கடைசி நேர பட்டுவாடாவில் காங்., காலை வாரிய தி.மு.க.,
கடைசி நேர பட்டுவாடாவில் காங்., காலை வாரிய தி.மு.க.,
PUBLISHED ON : ஏப் 25, 2026 01:29 AM

து ண்டால் பெஞ்சை தட்டியபடியே அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''அமைச்சர் உத்தரவை மதிக்க மாட்டேங்காரு வே...'' என, பேச்சை ஆரம்பித்தார்.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்னாடி, ஊழியர்களுக்கு பல சலுகைகளை அறிவிச்சாரு... குறிப்பா, ஊழியர்கள் மீதான, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உத்தரவுகள் மீது கோர்ட் தந்த தீர்ப்புகள் அடிப்படையில், அந்த உத்தரவுகளை ரத்து செய்யலாம்னு அமைச்சர் அனுமதி குடுத்தாரு வே...
''ஆனா, இது சம்பந்தமா உத்தரவு பிறப்பிக்க வேண்டிய உயர் அதிகாரி, அதை கண்டுக்கல... அவரிடம் ஊழியர்கள் கேட்டப்ப, 'தேர்தல் நடைமுறைகள் முடியட்டும்... அப்புறம் பார்த்துக்கலாம்'னு தட்டிக்கழிச்சிட்டாரு... ஆனா, 'தேர்தல் நடைமுறைக்கு சம்பந்தம் இல்லாத பணிகளை முடக்கி போடுறது முறையா'ன்னு ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இப்படி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''கடைசி நேரத்தில் பட்டுவாடா பண்ண முடியாம தவிச்சுட்டாங்க...'' என்றார்.
''எந்த தொகுதியில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''துாத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற ஆறு தொகுதிகள்ல, தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., - காங்., - பா.ஜ.,ன்னு எல்லா கட்சிகளுமே போட்டியிட்டுச்சு... துாத்துக்குடியில், தி.மு.க., - அ.தி.மு.க., தரப்புல ஓட்டுக்கு தலா, 1,000 ரூபாய் குடுத்தாங்க...
''ஓட்டப்பிடாரம் தொகுதியில், புதிய தமிழகம் கட்சியினர் நெருக்கடியால், பல இடங்கள்ல, தி.மு.க.,வினரால பட்டுவாடா பண்ண முடியல... இங்க போட்டியிட்ட அ.ம.மு.க., வேட்பாளர் வீட்டில் பறக்கும் படை நடத்திய சோ தனையால, அவங்களிடம் பணம் இருந்தும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியலைங்க...
''திருச்செந்துார் தொகுதியில், தி.மு.க.,வினர் கச்சிதமா பட்டுவாடாவை முடிச்சுட்டாங்க... அங்க, பா.ஜ., வேட்பாளரின் உறவினர் வீட்டில் பறக்கும் படையினர் நடத்திய சோதனை மற்றும் அ.தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு இல்லாததால, பண பட்டுவாடா பண்ண முடியலைங்க...
''ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், அ.தி.மு.க.,வினர் வீடு வீடா போய் பட்டுவாடா பண்ணிட்டாங்க... ஆனா, காங்., வேட்பாளரின் பணம், 1 கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் பண்ணிட்டதால், அவங்களாலேயும் பட்டுவாடா பண்ணமுடியலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்கிட்டயும் பட்டுவாடா தகவல் ஒண்ணு இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியானாலும், கீழ்மட்ட அளவுல நிர்வாகிகளிடம் இணக்கம் இல்ல... இது, தேர்தல்ல பல இடங்கள்ல எதிரொலிச்சிருக்கு ஓய்...
''குறிப்பா, காங்., போட்டியிட்ட சென்னை வேளச்சேரி, காரைக்குடி, ஈரோடு கிழக்கு, ஊத்தங்கரை உட்பட பல தொகுதிகள்ல, வாக்காளர்களுக்கான பண பட்டுவாடா பொறுப்பை, தி.மு.க.,வினர் தான் பார்த்துண்டா... தொகுதி முழுக்க பட்டுவாடாவுக்கு, 15 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும்... ஆனா, இந்த தொகுதிகள்ல தலா, 1 கோடி ரூபாய் தான் பட்டுவாடா பண்ணியிருக்கா ஓய்...
''காங்கிரசார் கேட்டதுக்கு, 'பணம் எடுத்துண்டு வந்தவரை காணோம்... பறக்கும்படை கெடுபிடியால பணத்தை எடுக்க முடியல'ன்னு விதவிதமா காரணங்களை சொல்லியிருக்கா... இதனால, இந்த தொகுதிகள்ல காங்., கரையேறுமான்னு அந்த கட்சியினர் எல்லாம் கவலையில இருக்கா ஓய்...'' என முடித் தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
