எனக்குள் ஏற்படுத்திய பண்பாட்டு பெருமித உணர்வு சிந்தனைக்களம் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு
எனக்குள் ஏற்படுத்திய பண்பாட்டு பெருமித உணர்வு சிந்தனைக்களம் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு
PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

– வி.சண்முகநாதன்
ஆர்.எஸ்.எஸ்., தமிழக முன்னாள் தலைவர் மேகாலயா முன்னாள் கவர்னர்
ஆர்.எஸ்.எஸ்., பேரியக்கம்
கடந்த 1925ம் ஆண்டு நாக்பூரில் விதைக்கப்பட்ட சிறு விதை, இன்று உலகம் தழுவிய மாபெரும் அமைப்பாக வளர்ந்துள்ளது. கடந்த 2025 விஜயதசமி நாளில் தொடங்கி, 2026 விஜயதசமி நாள் வரை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிகழ்ச்சிகள் நாடெங்கும், ஏன் உலகெங்கும் நடந்து வருகின்றன.
எத்தனையோ இடையூறுகளையும், தடைகளையும் தாண்டி, ஆயிரக்கணக்கான தொண்டர்களின் அர்ப்பணிப்பாலும், உயரிய தியாக வாழ்க்கையாலும், ஆர்.எஸ்.எஸ்., இன்று நம் தாய்நாட்டின் மனசாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த அற்புதமான இயக்கத்தில் ஸ்வயம்சேவகர்களின் உள்ளத்தில் தினமும் தேசிய உணர்வும், பண்பாட்டு உணர்வும் போதிக்கப்படுகின்றன. அதில், என்னை அரை நுாற்றாண்டுக்கு மேலாக ஈடுபடுத்திக்கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகிறேன்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ஸ்தாபகராகிய டாக்டர் கேசவ பலராம் ஹெட்கேவாரை நான் பார்த்த தில்லை. ஆனால், தென்மாநில ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளராக விளங்கிய யாத்வராஜ் ஜோதியை நேரில் பார்த்திருக்கிறேன்.
ஹெட்கேவாரின் கனவு
கடந்த காலத்திலிருந்து தற்போது கண்கூடாக காணும் சம்பவங்கள் வரை ஆராய்ந்து பார்த்தால், ‘நம் புண்ணிய பூமியின் தேசிய வாழ்க்கை ஹிந்து வாழ்க்கையே ஆகும்’ என்பதை, டாக்டர் கேசவ பலராம் ஹெட்கேவார் முழுமையாக அனுபவம் வாயிலாக உணர்ந்திருந்தார்.
அவர் நம் நாட்டை தெய்வமாகப் போற்றினார்.
அத்தகைய டாக்டர் கேசவ பலராம் ஹெட்கேவார் ஒரு கனவு கண்டார். ‘நாடு முழுதும் உள்ள நம் ஹிந்து மக்கள் தினமும் ஒரு மணி நேரம் சந்திக்க வேண்டும். அந்த சந்திப்பின் போது உடல், மனம், அறிவு ஆகியவற்றை பயன்படுத்துவதற்காக யோகாசனம், தியானம், விளையாட்டுப் பயிற்சிகள், உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதன் மூலமாக கட்டுப்பாடு நிறைந்த, ஒருங்கிணைந்த, திறமைமிக்க ஒரு சக்தியை நாடெங்கும் உருவாக்க வேண்டும்’ என, ஆசைப்பட்டார்.
அவர் ஆசைப்பட்டபடியே, இந்த 100-வது ஆண்டில் பாரத நாடு முழுதும், 924 மாவட்டங்களில், 1 லட்சத்து 15 ஆயிரத்து 276 கிராமங்களில், ‘ஷாகா’ எனும் இந்த தினசரி பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம், ஸ்வயம்சேவகர்களின் உள்ளத்தில் சுயநலமற்ற சிந்தனையும், நாட்டிற்காக எப்போதும் தொண்டு செய்ய தயாரான மனப்பான்மையும் உருவாக்கப்படுகிறது.
புதுச்சேரி கடற்கரையில்
கடந்த, 1972ம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்தின் அன்றைய தேசிய தலைவர் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது நான், புதுச்சேரி நகரத்தின் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளராகச் செயல்பட்டு வந்தேன்.
