/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சொந்த மாவட்ட பஞ்சாயத்தால் திணறும் அமைச்சர்!
/
சொந்த மாவட்ட பஞ்சாயத்தால் திணறும் அமைச்சர்!
PUBLISHED ON : ஆக 15, 2025 12:00 AM

சு தந்திர தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட நண்பர்கள் மத்தியில், ''ஏசி அறைக்குள்ள போய் சொகுசா உட்கார்ந்துக்கிறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை யூனியன் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஊழியர்கள், பெரும்பாலும் தங்களது சீட்லயே இருக்கிறது இல்ல... பக்கத்துல இருக்கிற கம்ப்யூட்டர் அறைக்குள்ள போய் உட்கார்ந்துக்கிறாங்க பா...
''அங்க, 'ஏசி' வசதி பண்ணி வச்சிருக்கிறதால, எல்லாரும் அதுக்குள்ளயே முகாம் போட்டுக்கிறாங்க... இதனால, ஊழியர்களை பார்க்க வர்ற பொதுமக்கள், அவங்க சீட்ல இல்லாததை பார்த்துட்டு, ஏமாற்றத்தோட திரும்பி போறாங்க...
''இது, அதிகாரி களுக்கு தெரிஞ்சாலும், அவங்களும் ஊழியர்களை தட்டிக் கேட்கிறது இல்ல பா...'' என்றார், அன்வர்பாய்.
''போராட்டத்தின் பின்னணியில், கமிஷன் தகராறு இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த போராட்டத்தை சொல்லுதீரு...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை மாநகராட்சியில் மொத்தம், 15 மண்டலங்கள் இருக்கு... இதுல, 10 மண்டலங்களின் துாய்மை பணிகளை, அ.தி.மு.க., ஆட்சியிலயே தனியாரிடம் குடுத்துட்டாங்க... இப்ப, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்ட லங்களை, வருஷத் துக்கு, 276 கோடி ரூபாய் தர்றதா பேசி, தனியாரிடம் குடுத்துட்டாங்க...
''இதை எதிர்த்து, துாய்மை பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்துல தொடர் போராட்டம் நடத்துறாங்களே... இந்த, 276 கோடி ரூபாய்ல, துறையின் முக்கிய புள்ளி கணிசமா கமிஷன் வாங்கிட்டாருங்க...
''ஆனா, மாநகராட்சியை கட்டுப்பாட்டுல வச்சிருக்கிற சென்னையின் முக்கிய புள்ளிக்கும், அவரது ஆதரவாளருக்கும் பங்கு தரலையாம்... இதனாலயே, துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை இந்த ரெண்டு பேரும் கண்டுக்காம விட்டதோட, மறை முகமா துாண்டியும் விட்டிருக்காங்க...
''ஆனா, போராட்டம் பல நாட்களா நீடிச்சு, பல அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிச்சதால, ரெண்டு முக்கிய புள்ளிகள் மீதும் மேலிடம் கோபமாகிடுச்சு... ரெண்டு முக்கிய புள்ளிகளையும் கூப்பிட்டு, 'டோஸ்' விட்டதா மாநகராட்சி வட்டாரங் கள்ல பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
உடனே, ''அமைச்சர் நேருவுக்கு சொந்த மாவட்டத்துலயே குடைச்சல் குடுக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி மாநகராட்சி மேயரா, நேருவின் ஆதரவாளர் அன்பழகன் இருக்கார்... மன்ற கூட்டங்கள்ல, நேருவின் ஆதரவு கவுன்சிலர்கள் சிலரே மேயருக்கு எதிரா பிரச்னை கிளப்பறா ஓய்...
''சமீபத்துல, மேயரை கண்டித்து தி.மு.க.,வின், 24 கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தா... அதேபோல, துறையூர் நகராட்சியில், நேருவின் ஆதரவாளரான துணை தலைவர் முரளி, தலித் பெண் சேர்மனை முடக்கும் வகையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் குடுத்திருக்கார் ஓய்...
''இதே பஞ்சாயத்து தான், திருச்சி மாவட்டத்தில் இருக்கும் பல உள்ளாட்சி அமைப்புகள்லயும் நடக்கறது... தமிழகம் முழுக்க கட்சிக்குள்ள நடக்கற பிரச்னைகளை தீர்த்து வைக்கற நேருவால, சொந்த மாவட்ட பஞ்சாயத்தை தீர்க்க முடியல ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.