குவாரி முறைகேட்டில் சிக்கியவருக்கு அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு!
குவாரி முறைகேட்டில் சிக்கியவருக்கு அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு!
PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “சொந்த ஊர்காரங்க எல்லாம் விரக்தியில இருக்காவ வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“என்ன விஷயம் பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவங்க, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நேரு, மகேஷ்... இந்த தேர்தல்ல, திருச்சி மேற்கு தொகுதியில் நேரு ஜெயிச்சுட்டாரு... திருவெறும்பூர்ல போட்டியிட்ட மகேஷ் தோத்துட்டாரு வே...
“நேருவின் சொந்த ஊரான லால்குடி தொகுதியில் இருக்கிற காணக்கிளியநல்லுார்ல, அவருக்கு ஏராளமான விவசாய நிலங்கள், அரிசி ஆலை எல்லாம் இருக்கு வே...
“அதேபோல, மகேஷின் சொந்த ஊரான அன்பில் கிராமமும், லால்குடி தொகுதியில் தான் வருது... ஆனா, இந்த தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் ஜெயிச்சிட்டாங்க... 'அமைச்சர்களா இருந்தும், தங்களது சொந்த ஊர் தொகுதியில ஜெயிக்க முடியாம கோட்டை விட்டுட்டாவளே'ன்னு, அந்த ஊர்காரங்க புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
“கீழ்மட்ட அளவுல கணக்கு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“பொதுவா, ஆட்சி மாற்றம் நடக்கிறப்ப, பழைய ஆட்சியில் முக்கிய பதவிகள்ல இருந்த அதிகாரிகளை, 'டம்மி' பதவிகளுக்கு துாக்கியடிப்பாங்க... தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகளை தருவாங்க... பெரும்பாலும், மேல்மட்ட அதிகாரிகள் தான் இதுல சிக்குவாங்க...
“இப்ப, த.வெ.க., ஆட்சியில், இந்த நடைமுறை அடிமட்ட அளவுக்கு வந்துடுச்சு... அதாவது, கோவை மாவட்டத்தில் இருக்கிற ஒன்றிய அலுவலகங்கள், கல்வி, கூட்டுறவு, வேளாண்மை, அரசு மருத்துவமனைகள், சார் - பதிவாளர் அலுவலகங்கள்ல பணியில் இருக்கிற தி.மு.க., - அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் பட்டியலை எடுத்துட்டு இருக்காங்க...
“இதை எல்லாம், அந்தந்த பகுதியில் இருக்கிற உளவுத்துறை போலீசார் தான் செய்றாங்க... 'சீக்கிரமே பெரிய அளவில் எல்லாரும் மாத்தப் படுவாங்க'ன்னு உளவுத் துறை போலீசார் சொல்றாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“குவாரி முறைகேட்டில் சிக்கியவருக்கு, அமைச்சர் பதவி வழங்க கூடாதுன்னு எதிர்ப்பு கிளம்பிடுத்து ஓய்...” என்றார், குப்பண்ணா.
“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருநெல்வேலி மாவட்டத்தில், நிறைய கல் குவாரிகள் செயல்படறது... ராதாபுரம் தொகுதியில் மட்டும், 28 குவாரிகள் இயங்கறது... இந்த குவாரிகளால நிலத்தடி நீர்மட்டம் குறைஞ்சு, விவசாயம் பாதிக்கப்படறதா பலரும் குற்றஞ்சாட்டறா ஓய்...
“கடந்த 2022ல், அடைமிதிப்பான்குளம் பகுதி கல் குவாரியில் நடந்த விபத்துல, ஆறு தொழிலாளர்கள் இறந்து போயிட்டால்லியோ... அப்ப, எல்லா கல் குவாரிகள்லயும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நிறைய விதிமீறல்களை கண்டுபிடிச்சு, 600 கோடி ரூபாய் வரை அபராதம் விதிச்சா ஓய்...
“இதுல, பல குவாரிகள் இன்னும் அபராதத்தை கட்டல... இப்ப, த.வெ.க., சார்பில், திருநெல் வேலி எம்.எல்.ஏ.,வாகி இருக்கற ஆர்.எஸ்.முருகன், அமைச்சராக காய் நகர்த்திண்டு இருக்கார்... இவரது மனைவி சிந்து பெயர்ல இருக்கற குவாரிக்கும், 5.70 கோடி ரூபாய் அபராதம் விதிச்சிருந்தா...
“இதனால, 'கனிமவள சுரண்டல்ல ஈடுபட்ட முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூடாது'ன்னு அறப்போர் இயக்கம் சார்புல, த.வெ.க., தலைமைக்கு மனு அனுப்பியிருக்கா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரிய வர்கள் கிளம்பினர்.
