/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோவை தொகுதி வெற்றி குறித்து ஆளாளுக்கு 'சர்வே!'
/
கோவை தொகுதி வெற்றி குறித்து ஆளாளுக்கு 'சர்வே!'
PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''பா.ஜ.,வினரின் தேர்தல் பணிகளை பார்த்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரே வாயை பிளந்துட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை லோக்சபா தொகுதியில பா.ஜ., வலுவா இல்லன்னு திராவிட கட்சியினர் அசால்டா இருந்தாங்க... ஆனா, தேர்தல் நெருங்க, நெருங்க பா.ஜ.,வினர் வேகமாகிட்டாங்க... அதுவும் அமித் ஷா வந்துட்டு போனதும், தொண்டர்கள் மத்தியில உற்சாகம் பல மடங்காகிடுச்சுங்க...
''தொகுதி முழுக்க எல்லா ஓட்டுச்சாவடிகளுக்கும் பூத் ஏஜன்ட்களை நியமிக்க முடியுமா... முஸ்லிம்கள் அதிகமா இருக்கிற வார்டுகள்ல ஏஜன்ட்கள் கிடைப்பாங்களான்னு பா.ஜ., நிர்வாகிகளே முதல்ல தயங்குனாங்க... ஆனா, மாநகர பா.ஜ., தலைவரான மகா சுதீந்திரன், 966 ஓட்டுச்சாவடிகளுக்கும் ஏஜன்ட்களை நியமிச்சுட்டாருங்க... 'தாமரை சேவகன்' என்ற அமைப்பு மூலம் ஆட்களை சேர்த்தவர், குறிப்பிடத்தக்க அளவுல முஸ்லிம்களையும் பூத் ஏஜன்டா நியமிச்சதை பார்த்து, திராவிட கட்சியினரே அசந்து போயிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மாவட்ட செயலர்கள் தலைக்கு மேல கத்தி தொங்குது வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தி.மு.க.,வுல தான்... லோக்சபா தேர்தல்ல, இந்த முறை சென்னையில ஓட்டுப்பதிவு குறைஞ்சிட்டுல்லா... சென்னையின் மூணு தொகுதிகள்லயும், தி.மு.க., சிட்டிங் எம்.பி.,க்கள் தான் போட்டியிட்டாவ வே...
''இவங்களை லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்துல ஜெயிக்க வைக்கணும்னு, மாவட்ட செயலர்களுக்கு தலைமை உத்தரவு போட்டிருந்துச்சு... ஆனாலும், ஓட்டுப்பதிவு குறைஞ்சிட்டு... அதுவும், தயாநிதி போட்டியிட்ட மத்திய சென்னையில ரொம்பவே குறைஞ்சு போனது, தலைமைக்கு கவலையை குடுத்திருக்கு வே...
''தலைமை தந்த பணத்தை மாவட்ட செயலர்கள், பகுதி, வட்ட நிர்வாகிகள் சரியா செலவு பண்ணலையாம்... 'விரட்டி வேலை வாங்காததால, தொண்டர்களும் சுணக்கமா இருந்தது தான் ஓட்டு சதவீதம் குறைய காரணம்'னு, ஆளுங்கட்சி தலைமைக்கு ரிப்போர்ட் போயிருக்கு...
''இதனால, ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், சென்னையில பல மாவட்டச் செயலர்கள் தலை உருளும்னு அறிவாலய வட்டாரங்கள்ல பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆளாளுக்கு சர்வே எடுத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தேர்தல் வெற்றி குறித்து தானே பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... கோவை லோக்சபா தொகுதியில அண்ணாமலை ஜெயிப்பாரா என்பது தான் தமிழகத்துல, 'ஹாட் டாபிக்'கா இருக்கு... இது சம்பந்தமா, பா.ஜ., தரப்புல இருந்து தனியார் ஏஜன்சி மூலமா ஒரு சர்வே எடுத்திருக்கா ஓய்... அதுல, 'கம்மியான ஓட்டுகள் மார்ஜின்ல அண்ணாமலை கரையேறிடுவார்'னு தகவல் வந்திருக்கு...
''அதே மாதிரி, தி.மு.க., தரப்பும் ஒரு டீமை களமிறக்கி, சட்டசபை தொகுதிகள் வாரியா சர்வே எடுத்திருக்கு... அதுல, 'தி.மு.க., வேட்பாளர் வெற்றி உறுதி'ன்னு தலைமைக்கு ரிப்போர்ட் போயிருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அது சரி... தங்களை நியமித்த கட்சிக்கு எதிரா ரிப்போர்ட் குடுத்துட்டா, பேமென்ட் வராதுன்னு அந்த ஏஜன்சிகள் நினைச்சிருக்கும் போல...'' என, சிரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

