/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மசாலா பொருட்களில், ரூ.50 லட்சம், 'அடித்த' அதிகாரி!
/
மசாலா பொருட்களில், ரூ.50 லட்சம், 'அடித்த' அதிகாரி!
மசாலா பொருட்களில், ரூ.50 லட்சம், 'அடித்த' அதிகாரி!
மசாலா பொருட்களில், ரூ.50 லட்சம், 'அடித்த' அதிகாரி!
PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

“கோடை காலத்துல திறந்த தண்ணீர் பந்தலை இன்னும் எடுக்கலைங்க...” என, பெஞ்சில் முதல் ஆளாக பேச்சை துவக்கினார் அந்தோணிசாமி.
“எங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“சென்னை, ஆவடி போலீஸ் கமிஷனரகத்துல, 30 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... வருஷா வருஷம் கோடை காலத்துல, எல்லா கட்சிக்காரங்களும் தண்ணீர் பந்தல் வைக்க போலீசார் அனுமதி தருவாங்க...
“ஒவ்வொரு ஸ்டேஷன் ஏரியாவிலும், 20க்கும் அதிகமான இடங்கள்ல தண்ணீர் பந்தல் வச்சுட்டு, மூணு மாசத்துக்கு அப்புறம் எடுத்துடுவாங்க... ஆனா, இந்த வருஷம், ஆவடி முழுக்க வச்ச தண்ணீர் பந்தல்கள் முறையா செயல்படல... அவற்றை இன்னும் அகற்றவும் இல்லைங்க...
“மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்குற நிழற்குடையா பல தண்ணீர் பந்தல்கள் மாறிடுச்சு... சில இடங்கள்ல சாலை, மழைநீர் வடிகால் மேலயே தண்ணீர் பந்தல் அமைச்சிருக்கிறதால, மழை நேரத்துல தண்ணீர் வடியல... இதை போலீசாரும் கண்டுக்காம இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“பதவி உயர்வு பட்டியலை மறைச்சு வச்சிருக்காங்க பா...” என, அடுத்த தகவலை ஆரம்பித்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
“சென்னை, நந்தனத்துல கருவூல கணக்கு துறை இயக்குநர் அலுவலகம் இருக்கு... இந்த துறையின் இயக்குநரா வர்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரு சில மாசத்துலயே, 'டிரான்ஸ்பர்'ல வேற துறைக்கு போயிடுறாங்க பா...
“இப்ப, நிதித்துறை சிறப்பு செயலர் தான், கருவூல துறையை கவனிச்சுட்டு இருக்காரு... இந்த துறையில் சமீபத்துல, இணை இயக்குநர்கள், 10 பேருக்கு கூடுதல் இயக்குநர்களாகவும், துணை இயக்குநர்கள், 37 பேருக்கு இணை இயக்குநர்களாகவும் பதவி உயர்வு குடுத்திருக்காங்க...
“போன மாசமே, இந்த பட்டியலை நிதித்துறை வெளியிட்டுச்சு... ஆனாலும், இந்த பட்டியலோட நகல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பாம, கருவூல துறை பெண் அதிகாரி தன் மேஜையிலயே வச்சிருக்காங்க பா...
“பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள்ல ஒருத்தர், எட்டு மாசமா வேலைக்கே வரல... இதுபோல, இன்னும் சிலர் மேல புகார் இருப்பதால, பட்டியலை வெளியிட்டா, பதவி உயர்வு கிடைக்காதவங்க கோர்ட்டுக்கு போயிடுவாங்களாம்... அதான், பட்டியலை வெளியிடாம பெண் அதிகாரி பதுக்கி வச்சிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“ஷோபா மெடிக்கல்ல, மாத்திரை வாங்கிட்டு வந்துரு...” என, யாரிடமோ பேசி விட்டு, மொபைல் போனை, 'கட்' செய்த பெரியசாமி அண்ணாச்சி, “மசாலா பொருட்கள் கொள்முதல்ல, 50 லட்சம் ரூபாய் முறைகேடு செஞ்சிட்டாரு வே...” என, கடைசி தகவலுக்கு வந்தார்.
“யார் ஓய் அது...” எனக் கேட்டார், குப்பண்ணா.
“தமிழக ரேஷன் கடைகள்ல மசாலா பொருட்கள், உப்பு, சோப்பு எல்லாம் விக்கிறாங்கல்லா... துாத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை கட்டுப்பாட்டுல இருக்கிற ரேஷன் கடைகள்ல, சந்தையில் பிரபலம் இல்லாத பெயர் கொண்ட மசாலா பொருட்களை, மக்கள் தலையில் கட்டுதாவ வே...
“மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை அதிகாரி, கூட்டுறவு சங்கங்கள்ல இந்த பொருட்களை வாங்காம, வெளிச்சந்தையில் கம்மி விலைக்கு வாங்கி, 50 லட்சம் ரூபாய், 'கமிஷன்' அடிச்சிட்டாரு... இவர் மேல புகார்கள் போனாலும், உயரதிகாரிகளை, 'கவனிச்சு' வச்சிருக்கிறதால எந்த நடவடிக்கையும் இல்ல வே...” என முடித்தார், அண்ணாச்சி.
“பாலமுருகன், இப்படி உட்காரும்...” என, நண்பருக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.