PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:00 AM

நாளிதழை மடித்தபடியே, “தி.மு.க.,வினர் இன்னும் சம்பாதிச்சிட்டு தான் இருக்காவ வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“ஆச்சரியமா இருக்கே... விளக்கமா சொல்லுங்க பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“த.வெ.க., அரசு, 'புதிய வீட்டு மனைகள் மற்றும் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க, வழக்கமான கட்டணம் தவிர கூடுதலா எந்த தொகையும் வசூலிக்கக் கூடாது'ன்னு, உத்தரவு போட்டிருக்குல்லா... சென்னை, ஆவடி மாநகராட்சி, இப்ப தி.மு.க., வசம் இருக்கு வே...
“இதனால, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளியின் ஆதரவாளர்கள் பலரும், 'இன்னும் ஏழு மாசங்களுக்கு எங்களுக்கு பதவிக்காலம் இருக்கு... எங்களுக்கு, 'கட்டிங்' வெட்டாம எந்த அனுமதியும் தர முடியாது'ன்னு மிரட்டுதாவ வே...
“சமீபத்துல, மெட்டினமல்லி பகுதியில் சில ஏக்கர் நிலங்களை வீட்டு மனைகளா பிரிச்சிருக்காவ... இதுக்கு, தி.மு.க., மாவட்ட புள்ளியை, 'கவனிச்ச' பிறகு தான் முறைப்படி ஒப்புதல் கிடைச்சிருக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“நாசர், தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாயே, “பதவிகளை பிடிக்க அலைமோதிட்டு இருக்காங்க பா...” என்றபடியே தொடர்ந்தார்...
“தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஒரு தலைவர் மற்றும் ரெண்டு உறுப்பினர்களுடன் செயல்படுது... மின் கட்டண நிர்ணயம், மின்வாரிய செயல்பாட்டை கண்காணிக்கிறது, மின் நிறுவனங்கள் மற்றும் மின்வாரியம் இடையிலான வழக்கை விசாரிக்கிறது உள்ளிட்ட பணிகளை இந்த ஆணையம் செய்யும் பா...
“இதன் தலைவரா இருந்த மணிவண்ணன், போன மாசம் ராஜினாமா பண்ணிட்டாரு... உறுப்பினர்கள் ரெண்டு பேரும் அடுத்தடுத்து ஓய்வுல போயிட்டாங்க பா..
“ஆணையத்துக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க, வர்ற 28ம் தேதிக்குள்ள விண்ணப்பிக்கும்படி தமிழக அரசின் எரிசக்தி துறை அழைப்பு விடுத்திருக்கு... அதிகாரம் மிக்க இந்த பதவிகளை பிடிக்கக் கடும் போட்டி நிலவுது...
“இன்னும் ரெண்டு மாசத்துல ஓய்வு பெற போற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வக்கீல்கள்னு பலரும், முதல்வருக்கு நெருக்கமான சிலரை தேடி தேடி போய் பார்த்துட்டு இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“மோசடி நபருக்கு உதவியாளர் பதவி தந்திருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.
“த.வெ.க., அரசில் ஒரு பெண் அமைச்சர் அடிக்கடி சர்ச்சையில சிக்குறாங்களே... இப்ப, கட்சிக்கே சம்பந்தம் இல்லாத ஒருத்தரை தனக்கு உதவியாளரா நியமிச்சிருக்காங்க...
“இந்த உதவியாளர், சில வருஷங்களுக்கு முன்னாடி கோவையில் நிதி நிறுவனம் நடத்தி, நிறைய பேரை ஏமாத்திட்டாராம்... இது சம்பந்தமா, 252 பேர் கோவை போலீசில் புகார் குடுத்து, 3.17 கோடி ரூபாய் மோசடி பண்ணிட்டதா, அவர் மேல 2024ல் போலீசார் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க...
“இந்த வழக்குல முன்ஜாமின் வாங்கி சுத்திட்டு இருந்தவர், இப்ப அமைச்சருக்கு உதவியாளராகிட்டாரு... இதை பார்த்து, த.வெ.க.,வினர் எல்லாம் கடும் அதிர்ச்சியில இருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, “கீர்த்தனா மேடம்... மகேஸ்வரனை பார்க்கத் தான் போயிண்டு இருக்கேன்...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.
