/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கருத்தரங்கம் செலவில் கமிஷன் அடிக்கப்பட்டதா?
/
கருத்தரங்கம் செலவில் கமிஷன் அடிக்கப்பட்டதா?
PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

''இன்னும் பதவியில ஒட்டிண்டு இருக்கார் ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்துல வடமாநில போலீஸ் அதிகாரி ஒருத்தர், கைதிகளின் பல்லை பிடுங்கி, பல்லாங்குழி ஆடினாரோல்லியோ... இது, பெரிய சர்ச்சையாகி, சம்பவத்துல தொடர்பே இல்லாத எஸ்.பி., சரவணன் உட்பட பல அதிகாரிகளை அதிரடி இடமாறுதல் பண்ணினாளே ஓய்...
''இதுல, நெல்லை மாவட்ட தனிப்பிரிவு அதிகாரி மட்டும் தப்பிட்டார்... அவர் தான், சம்பவம் பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்திருக்கணும் ஓய்...
''அவர் வேலையை சரியா செய்யாம இருந்ததுக்கு, அவரையும் நியாயப்படி டிரான்ஸ்பர் பண்ணியிருக்கணும்... ஆனாலும், உளவுத்துறை உயர் அதிகாரிகள் ஆசியோட, மூணு வருஷம் தாண்டியும் இன்னும் அதே பதவியில ஒட்டிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ராஜேஷ், இதையும் கேட்டுட்டு கிளம்புங்க...'' என, நண்பரை இழுத்து பிடித்த அன்வர்பாய், ''அரசு தந்த பொருட்கள் எங்க போச்சுன்னு தெரியல பா...'' என்றார்.
''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ்ல பணியாற்றிய துணை கலெக்டர், தாசில்தார்னு 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு, ஏழு வருஷத்துக்கு முன்னாடி, விலை உயர்ந்த லேப்டாப், டேப் உள்ளிட்ட சாதனங்களை குடுத்தாங்க பா...
''காலப்போக்குல பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், இந்த லேப்டாப், டேப்களை கையோட எடுத்துட்டு போயிட்டாங்க... ஆனா, இது தொடர்பான எந்த ஆவணங்களும் கலெக்டர் ஆபீஸ்ல இல்ல பா...
''புதுசா வந்த அதிகாரிகளும் இது பத்தி கேட்காததால, அந்த லேப்டாப்களை எல்லாம், வேற இடங்கள்ல பணியில சேர்ந்த அதிகாரிகள் பயன்படுத்துறாங்களா அல்லது வீட்டுக்கே எடுத்துட்டு போயிட்டாங்களான்னு தெரியல பா...'' என்றார், அன்வர்பாய்.
''காலநிலை மாற்றத்தை வச்சு, இன்னும் எத்தனை லட்சம் ரூபாய், 'அடிக்க' போறாங்கன்னு தெரியல வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக வனத்துறை சார்புல, காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம், சென்னையில பிரபல நட்சத்திர ஹோட்டல்ல இரண்டு நாள் நடந்துச்சு... மாநிலம் முழுக்க இருந்து, வன பாதுகாவலர்கள், டி.எப்.ஓ.,க்கள்னு 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துக்கிட்டாவ வே...
''இதுல, உயரதிகாரிகளுக்கு ஓரளவு நல்ல ஹோட்டல்கள்ல அறைகள் புக் பண்ணியிருக்காவ... டி.எப்.ஓ.,க்களுக்கு மட்டமான லாட்ஜ்கள்ல ரூம் போட்டு குடுத்துட்டாவ வே...
''ஸ்டார் ஹோட்டல்ல நல்ல சாப்பாடும், 'சரக்கு'ம் குடுத்துட்டு, ரூம்ல மட்டும் கஞ்சத்தனம் பண்ணிட்டதால, பல அதிகாரிகள் கொசுக்கடியிலயும், புழுக்கத்துலயும் அவதிப்பட்டிருக்காவ வே...
''இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்துக்கு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கு... ஆனா, கூட்டி கழிச்சு பார்த்தா, 50 - 60 லட்சம் வரைதான் செலவாகியிருக்கும் வே...
''இதனால, 'இந்த கருத்தரங்கம் நடத்துனதுல யார், யார் எவ்வளவு கமிஷன் அடிச்சாங்க... செலவு போக மிச்ச பணத்தை அரசுக்கு திருப்பி அனுப்புனாங்களா'ன்னு துறை அதிகாரிகள் பலரும் புலம்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

