/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மளிகை கடை பெயரில் 30,000 மொபைல் போனுக்கு 'டெண்டர்!'
/
மளிகை கடை பெயரில் 30,000 மொபைல் போனுக்கு 'டெண்டர்!'
மளிகை கடை பெயரில் 30,000 மொபைல் போனுக்கு 'டெண்டர்!'
மளிகை கடை பெயரில் 30,000 மொபைல் போனுக்கு 'டெண்டர்!'
PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM

''இ துக்கெல்லாமா போலி பாஸ் தயார் பண்ணுவாங்க...'' என கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''என்ன விஷயம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, அவரது சொந்த ஊரான திருப்பூர்ல, சமீபத்துல பாராட்டு விழா நடந்துச்சு... 'திருப்பூர் பீப்பிள்ஸ் போரம்' என்ற அமைப்பு நடத்திய விழாவுக்காக, கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு மட்டும், வி.ஐ.பி., பாஸ்கள் குடுத்தாங்க...
''இதுல, பிரதான ஹால்ல உட்கார, ஆரஞ்ச் நிறத்திலும், பக்கத்து அறையில் திரையில விழாவை பார்க்கிறவங்களுக்கு பச்சை நிற பாஸ்களும் தயார் பண்ணியிருந்தாங்க... ஆரஞ்ச் கலர் பாஸ்கள்ல இருந்த, 'பார்கோடு'களை பாதுகாப்பு போலீசார், 'ஸ்கேன்' பண்ணி பார்த்தப்ப, 100 பாஸ்கள் போலின்னு தெரிய வந்துச்சுங்க...
''அதிர்ச்சியான போலீசார், அவங்களை எல்லாம் திருப்பி அனுப்பிட்டாங்க... 'பாராட்டு விழாவுக்கு கூடவா போலி பாஸ்கள் தயார் பண்ணுவாங்க'ன்னு போலீசார் தலையில அடிச்சுக்கிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தலா, 2,000 ரூபாயை வசூல் பண்ணிட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தஞ்சாவூர்ல, சமீபத்தில் ராஜராஜ சோழனின், 1040வது சதய விழா நடந்துச்சுல்லா... இதுல, 1,040 பரதநாட்டிய கலைஞர்கள் பெரியகோவில்ல நடன மாடினாங்க வே...
''இதுக்காக, அவங்களுக்கு ஒரு சான்றிதழும், ஒரு ஷீல்டும் குடுத்தாவ... அதேநேரம், ஒவ்வொரு நடன கலைஞரிடமும் தலா, 2,000 ரூபாயை சிலர் வசூல் பண்ணிட்டாவ வே...
''கேட்டதுக்கு, 'அறநிலையத்துறை, சதயவிழா குழுதான் வசூல் பண்ண சொன்னாங்க'ன்னு அரண்மனை தேவஸ்தானம் சொல்லியிருக்காவ... இந்த நடன குழுவுல, போலீஸ் அதிகாரி ஒருத்தரின் பெண் குழந்தையும் இருந்திருக்கு வே...
''அந்த குழந்தையிடமும், 2,000 ரூபாயை கறாரா வாங்கிட்டாவ... 'வசூல் பண்ணியது யார், யாருக்காக வசூல் செஞ்சாங்க'ன்னு விசாரணை நடத்தினா, நிறைய பேர் சிக்குவாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மளிகை கடை பெயர்ல, 'டெண்டர்' போட்டவர் கதை தெரியுமா ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தமிழக அரசின் சமூக நலத்துறைக்கு தேவைப்படும் பொருட்களை, 'சப்ளை' பண்ற கான்ட்ராக்டர் ஒருத்தர், திருச்சியில் இருக்கார்... இவர், அடிப்படையில், அ.தி.மு.க., அனுதாபியா இருந்தாலும், இந்த ஆட்சியிலும் சமூக நலத்துறையில செல்வாக்கா இருக்கார் ஓய்...
''சமீபத்துல, சமூக நலத்துறை ஊழியர்களுக்கு, 30,000 மொபைல் போன்கள் வாங்க டெண்டர் விட்டா... திருச்சி கான்ட்ராக்டர், மணப்பாறையில இருக்கிற தன் மளிகை கடை பெயர்ல, 30,000 போன்களை சப்ளை பண்றதா விண்ணப்பிச்சிருக்கார் ஓய்...
''மளிகை கடை பெயர்ல, மொபைல் போன் டெண்டருக்கு விண்ணப்பிச்ச தகவல், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியவர, அவா அதிர்ச்சியாகிட்டா... 'இவர், இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் மளிகை கடை பெயர்ல டெண்டர் போட்டாரா'ன்னு விசாரணை நடக்கறது ஓய் ...'' என முடித்தார், குப்பண்ணா.
''வாரும் ஜோதி... உம்ம வீட்டுக்காரி, குழந்தைங்க எல்லாம் சவுக்கியமா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

