/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரி பெயரில் வசூலை ' அள்ளிய ' அலுவலர்கள்!
/
அதிகாரி பெயரில் வசூலை ' அள்ளிய ' அலுவலர்கள்!
PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

“ஆ ண்டாள் கிளி பொம்மையை பார்த்து பரவசமாயிட்டாங்க ஓய்...” என்றபடியே, நண்பர்கள் நடுவில் அமர்ந்தார் குப்பண்ணா.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்துல தென் மாவட்டங்கள்ல சுற்றுப்பயணம் செய்தாங்க... திண்டுக்கல்ல நடந்த பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த அவங்களுக்கு, ஸ்ரீவில்லி புத்துார் ஆண்டாள் கோவில்ல அர்ச்சனை செய்த பச்சை கிளி பொம்மை, பால்கோவா உள்ளிட்ட பிரசாதங்களை, தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினரான கோபால்சாமி குடுத்திருக்கார் ஓய்...
“ஆண்டாள் கிளியை பரிசா வாங்கறவாளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், நல்ல காரியமும் நடக்குமாம்... இதனால, கிளியை தன் உதவியாளரிடம் தந்த நிர்மலா சீதாராமன், 'டில்லி வீட்டின் பூஜை அறையில் வைக்கணும்... பத்திரமா வைங்கோ'ன்னு சொல்லியிருக்காங்க...
“அதுவும் இல்லாம, தான் சிறுமியா இருந்தப்ப பெற்றோருடன் அடிக்கடி ஆண்டாள் கோவிலுக்கு வந்து தரிசனம் பண்ணிய பழைய நினைவுகளை, கட்சி நிர்வாகிகளிடம் பகிர்ந்து சந்தோஷப்பட்டிருக்காங்க ஓய்...” என்றார், குப்பண்ணா.
“கொள்ளையை படம் பிடிச்சது தப்பா...” என கேட்ட அன்வர்பாயே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில, சமீபத்தில் ஒரு கடையில தனியா இருந்த பெண்ணிடம், முகக்கவசம் அணிந்த ரெண்டு வாலிபர்கள் வந்து, அரிவாளை காட்டி மிரட்டி தாலி செயினை பறிச்சிட்டு ஓடினாங்க... ஓடியவங்களை, அங்க இருந்த வாலிபர் தன் மொபைல் போன்ல வீடியோ எடுத்திருக்காரு பா...
“விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியிடம், இந்த தகவலை சொல்லியிருக்காங்க... உடனே அவர், 'இந்த வீடியோ மீடியாக்களுக்கு போயிட்டா பிரச்னை ஆகிடும்'னு சொல்லி, அந்த வாலிபரின் மொபைல் போனை பிடுங்கி, வீடியோவை அழிச்சுட்டாரு பா...
“அதுவும் இல்லாம, அந்த வாலிபரை ரெண்டு மணி நேரம் தனியா உட்கார வச்சு, மொபைல் போன்ல இருந்த எல்லா தகவல்களையும் அழிச்சிட்டு தான் குடுத்திருக்காரு பா...” என்றார், அன்வர்பாய்.
“நிரேஷுக்கு இடம் குடுங்க வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “அதிகாரி கோடு போட சொன்னா, அலுவலர்கள் ரோடே போட்டிருக்காவ வே...” என்றார்.
“எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு எனும், 'திஷா' மீட்டிங்கை நடத்துதாவ... இதுக்கான செலவுகளுக்கு, ஒன்றிய பி.டி.ஓ.,க்களிடம் வசூல் பண்ணுதாவன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசியிருந்தோமுல்லா...
“அதாவது, 'திஷா மீட்டிங் செலவுகளை மேனேஜ் பண்ணிக்கிடுங்க'ன்னு முகமையின் பெண் அதிகாரி, சக அதிகாரிகளிடம் பொதுவா சொல்லியிருக்காங்க... இதான் சாக்குன்னு அவரது பெயரை சொல்லி, 13 ஒன்றிய அதிகாரிகளிடமும் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற மூணு பேர் தனித்தனியா வசூல் பண்ணி, பாக்கெட்டை நிரப்பிக்கிட்டாவ வே...
“இது சம்பந்தமா புகார் வந்த பிறகு தான், பெண் அதிகாரிக்கு விஷயமே தெரிஞ்சிருக்கு... தன் பெயர்ல வசூல் பண்ணியவங்க மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் புகார் குடுத்திருக்காங்க... வசூல் புள்ளிகள் கலக்கத்துல இருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.