/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாதாமாதம், ' படியளக்க ' சொல்லும் அதிகாரி!
/
மாதாமாதம், ' படியளக்க ' சொல்லும் அதிகாரி!
PUBLISHED ON : அக் 07, 2024 12:00 AM

கடலை மிட்டாயை கடித்தபடியே, ''இரும்பு பார்கள் எங்க போச்சுன்னு தெரியலைங்க...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''நீலகிரி மாவட்டம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை முதுமலை பகுதி யில், ரெண்டு பழைய பாலங்களை இடிச்சாங்க... இந்த பாலங்கள்ல, நுாற்றாண்டு பழமையான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எட்டு இரும்பு பார்கள் இருந்துச்சுங்க...
''இதை எடுத்து தனியா வச்சிருந்தாங்க... சமீபத்துல இந்த பார்கள் மாயமாகிடுச்சு... இது சம்பந்தமா, மசினகுடி போலீஸ்ல, நெடுஞ்சாலை துறை அதிகாரி புகார் குடுத்தாருங்க...
''சில நாட்கள்லயே, 'பார்களை எடுத்துட்டு போன கான்ட்ராக்டர் திருப்பி குடுத்துட்டார்'னு சொல்லி, புகாரை வாபஸ் வாங்கிட்டாங்க... ஆனா, முழுசா இருந்த அந்த பார்கள் எல்லாம் இப்ப துண்டு துண்டா அறுக்கப்பட்டிருக்கு...
''இதனால, பார்களின் ஒரு பகுதியை வித்து காசாக்கிட்டாங்களோன்னு சந்தேகம் எழுந்திருக்கு... இது சம்பந்தமா, போலீசார் ரகசிய விசாரணை நடத்திட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மறைமுகமா பழிவாங்குதாங்க வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை, யாருங்க பழிவாங்குறது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, சூளைமேடு, 109வது வார்டு காங்கிரஸ் பெண் கவுன்சிலர் சுகன்யா செல்வம்... இவங்க, 'மழைக்காலம் துவங்குறதுக்கு முன்னாடி, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்ல மழைநீர் வடிகால் அமைத்து தரணும்'னு மேயருக்கு பல முறை கடிதம் அனுப்பிஇருக்காங்க வே...
''ஆனா, அதை கண்டுக்கவே இல்லை... இதனால, ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல முடியாம, மாநகராட்சி அதிகாரிகளிடம் சுகன்யா மன்றாடிட்டு இருக்காவ... ஆனாலும், இவங்க வார்டுல எந்த பணிகளையும் செஞ்சு தர மாட்டேங்காவ வே...
''அதாவது, 'சென்னையில் கூவம் சீரமைப்புக்கு மாநகராட்சி செய்த பணிகள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடணும்'னு காங்., - எம்.பி., கார்த்தி கேட்டிருந்தாருல்லா... கவுன்சிலர் சுகன்யா, கார்த்தி ஆதரவாளர்... அதனால தான், அவங்க வார்டு பணிகளை புறக்கணிக்கிறாங்களோ'ன்னு காங்கிரசார் சந்தேகப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மாசாமாசம், 'படியளக்க' சொல்றார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திண்டுக்கல் மாவட்டம், பழனியில், அமராவதி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் இருக்கு... இங்க இருக்கற ஒரு அதிகாரி வசூல்ல புகுந்து விளையாடறார் ஓய்...
''நங்காஞ்சியாறு, வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு அணை மற்றும் பாசன திட்டங்கள்ல பணிபுரியும் உதவி பொறியாளர்கள் மாசாமாசம் தலா, 50,000 ரூபாய் கப்பம் கட்டணும்னு கறாரா கேக்கறார்... அதுக்காக, உதவி பொறியாளர் அவா ஆத்துல இருந்து எடுத்து குடுப்பாளா ஓய்...
''அவாளும், அணை பராமரிப்பு பணிகள், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கட்டிங்னு பல வழிகள்லயும் வசூல் பண்றா... அதுல, தாங்களும் கொஞ்சம் எடுத்துண்டு, அதிகாரிக்கும் பங்கு அனுப்பிடறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.