PUBLISHED ON : ஜன 10, 2026 03:24 AM

காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், காரைக்குடியில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'புதிய கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு நல்வாழ்த்துகள். தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி எனக் கூறும் விஜயின் முயற்சி வெல்லாது. 'இண்டி' கூட்டணியில் காங்., இருக்கிறது. தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்.,கில் ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.
'இக்கூட்டணி இன்னும் வலுப்பெறும். எங்களிடம் வேறு எந்த யோசனையும் இல்லை. ஆட்சியில் பங்கு குறித்து, இரு கட்சிகளின் தலைவர்கள் தான் முடிவு எடுப்பர்' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஆட்சியில் பங்கு கொடுத்தாலும், இவரோ, இவரது மகனோ அமைச்சராக முடியாது... அதனால தான், அதுல இவர் ஆர்வம் காட்டல...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

