/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.26 கோடியை ' ஆட்டை ' போட முயற்சியா?
/
ரூ.26 கோடியை ' ஆட்டை ' போட முயற்சியா?
PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

''எதுல தான் சிக்கனம் பார்க்கணும்னு விவஸ்தைஇல்லையா பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யாரை சொல்றீங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.
''திண்டுக்கல்ல, போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகம் இருக்கு... இங்க பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் படிக்கிறதுக்காக, தினமும் நாளிதழ்கள் வந்துட்டு இருந்துச்சு பா...
''கடந்த சில நாட்களா,முக்கியமான காலை நாளிதழ்கள்ல, அரசு பஸ்கள் பழுதாகி ரோட்டுல நிற்கும் செய்திகள், படங்களுடன் வெளியானது... இதை பார்த்துட்டு, அலுவலக உயர் அதிகாரி, 'டென்ஷன்' ஆகிட்டாரு பா...
''இதனால, 'காலை நாளிதழ்கள் வாங்குறதைஉடனே நிறுத்துங்க'ன்னுஅதிரடி உத்தரவு போட்டுட்டாரு... இது பத்தி, ஊழியர்கள் கேட்டப்ப, 'பண சிக்கனத்துக்காக நாளிதழ்கள் வாங்குறதை நிறுத்திட்டோம்'னு விளக்கம் குடுத்திருக்காங்க... இதனால, ஊழியர்கள் எல்லாம் வெறுத்து போயிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பதவி வாங்கியவங்களுக்கு, 'டோஸ்' விழுந்திருக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியிலங்க...''என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக காங்கிரஸ் அணிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டம், சமீபத்துல சென்னை சத்தியமூர்த்தி பவன்ல நடந்துச்சு... மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் கலந்துக்கிட்டாரு வே...
''இதுல, ஆறு மாசமா, சத்தியமூர்த்தி பவன் பக்கமே வராம இருந்ததா, விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்களானபிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் நவீன், மாணவரணி மாநில தலைவர் சின்னதம்பிக்கு செமத்தியா, 'டோஸ் விட்டிருக்காரு வே...
''அப்ப, 'முக்கியமான பதவிகளை போராடி வாங்கிட்டு, கட்சி ஆபீஸ் பக்கம் வராம இருந்தா எப்படி... அப்புறம் எப்படி கட்சி பணிகளை செய்வீங்க... கடந்த ஆறு மாசமா நீங்க ரெண்டு பேரும் பங்கேற்ற கட்சி விழாக்கள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் குறித்த முழு விபரங்களையும் எனக்கு அறிக்கையா குடுங்க'ன்னு கிடுக்கிப்பிடி போட்டுட்டு போயிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''மொத்தம், 26 கோடி ரூபாய் விவகாரம் மர்மமா இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சென்னைக்கு பக்கத்துல இருக்கற மாவட்டத்துல, தொழிற்சாலைகள் அதிகமா இருக்கற ஒன்றியம் ஒண்ணு இருக்கு... முன்னாள் பிரதமரால, இந்த ஊர் ரொம்பவே பிரபலமானது ஓய்...
''இங்க இருக்கற பி.டி.ஓ., ஆபீசுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, வளர்ச்சி பணிகளுக்காக, உரிமை தொகை என்ற பெயரில்,பன்னாட்டு கம்பெனிகள்பல கோடி ரூபாயை குடுத்திருக்கு... இப்படி, 26 கோடி ரூபாய் வந்திருக்கு ஓய்...
''இந்த பணத்தை, பி.டி.ஓ., அதிகாரிகள், இந்தியன் வங்கியில கணக்கு துவங்கி, அதுல போட்டு வச்சிருக்கா... ஆனா, பி.டி.ஓ., ஆபீசின் எந்த அதிகாரப்பூர்வ கணக்கிலும், இந்த நிதியை காட்டல ஓய்...
''இதனால, ஆடிட்லயும் இந்த நிதி விபரங்கள் வரது இல்ல... வங்கியில இருக்கற பணத்துல இதுவரை எவ்வளவு செலவாகியிருக்குன்னும் தெரியல ஓய்...
''இந்த நிதியை பி.டி.ஓ., ஆபீஸ் கணக்குல கொண்டு வரணும்னு ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும், பி.டி.ஓ., ஆபீஸ் அதிகாரிகள் அதை லட்சியம் பண்ணல... இதனால நிதியை, 'ஆட்டை' போட முயற்சி நடக்கறதோன்னு சந்தேகம் வர்றது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

