/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.4.50 கோடியை பாதுகாக்க திணறும் பரிதாபம்!
/
ரூ.4.50 கோடியை பாதுகாக்க திணறும் பரிதாபம்!
PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''அமைச்சர் விஷயத்துல, அடக்கி வாசிக்கிறாங்க பா...'' என, முதல் ஆளாக பேச்சை துவக்கினார் அன்வர்பாய்.
''யார், எதுக்கு அடக்கி வாசிக்கிறாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''அமைச்சர் நேருவின், நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த பணி நியமனங்கள்ல, 800 கோடி ரூபாய் ஊழல் நடந்துட்டதா புகார் எழுந்திருக்கே... நேரு, திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்காரு பா...
''இது, திருச்சி மாநகர் மாவட்டத்துல வருது... இந்த மாவட்ட அ.தி.மு.க.,வினர், நேரு துறையில நடந்த ஊழலை கண்டிச்சு, எந்த போராட்டமும் நடத்தாம கமுக்கமா இருக்காங்க பா...
''ஏன்னா, 'இந்த மாவட்ட அ.தி.மு.க., முக்கிய புள்ளி, அமைச்சருடன் மறைமுக நட்புல இருக்கார்... அதனால தான், தலைமையிடம் அனுமதி வாங்கி, நேருவுக்கு எதிரா போராட்டம் நடத்தாம அடக்கி வாசிக்கிறார்... சாக்கடை அடைப்பு, குடிநீர் பிரச்னைக்கு எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தியவர், 800 கோடி ரூபாய் ஊழலை கண்டுக்காதது ஏன்'னு, அந்த கட்சி தொண்டர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சீனிவாசன், தள்ளி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''அமைச்சர் ஆதரவாளர்கள் உற்சாகமா இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எந்த அமைச்சரை சொல்லுதீரு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி தி.மு.க., பொறுப்பாளரா, சில மாசங்களுக்கு முன்னாடி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நியமிக்கப்பட்டார்... ஆனா, திருப்பூர் மாவட்ட அமைச்சர் சாமிநாதன் மற்றும் தெற்கு மாவட்ட செயலரா இருந்த, அவரது ஆதரவாளர் பத்மநாபனை தாண்டி, சக்கரபாணியால எதுவும் பண்ண முடியல ஓய்...
''இதனால தி.மு.க., தலைமை, பத்மநாபனை கிழக்கு மாவட்ட செயலர் பதவிக்கு மாத்திட்டு, தெற்கு மாவட்ட செயலரா, சக்கரபாணியின் தீவிர ஆதரவாளரான பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமியை நியமனம் பண்ணிட்டா... 'இது, எங்களுக்கு முதல் வெற்றி... உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகள்ல, வேட்பாளர் தேர்வு முதல் அனைத்து தேர்தல் பணிகள்லயும் சக்கரபாணி கை ஓங்கிடும்'னு அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துல இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இதுவரை, 4.50 கோடி ரூபாய் தேத்திட்டாவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டத்துல விதிகளை மீறிய, 13 கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களிடம், சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் குழு, 15 கோடி ரூபாய், 'கட்டிங்' கேட்டதா பேசியிருந்தோமுல்லா... இதன்படி, எல்லாரும் சேர்ந்து இதுவரை, 4.50 கோடி ரூபாயை வசூல் பண்ணிட்டாவ வே...
''இதை, சென்னை அதிகாரிகளிடம் சொன்னப்ப, முழு தொகையையும் ரெடி பண்ணி, கோவையில இருக்கிற ஒரு பெண்மணியிடம் குடுக்க சொல்லியிருக்காவ... அதே நேரம், இப்ப வசூல் பண்ணிய, 4.50 கோடியை அமலாக்கத்துறை திடீர்னு ரெய்டு நடத்தி, அள்ளிட்டு போயிட்டா என்ன பண்றதுன்னு பயந்து போய், தினமும் ஒவ்வொரு வீடா மாத்தி மாத்தி பதுக்கி, பாதுகாத்துட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

