/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் அமைச்சர்கள் அதிருப்தி!
/
அதிகாரிகள் அலட்சியத்தால் அமைச்சர்கள் அதிருப்தி!
PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM

''மு தல்வர் திறந்து வச்ச பஸ் ஸ்டாண்ட் செயல்படாம கிடக்கு வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், சங்ககிரியில் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்டுனு ரெண்டு இருந்துச்சு... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய பஸ் ஸ்டாண்டை இடிச்சு தள்ளிட்டாவ வே...
''அதே நேரம், 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், ஸ்டாலின் துணை முதல்வரா இருந்தப்ப, திறந்த புது பஸ் ஸ்டாண்டுக்குள்ள எந்த பஸ்சும் போயிட்டு வர்றதே இல்ல... இத்தனைக்கும், சங்ககிரி நகராட்சி தலைவரா, தி.மு.க.,வைச் சேர்ந்த மணிமொழி இருக்காங்க வே...
''இவங்களது கணவர் முருகன், கட்சியில் நகரச் செயலராகவும் இருக்காரு... இவங்களிடம் வணிகர்கள் பலமுறை முறையிட்டும், புது பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ்கள் வரவே மாட்டேங்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்னை ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டத்தில், 'குட்கா' போதைப் பொருள் தடுப்பு சிறப்பு போலீஸ் பிரிவுல ஒரு அதிகாரி இருக்கார்... இவர், தீபாவளி நேரத்துல, பட்டாசு கடைகள்ல மாமூல் வாங்கி கொழிச்சார்னு ஏற்கனவே பேசியிருக்கோம் ஓய்...
''இப்ப, மாவட்டம் முழுக்க, 'குட்கா' விக்கறவாளிடம் தினசரி, வார, மாதாந்திர மாமூல்னு, லட்சக்கணக்குல வசூல் பண்ணிண்டு இருக்கார்... தன்னோட வேலையை மறந்துட்டு, முழு நேரமும் மாமூல் வசூல்ல தான் குறியா இருக்கார் ஓய்...
''இவரை பத்தி உயர் அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட புகார்கள் போயும், நடவடிக்கை இல்ல... இது பத்தி அவரிடம் கேட்டா, 'நான் ஓடியாடி வசூல் பண்றதை நானே வச்சுக்கல... என் உயர் அதிகாரிகள், உள்ளூர் போலீசார், கலால் போலீசார்னு எல்லாருக்கும் முறையா கப்பம் கட்டறேன்... அதனால, என் மீது எத்தனை புகார்கள் போனாலும், யாரும் கண்டுக்க மாட்டா'ன்னு ஜம்பமா சொல்றார் ஓய்...'' என்றார் , குப்பண்ணா.
பக்கத்தில் அமர்ந்திருந்த ரமேஷிடம் நாளிதழை தந்தபடியே, ''அமைச்சர்கள் தவியா தவிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அவங்களுக்கு என்னங்க பிரச்னை...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக அரசின் பட்ஜெட்டுல அறிவிச்ச திட்டங்கள், துறைவாரியான மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், எந்த நிலையில இருக்குன்னு பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கே தெரியல... தேர்தல் வர்றதால, தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்தலைன்னா, ஓட்டு கேட்டு போக முடியாதுன்னு எல்லாரும் பயப்படுறாங்க பா...
''ஆனா, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் எல்லாம், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளை பார்த்து, இது சம்பந்தமா விளக்கம் கேட்டா, யாரும் முறையா பதில் தர மாட்டேங்கிறாங்க... அதிகாரிகளை கண்டிச்சு கேள்வி கேட்க முடியாம, பி.ஏ.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் திரும்பிடுறாங்க...
''அதிகாரிகளின் அலட்சியத்தை முதல்வரிடம் எப்படி தெரிவிக்கிறதுன்னு தெரியாம, பலரும் தர்மசங்கடத்துல தவிச்சிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

