு, ஜி.எஸ்.டி., தொகையை குறைக்கணும்'னு வலியுறுத்திட்டு வந்திருக்காரு வே...” என்றார், அண்ணாச்சி.
“பேருக்கு முன்னாடியே ஊரை சேர்த்துக்கிட்டாரு பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“சமீபத்துல ஒரு கூட்டத்துல பேசிய, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'வர்ற தேர்தல்ல சிவகாசியில் தான் போட்டியிடுவேன்'னு கண்ணீர்மல்க அறிவிச்சாரே... போன வாரம், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, விருதுநகர் மாவட்டத்துல சுற்றுப்பயணம் போயிருந்தாரு பா...
“அவரை வரவேற்று வச்சிருந்த பேனர்கள், போஸ்டர்கள்ல எல்லாம், ' சிவகாசி ராஜேந்திர பாலாஜி'ன்னே குறிப்பிட்டிருந்தாரு...
''இதன் மூலமா, 'சிவகாசியை மறுபடியும் எனக்கே தரணும்'னு பழனிசாமிக்கு உணர்த்திட்டாராம்... 'தி.மு.க.,வுல சாத்துார் ராமச்சந்திரன் மாதிரி, அ.தி.மு.க.,வுல இனி சிவகாசி ராஜேந்திர பாலாஜி'ன்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியத்தில் இருக்கற கொண்டம்பட்டி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பணிக்கு வராதவாளோட வேலை அட்டையை பயன் படுத்தி, நிதி முறைகேடு செய்திருக்கா... இது சம்பந்தமா விசாரணை நடத்திய திட்டத்தின் குறை தீர்வாளர், முறை கேடு நடந்துள்ளதை உறுதி செய்தார் ஓய்...
“அதோட, 'இது சம்பந்தமா ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்'னு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை அறிக்கையும் அனுப்பினார்... ஆனா, அறிக்கையை மாவட்ட நிர்வாகம் ஓரமா துாக்கி வச்சிடுத்து ஓய்...
“இது ஒரு சாம்பிள் தான்... தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சம்பந்தமா பல ஊராட்சிகள்ல இருந்தும் புகார்கள் குவியறது... இதுல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காம அலட்சியம் காட்டறதால, முறைகேடுகள் தொடருது ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
“நடவடிக்கை எடுத்தா ஆளுங்கட்சியினரிடம் இருந்து முட்டுக்கட்டை வரும்னு, சும்மா இருக்காவளோ...” என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.