அங்கு அரவிந்தர் மகரிஷியின் நுாற்றாண்டு விழா நடைபெற்றது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தேன். காஞ்சி மகா பெரியவர், அடல் பிஹாரி வாஜ்பாய், ஸ்ரீ குருஜி கோல்வால்கர் ஆகியோர் பங்கேற்ற அந்த விழாவில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் குறித்தும், அரவிந்தர் மகரிஷியின் வாழ்க்கை குறித்தும் பெருமையுடன் மேடையில் பேசப்பட்டன.
அரவிந்தர் மகரிஷியின் நுால்களான இந்திய கலாசாரத்தின் அடித்தளம், யோகக் கலையின் முழுமையான கண்ணோட்டம், தேசிய வாழ்க்கையைச் சீரமைப்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டன.
அப்போது, அரவிந்தரின் மனதில் இறை உணர்வு ஆழமாகக் குடியிருந்தது என்பதை விளக்கும் விதமாக, ஸ்ரீ குருஜி குறிப்பிட்ட ஒரு பொன்மொழி, அங்கிருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியதன் காரணமாக, சென்னையின் அமைப்பாளராகப் பொறுப்பேற்று மாற்றப்பட்டேன்.
அதேபோல, ஆர்.எஸ்.எஸ்.,சின் தேசிய தலைவர்களாக விளங்கிய பேராசிரியர் ராஜேந்திர சிங்கும், சுதர்சன் ஜியும் அடிக்கடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து சொற்பொழிவாற்றுவர். அவர்களது ஆங்கிலம் அல்லது ஹிந்தி சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்ப்பது உண்டு.
சமூக மாற்றங்கள்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் தினசரி பயிற்சியின் மூலமாக சமூகத்தில் ஒற்றுமையை உருவாக்குகிறது. இதன் மூலம், சமூக மாற்றங்கள் தானாகவே நிகழ்கின்றன என்பதற்கு என் நேரடி அனுபவங்கள் சான்றாக உள்ளன.
சென்னையை அடுத்த மீஞ்சூர் செல்லும் வழியில் தீயம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரு காலத்தில் தீண்டாமையும், சாராயப் பழக்கமும் தலைவிரித்தாடியது.
அங்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த பிரசாரகர் ஸ்ரீ சிவராம்ஜியும், ஸ்ரீ ஜெயமணியும் சென்று, தினமும் பண்பாட்டு வகுப்புகளை நடத்தினர்; வரலாற்றுக் கதைகளைக் கூறினர்; தேசபக்திப் பாடல்களைப் பாடினர். கோவில் வழிபாட்டையும் ஒருங்கிணைத்தனர்.
படிப்படியாக சூழ்நிலை மாறியது. மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்றனர்; வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் துவங்கினர். ஜாதிய வேறுபாடுகள் அகன்று தீண்டாமை நீங்கியது; குடிப்பழக்கமும் ஒழிந்தது.
ஒரு கிராமத்தில் ஏற்பட்ட இந்தச் சமூக மறுமலர்ச்சியை கேள்விப்பட்டு, மஹாராஷ்டிராவிலிருந்து புகழ்பெற்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே நேரில் வந்து பார்வையிட்டு, சிவராம்ஜி நிகழ்த்திய இந்த மகத்தான மாற்றத்தை பெருமகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள மாடப்பள்ளி என்ற ஊரில் வீரபாகுவும், ஸ்ரீ ஜோதியும் ஆர்.எஸ்.எஸ்., கிளையைத் துவங்கியபோது, அக்கிளையின் ஆண்டு விழாவிற்கு ஊரின் பள்ளி தலைமை ஆசிரியர் அழைக்கப்பட்டார்.
‘நான் நாத்திக இயக்கத்தைச் சேர்ந்தவன்’ என்று அவர் தயங்கியபோதும், அன்புடன் அழைக்கப்பட்டார்.
அங்கு எவ்வித பாகுபாடுமின்றி மாணவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவதையும், பயிற்சி செய்வதையும் பார்த்த அவர், ‘வெவ்வேறு பின்னணி கொண்ட மாணவர்கள், எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக விளையாடி பாடுவதைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். இந்த சமுதாய ஒற்றுமையை இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்., உருவாக்குவது, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது; இப்போது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பெருமையுடன் பார்க்கிறேன்’ என்று மேடையில் நெகிழ்ந்து பேசினார்.
இஸ்லாமிய சகோதரரின் அனுபவம்
இதைபோன்ற மற்றொரு அனுபவமும் எனக்கு உண்டு. நான் ஆர்.எஸ்.எஸ்., சென்னை அமைப்பாளராக செயல்பட்டபோது, நாங்கள் ஒரு ரத்த தான இயக்கத்தை நடத்தி வந்தோம். திறந்த இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பலருக்கும் தேவையான ரத்தத்தை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்து வந்தோம்.
