துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு!
துணைவேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு!
PUBLISHED ON : ஆக 18, 2026 12:00 AM

டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, “கொஞ்சமும் பயமில்லாம இருக்கா ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. “யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“திருப்பூர் மாநகராட்சியில, கான்ட்ராக்டர் ஒருத்தருக்கு பில் தொகை விடுவிக்க லஞ்சம் வாங்கிய ஊழியரை, சமீபத்துல கைது பண்ணிட்டா... இதனால, மத்த அதிகாரிகள், ஊழியர்கள் எல்லாம் திருந்திடுவான்னு பார்த்தா, அவா எந்த பயமும் இல்லாம, 'மாமூல்' வாழ்க்கையை தொடர்ந்து நடத்திண்டு இருக்கா ஓய்...
“குறிப்பா, நகரமைப்பு பிரிவில், 'கட்டிங்' வெட்டாம, எந்த கட்டுமான திட்டங்களுக்கும் அனுமதி தர்றதே இல்லை... இது சம்பந்தமா வர்ற விண்ணப்பங்களை, முடிஞ்ச அளவுக்கு இழுத்தடிச்சு, 'கட்டிங்' வந்த அப்பறம் தான் அனுமதி தரா... அதனால, 'லஞ்ச ஒழிப்பு போலீசார் வேட்டை தொடரணும்'னு, பொதுமக்கள் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“சர்ச்சை இன்ஸ்பெக்டருக்கு, 'ஜாக்பாட்' அடிச்சிட்டுல்லா...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல்னு, 30க்கும் மேற்பட்ட வழக்குகள்ல தொடர்புடையவர், மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளைக்காளி... இவரை கைது பண்ணி, சென்னை புழல் சிறையில அடைச்சிருக்காவ வே...
“இவரை, வழக்கு விசாரணைக்காக வெளியூர் கோர்ட்களுக்கு அழைச்சிட்டு போறப்ப, பணம் வாங்கிட்டு, நிறைய சலுகைகள் தந்ததா ஒரு இன்ஸ்பெக்டர், ரெண்டு போலீசார்னு மூணு பேரை சமீபத்துல, 'சஸ்பெண்ட்' செஞ்சாவ... ஆனா, சில நாட்கள்லயே சஸ்பெண்ட் ரத்தாகி, இன்ஸ்பெக்டருக்கு கோட்டூர்புரம் போக்குவரத்து பிரிவுல பணி ஒதுக்கிட்டாவ வே...
“இப்ப அவரை, மாதவரம் போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் பண்ணியிருக்காவ... நிறைய குடோன்கள் இருக்கிற இந்த ஏரியாவுக்கு, தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்து போகுது வே...
“இதனால, 'மாதவரத்துல வசூலுக்கு பஞ்சமிருக்காது... அதிகாரி காட்டுல பணமழை கொட்டும்'னு, சக போலீசாரே சொல்லுதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“மாரிமுத்து, இதையும் கேட்டுட்டு போங்க...” என்ற அன்வர்பாயே, “திராவிட கட்சிகள் நடைமுறையை பின்பற்ற வேண்டாம்னு சொல்றாங்க பா...” என்றபடியே தொடர்ந்தார்...
“தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகள்ல, பல்கலைக்கழக துணைவேந்தர்களா இருந்த சிலர் ஓய்வு பெற்றாலும், அவங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவாங்க... அந்த வகையில, தென் மாவட்டங்கள்ல இருக்கிற ரெண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்கள், ஓய்வுக்கு பிறகும் பதவி நீட்டிப்புல இருக்காங்க பா...
“இவங்க பதவிக்காலம், இந்த மாச கடைசியில முடிய இருக்கிற சூழல்ல, இவங்களுக்கு மறுபடியும் ஒரு வருஷத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்கப் போறதா தகவல்கள் வெளியாகுது... 'இப்படி ஒருத்தருக்கே பதவி நீட்டிப்பு வழங்குறதால, துணைவேந்தர் பதவி கிடைக்காமலேயே மூத்த பேராசிரியர்கள் ஓய்வு பெறும் சூழல் இருக்கு பா...
“அதனால, 'திராவிட கட்சிகள் ஆட்சியில் நடந்த பதவி நீட்டிப்பு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்'னு, கல்வியாளர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை வச்சிருக்காங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
