/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூடுதல் பொறுப்பில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
/
கூடுதல் பொறுப்பில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
கூடுதல் பொறுப்பில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
கூடுதல் பொறுப்பில் வாரி குவிக்கும் நகராட்சி அதிகாரி!
PUBLISHED ON : மே 19, 2025 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''முக்கிய நிர்வாகிகள் விருந்தை புறக்கணிச்சுட்டாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''என்ன விருந்துப்பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பா.ம.க., சார்புல, சித்திரை முழுநிலவு மாநாட்டை சமீபத்துல நடத்தி முடிச்சாங்களே... மாநாட்டை, கட்சியின் தலைவரான அன்புமணி தான் ஏற்பாடு பண்ணி நடத்தினாருங்க...
''மாநாட்டுக்கு நல்ல கூட்டம் திரண்டதால மகிழ்ச்சியான அன்புமணி, இதுக்காக உழைச்ச தொழிலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்னு 500க்கும் மேற்பட்டவங்களுக்கு, சமீபத்துல தடபுடலா அசைவ விருந்து குடுத்தாருங்க... இதுல, வன்னியர் சங்க மாநில செயலர் வைத்தி உள்ளிட்ட பலரும் கலந்துக்கிட்டாங்க...
''ஆனா, அன்புமணிக்கு ஆகாதவரும், ராமதாசின் தீவிர ஆதரவாளருமான ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் யாரும் கலந்துக்கல... அவங்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்தாரா, இல்லையான்னும் தெரியலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தண்ணீர் திருட்டுல நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசனத்துக்கு, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் செயல்பாட்டில் இருக்கோல்லியோ... இந்த திட்டத்துல, திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, வழியில பலரும் மோட்டார் போட்டு திருடறா ஓய்...
''இதை தடுக்க கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், கூட்டு கண்காணிப்பு குழுவினர் ரோந்து போறா... தண்ணீர் திருட்டில் ஈடுபடறவாளை, 'கருப்பு பட்டியலில்' சேர்த்து, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கணும் ஓய்...
''ஆனா, அரசியல் புள்ளிகள், தனியார் நிறுவனங்கள் மீது இந்த குழுவினர் நடவடிக்கை எடுக்கறது இல்ல... 'இதுக்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறுது'ன்னு விவசாயிகள் புலம்பறா... திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளக்கோவில் வரை, நுாற்றுக்கணக்கான இடங்களில் இப்பவுமே தண்ணீர் திருட்டு நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கூடுதல் பொறுப்பால குஷியாகிட்டாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அவர்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், குன்னுார் தனியார் ஹோட்டல்ல, விதிகளை மீறி சமீபத்துல பிரமாண்ட செட் போட்டு, ஹிந்தி பட ஷூட்டிங் நடந்துச்சு... இதுல, நகராட்சி முக்கிய அதிகாரிக்கு பெரிய தொகை கைமாறிட்டு வே...
''இது சம்பந்தமா, நகராட்சி கூட்டத்துல கவுன்சிலர்கள் கேள்வி எழுப்ப, தயாரா வச்சிருந்த ஷூட்டிங் விதிகளை அதிகாரி படிச்சு காட்டி, 'அந்த விதிப்படி தான் அனுமதி தந்தோம்'னு, அவங்க வாயை அடைச்சுட்டாரு...
''இந்த அதிகாரி கட்டட அனுமதி, விதிமீறல் கட்டடங்கள்னு பல இடங்கள்ல வசூல் வேட்டை நடத்துதாரு... இப்படிப்பட்டவருக்கு கோத்தகிரி புதிய நகராட்சியின் பொறுப்பையும் கூடுதலா குடுத்துட்டாவ வே...
''இதனால, அதிகாரி காட்டுல பணமழை பொழியுது... தான் வாங்குறதுல, ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளுக்கும் ஒரு பங்கை வெட்டிடுறதால, இவரது வண்டி தடையில்லாம ஓடுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''இளம்பரிதி வரார்... மசால் வடை குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.