ஒருநாள் காலை, ஒரு இஸ்லாமிய சகோதரர் வந்து, தன் மகளின் சிகிச்சைக்காக ஆறு பாட்டில் ரத்தம் தேவை என கேட்டார்.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆறு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை அனுப்பி ரத்த தானம் வழங்கச் செய்தோம்.
அன்று மாலை மீண்டும் வந்த அந்த இஸ்லாமிய சகோதரர், ‘வெளியில் வெறுப்பு பிரசாரம் பேசுகின்றனர். ஆனால், ஒரு சக மனிதனின் கஷ்டத்தை புரிந்து, நீங்கள் செய்த இந்தத் தொண்டை, என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்’ என்று உருக்கமாகக் கூறினார்.
கடந்த 1992ல் அன்றைய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பூஜனீய ஸ்ரீ பாலாசாஹிப் தேவ்ரஸுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. ஆகஸ்ட் 8 அன்று, சென்னை ஆர்.எஸ்.எஸ்., காரியாலயத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில், 11 பேர் உயிரிழந்தனர்.
தன் கடுமையான உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, நாக்பூரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார்.
அவரை சக்கர நாற்காலியில் பார்த்த விமானப் பணிப்பெண் ஒருவர், ‘சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்குச் செல்கிறீர்களா’ என்று கேட்டதற்கு, ‘இல்லை; சென்னையில் குண்டுவெடிப்பில் ஸ்வயம்சேவகர்கள் பலியாகினர். எனக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலும், துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது என் கடமையாகும்’ என்றார்.
தலைவரின் இந்த அளப்பரிய அன்பைக் கேட்டு நெகிழ்ந்த அந்த பணிப்பெண், அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தற்போதைய தலைவர் மோகன் பாகவத், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பேசும்போது குறிப்பிட்டது போல, 1996ல் ஹரியானாவின் சார்கி தாத்ரியில் நடந்த விமான விபத்தின்போதும், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரர்களுக்கு விளம்பரமின்றி முதன்முதலில் ஓடிச் சென்று மருத்துவ உதவிகளையும் , உறவினர்களுடைய ஒத்துழைப்போடு இறுதிச் சடங்குகளையும் செய்தவர்கள் ஆர்.எஸ் .எஸ்., ஸ்வயம்சேவகர்களே.
தன்னலமற்ற தொண்டு பணிகள்
இன்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சேவைப் பணிகள் பாரத தேசம் முழுதும் 1 லட்சத்து 29 ஆயிரம் கிராமங்களில் விரிவடைந்து நடைபெற்று வருகின்றன. கல்வி, சுகாதாரம், கலாசாரம், சுயசார்பு போன்ற மக்களின் வாழ்வியல் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு பணிகளை, சங்க ஸ்வயம்சேவகர்கள் செய்து வருகின்றனர்.
சங்க குடும்பத்தைச் சேர்ந்த வித்யா பாரதி, சேவா பாரதி போன்ற அமைப்புகளும் இத்தகைய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
உலக அளவில் பாரதம் தன் கடமையைச் சிறப்பாகவும், திறம்படவும் செய்ய வேண்டுமென்றால், அதற்கு நம் நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவோடு தர்மத்தில் வேரூன்றிய வாழ்க்கையை வாழ வேண்டும். ஜாதி, மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளை எல்லாம் கடக்க வேண்டும்; நல்லிணக்க உணர்வு மலர வேண்டும்.
சுற்றுச்சூழல் மீது அக்கறை செலுத்துதல், சுதேசி சிந்தனையை வளர்த்தல், குடும்ப ஒற்றுமையைப் பேணுதல், குடிமைப் பண்புகளை பின்பற்றுதல், பொருளாதார ரீதியாக முன்னேறுதல் மற்றும் ஆன்மிகம் நிறைந்த வாழ்க்கை வாழ்வது ஆகியவை, இன்றைய காலக ட்டத்தின் அவசிய தேவைகளாகும்.
அப்போதுதான் பாரத தேசத்தை உலகத்திற்கு முன் ஒரு முன்மாதிரியான வழிகாட்டி நாடாக உயர்த்த முடியும். இத்தகைய மகத்தான சங்கல்பத்துடன் தான், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், தன் 100வது ஆண்டில் விரைந்து செயல்படுகிறது.
மேலும் ஆர்.எஸ்.எஸ்., பற்றி அறிந்து கொள்ள
90250 01343
