/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரி வீட்டு வேலைக்கு செல்லும் பணியாளர்கள்!
/
அதிகாரி வீட்டு வேலைக்கு செல்லும் பணியாளர்கள்!
PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

''சர்க்கரை ஆலையை மூடப் பார்க்கிறாங்க பா...'' என்றபடியே வந்தார், அன்வர்பாய்.
''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டம், உடுமலை, கிருஷ்ணாபுரத்தில் தமிழகத்தின் முதல் பொதுத் துறை நிறுவனமான, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கு... திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த, 21,000 விவசாயிகள் இதுல உறுப்பினரா இருக்காங்க பா...
''இங்க இருந்த பழமையான இயந்திரங்கள் பழுதாகிட்டதால, ரெண்டு வருஷமா ஆலை மூடியே கிடக்கு... ஆலையை நவீனப்படுத்த, 80 கோடி ரூபாய்ல திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வச்சாங்க... விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தியும், அரசு கண்டுக்கல பா...
''அரவைக்கு கரும்பு ஒப்பந்தம் செய்யும் அலுவலகங்கள் எல்லாத்தையும் மூடிட்டாங்க... அதிகாரிகள், தொழிலாளர்களை வேற ஆலைகளுக்கு மாத்திட்டாங்க பா...
''இதனால, 'ஆலையை முழுசா இழுத்து மூட அதிகாரிகள் தயாராகிட்டாங்க... தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாகவே அவங்க செயல்படுறாங்க'ன்னு கரும்பு விவசாயிகள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பிளாஸ்டிக் ஒழிப்பை கண்டுக்க மாட்டேங்கறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள்ல பிளாஸ்டிக் பைகள் தாராளமா புழங்கறது... தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பகிரங்கமாகவே பலரும் விற்பனை பண்றா ஓய்...
''அதே மாதிரி, டீ கடைகள், ஹோட்டல்கள்லயும் டீ, காபி, சாம்பார், ரசத்தை எல்லாம் சுடச்சுட பிளாஸ்டிக் பைகள்ல கட்டி குடுக்கறா... இதை எல்லாம் நகராட்சியின் சுகாதார அதிகாரி கண்டுக்கறது இல்ல ஓய்...
''இன்னும் சொல்லப் போனா, 'அவர் இங்க வந்தப்புறம் தான், பிளாஸ்டிக் பயன்பாடே ஜாஸ்தியாயிடுத்து... உயர் அதிகாரிகள் யாராவது ஆய்வுக்கு வந்தா மட்டும், பெயரளவுக்கு கடைகள்ல பிளாஸ்டிக் சோதனை நடத்தறார்... அவரை இங்கிருந்து மாத்தினா தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்'னு அந்த பகுதி மக்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முருகன், இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த பெரியசாமி அண்ணாச்சியே, ''என்கிட்டயும் ஒரு நகராட்சி தகவல் இருக்குல்லா...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் ஒரு அதிகாரி இருக்காரு... இதுக்கு முன்னாடி இவர் வேலை பார்த்த இடங்கள்ல, பெண்கள் தொடர்பா பல புகார்ல சிக்கியிருக்காரு வே...
''இப்ப, இவருக்கு அரசு தந்திருக்கிற வீட்டுல தனியா குடியிருக்காரு... பெண் துாய்மை பணியாளர்கள் மூணு பேர், ரெண்டு ஆண் தொழிலாளர்கள்னு அஞ்சு பேர், தினமும் இவரது வீட்டு வேலைகளுக்கு போயிடுதாங்க வே...
''இதுல, ஆண் தொழிலாளர்களை வெளி வேலைகளுக்கு அனுப்பிடுதாரு... பெண்களை மட்டும் தான் வீட்டுக்குள்ள விடுதாரு... அதிகாரியும், அவங்களுடன் ரொம்ப நேரம் செலவழிக்காரு வே...
''சில நேரங்கள்ல, வீட்டு வேலைக்கு வர்ற பெண்களை சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போயிடுதாரு... அதிகாரிக்கு, மாவட்டத்தைச் சேர்ந்த அவரது துறையின் முக்கிய புள்ளி ஆசி இருக்கிறதால, அவரை யாராலயும் தட்டிக் கேட்க முடியல வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

