பழைய ஓட்டுச்சீட்டா... புதிய இந்தியாவா? தி.மு.க.,வின் தலைகீழான சிந்தனை மாற வேண்டும்
பழைய ஓட்டுச்சீட்டா... புதிய இந்தியாவா? தி.மு.க.,வின் தலைகீழான சிந்தனை மாற வேண்டும்
PUBLISHED ON : அக் 18, 2026 08:46 PM

சமீபத்தில் நடைபெற்ற தி.மு.க., – எம்.பி.,க்கள் கூட்டத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறைக்கு பதிலாக, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
தமிழகத்தில், 2021- சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது. 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட, 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும், ஓட்டுப்பதிவுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டன. ஆனால், 2026 சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களையும், தி.மு.க., 59 இடங்களையும் பெற்றன. இந்த அரசியல் மாற்றத்தின் பின்னணியில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியான, எஸ்.ஐ.ஆர்., தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஒரு தேர்தலில் கிடைத்த வெற்றியை மக்கள் தீர்ப்பாக ஏற்று விட்டு, மற்றொரு தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு, பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கேள்விக்கு உள்ளாக்குவது முரண்பாடாக தோன்றுகிறது. தேர்தலில் தோல்வியடைந்தது மட்டுமே, இயந்திரத்தில் முறைகேடு நடந்ததற்கான சான்றாக அமையாது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அவை ஆதாரங்களுடன் விசாரிக்கப்பட வேண்டும்.
மிகப்பெரிய பணி
கடந்த, 1982-ல், கேரளாவின் பரூர் தொகுதியில் பரிசோதனை முறையில் தொடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு, 2004-ல் நாடு முழுதுமான லோக்சபா தேர்தலுக்கு விரிவடைந்தது. 2019 லோக்சபா தேர்தலில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ‘விவிபேட்’ எனப்படும், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தடம் பயன்படுத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம், பல கோடி மக்களின் ஓட்டுகளை பதிவு செய்து, தொகுதி வாரியாக முடிவுகளை அறிவிக்கும் மிகப்பெரிய பணியை மேற்கொள்கிறது. இத்தகைய அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, நிர்வாகத் திறனை காட்டுகிறது. அந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம்; ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அதை முழுமையாக நிராகரிப்பது தீர்வாகாது.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் தொடர்வது, ஒரே நபரின் பல பதிவுகள் இருப்பது, இடம் பெயர்ந்தவர்களின் விபரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருப்பது போன்ற சிக்கல்களை சரி செய்வது அவசியம். அதற்காகவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், பட்டியலை துல்லியப்படுத்துவது என்ற பெயரில், தகுதியுள்ள குடிமகனின் பெயர் தவறுதலாக நீக்கப்படக்கூடாது. உரிய அறிவிப்பு, ஆட்சேபனை, திருத்தம், மேல்முறையீடு போன்ற வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். எத்தனை பெயர்கள் நீக்கப்பட்டன என்பது மட்டுமே வெற்றியின் அளவுகோல் அல்ல; தகுதியுள்ள அனைவரின் ஓட்டுரிமையும் பாதுகாக்கப்பட்டதா என்பதே முக்கியம்.
எஸ்.ஐ.ஆரு-க்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருந்தால், அவை உரிய தரவுகளுடன் முன்வைக்கப்பட வேண்டும். அதேபோல, தேர்தல் ஆணையமும் தன் நடவடிக்கைகளுக்கான காரணங்களையும், நடைமுறைகளையும் வெளிப்படையாக விளக்க வேண்டும். வாக்காளர் பட்டியலின் துல்லியமும், குடிமகனின் உரிமையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; இரண்டையும் ஒரு சேர பாதுகாப்பதே ஜனநாயகத்தின் கடமை.
வாக்காளர் பட்டியல் சரியாக இருப்பதும், ஓட்டுப்பதிவு பாதுகாப்பாக நடைபெறுவதும், ஓட்டு எண்ணிக்கை முறையாக சரிபார்க்கப்படுவதும் ஒன்றுக்கொன்று துணையான அம்சங்கள். ஒன்றை வலுப்படுத்துவதற்காக, மற்றொன்றை பலவீனப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இளம் தலைமுறை
இந்தியா இன்று செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், தரவு சார்ந்த நிர்வாகம் என, பல துறைகளில் முன்னேறி வருகிறது. குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையானது வேகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை இயல்பான எதிர்பார்ப்புகளாக கொண்டுள்ளது.
இத்தகைய சூழலில், தேர்தல் முறைகளில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை திருத்த வேண்டும்; பாதுகாப்பு அம்சங்கள் போதவில்லை என்றால் மேம்படுத்த வேண்டும். ஆனால், தொழில்நுட்பம் தொடர்பான ஒவ்வொரு விவாதத்திற்கும் தீர்வாக, பழைய முறைக்கு திரும்புவதை முன்வைப்பது, முன்னேற்றத்திற்கான அணுகுமுறையாகாது.
அரசியல் கட்சிகள் மக்களின் மாறி வரும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, தங்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை புரிந்து கொள்ளாமல், பழைய நடைமுறைகளையே மீண்டும் கொண்டு வர முயல்வது, எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையாக இருக்க முடியாது.
‘பழையன புகுதலும் புதியன கழிதலும்’ என்ற தலைகீழான சிந்தனை, தி.மு.க.,வின் மூத்த தலைமுறையினர் முன்னிறுத்தும் அரசியல் உத்தியாக இருக்கலாம்; ஆனால், அது காலத்தின் தேவைக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இது, ஒரு கட்சியின் வயதை பற்றிய விமர்சனம் மட்டுமல்ல; மாறி வரும் காலத்திற்கேற்ப அரசியல் சிந்தனையை புதுப்பித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் கருத்தாகும்.
உலகம் தொழில் நுட்பத்தின் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, அரசியல் மட்டும் பழைய பாதைக்கு திரும்புவது முன்னேற்றமல்ல. புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, புதிய சவால்களுக்கு புதிய தீர்வுகளை உருவாக்குவதே காலத்தின் கட்டாயம்.
காலத்திற்கேற்ப மாறுவதே வளர்ச்சி; குறைபாடுகளை திருத்துவதே முன்னேற்றம்; புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிந்திப்பதே நவீன அரசியல். புதிய இந்தியா எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது. அரசியலும் அதனுடன் பயணிக்க வேண்டும்; சொற்ப சுயலாபத்திற்காக கடந்த காலத்திற்கு திரும்புவதில் பெருமை காணக்கூடாது.
– இரா.அர்ஜுனமூர்த்தி
