/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இரவு 8:00 வரை பணியாற்ற பெண்களை மிரட்டும் அதிகாரி!
/
இரவு 8:00 வரை பணியாற்ற பெண்களை மிரட்டும் அதிகாரி!
இரவு 8:00 வரை பணியாற்ற பெண்களை மிரட்டும் அதிகாரி!
இரவு 8:00 வரை பணியாற்ற பெண்களை மிரட்டும் அதிகாரி!
PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

இஞ்சி டீயை பருகியபடியே, ''அதிகாரிகள் விசுவாசம் மாறலைங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சரா, அதே மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தான் இருந்தாரு... சில மாதங்களுக்கு முன்னாடி, இவருக்கு பதிலா கைத்தறி துறை அமைச்சர் காந்தியை முதல்வர் ஸ்டாலின் நியமிச்சாருங்க...
''காந்தியால, காஞ்சி புரம் மாவட்டத்தை சமாளிக்க முடியல... ஆய்வு பணிகள் செய்ய அவரது உடல்நிலையும் ஒத்துழைக்கல... அதுவும் இல்லாம, அன்பரசன் ஏரியாவான ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் பக்கமே அமைச்சர் காந்தி போறதும் இல்லைங்க...
''இதனால, காஞ்சி புரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் போலவே, அன்பரசன் தான் இருக்காரு... அரசு அதிகாரிகளும் அவரை தேடி போய் தான் ஆலோசனை கேட்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எஸ்.ஐ., - ஏட்டு சண்டையை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல பெண் எஸ்.ஐ.,க்கும், பெண் ஏட்டுக்கும் ஏழாம் பொருத்தம்... சமீபத்துல பெண் எஸ்.ஐ.,யிடம் ஏட்டம்மா, ஒரு கேஸ் விஷயமா போய் விசாரணை நடத்துங்கன்னு சொல்லியிருக்காங்க வே...
''எஸ்.ஐ.,யோ, 'எனக்கு நீ ஆர்டர் போடுறியா'ன்னு கேட்க, 'நான் ஆர்டர் போடல... இன்ஸ்பெக்டர் உத்தரவை தான் சொன்னேன்'னு ஏட்டம்மா பதிலடி தர, ரெண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் நடந்துச்சு வே...
''இவங்க போட்ட சத்தம், ரோட்டுல போற பொதுமக்கள் காதுல விழ, அவங்க வந்து ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி இருக்காவ... 'நம்ம பிரச்னையை தீர்க்க இவங்களை வச்சிருந்தா, இவங்க பஞ்சாயத்தையே நாம தான் தீர்த்து வைக்கணும் போல'ன்னு புலம்பிட்டே போனாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆர்த்தியும், உமாவும் ஸ்கூட்டியில இவ்வளவு வேகமா எங்க போறா ஓய்...'' என, தெருவைப் பார்த்து முணுமுணுத்த குப்பண்ணாவே, ''பெண் ஊழியர்களை மிரட்டறார் ஓய்...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டத்தின் பிரபல முருகன் கோவில் ஊர் ஒன்றிய அலுவலகத்துல, ஒரு அதிகாரி இருக்கார்... இவரது கன்ட்ரோல்ல உதவியாளர், டைப்பிஸ்ட்னு ரெண்டு பெண் ஊழியர்கள் இருக்காங்க ஓய்...
''இவா, டி.என்.பி.எஸ்.சி., வழியா தேர்வாகி, ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் சேர்ந்திருக்காங்க... இவாளை, ராத்திரி 8:00 மணி வரை அதிகாரி வேலை வாங்கறார் ஓய்...
''சாயந்தரம் 6:00 மணிக்கு பெண் ஊழியர்கள் கிளம்பறோம்னு சொன்னா, 'நானே, ராத்திரி 9:00 மணி வரைக்கும் வேலை செய்றேன்... நீங்க 8:00 மணி வரைக்கும் வேலை செய்யப்படாதா... உங்களுக்கு அரசு தண்டச் சம்பளம் தருது'ன்னு திட்டறாராம் ஓய்...
''இது பத்தி, ஒன்றிய உயர் அதிகாரியிடம் பெண் ஊழியர்கள் புகார் தெரிவிக்க, அவரோ, 'அந்த அதிகாரி சொல்ற வேலைகளை முடிச்சுட்டு தான் வீட்டுக்கு போகணும்'னு ஒத்து ஊதறார்... பெண் ஊழியர்கள், கண்ணீர் விடாத குறையா சக ஊழியர்களிடம் புலம்பிட்டு இருக்காங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''வாரும் கோபால்... நெத்தியில, 'சந்தன' பொட்டு அம்சமா இருக்கு வே...'' என, நண்பரை வரவேற்று அண்ணாச்சி பேச, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.